முரசொலி தலையங்கம்

நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு.. தமிழ் கூறு நல்லுலகு கொண்டாட வேண்டிய மகிழ்ச்சி : முரசொலி தலையங்கம்!

அமைதிக்கான நோபல் பரிசு தமிழ் வம்சாவளியான நவநீதம் பிள்ளைக்கு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், வாழ்த்து தெரிவித்து முரசொலி தலையங்கம் கட்டுரை வெளியிட்டுள்ளது.

நவநீதம் பிள்ளைக்கு நோபல் பரிசு.. தமிழ் கூறு நல்லுலகு கொண்டாட வேண்டிய மகிழ்ச்சி : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

நவநீதம் பிள்ளைக்கு நல்வாழ்த்து!

முரசொலி தலையங்கம்

13.10.2026

அமைதிக்கான நோபல் பரிசு நவநீதம் பிள்ளைக்கு கிடைத்திருக்கிறது. அமைதிக்கான நோபல் பரிசு யாருக்குக் கிடைத்தாலும் மகிழ்ச்சிதான். நவநீதம் பிள்ளைக்கு கிடைத்திருப்பது கூடுதல் மகிழ்ச்சிக்குரியது. தமிழ் கூறு நல்லுலகு முழுவதும் பெருமிதத்தால் கொண்டாட வேண்டிய மகிழ்ச்சி ஆகும்.

தமிழினத்தைச் சேர்ந்தவர் நவநீதம்பிள்ளை. தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த தமிழ் வம்சாவளி தமிழச்சி தான் நவநீதம் பிள்ளை. உலகளாவிய ஒரு பரிசு தமிழ்வம்சாவளியைச் சேர்ந்த ஒருவருக்குக் கிடைத்திருப்பதை விட மகிழ்ச்சி வேண்டுமா?

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் ஆணையராக செயல்பட்டவர் நவநீதம் பிள்ளை. அப்பொறுப்பை வகித்த காலத்தில் அமைதிக்காக உண்மை- யாக உழைத்ததால் இந்தப் பரிசு அவருக்குத் தேடிப்போய் தரப்பட்டுள்ளது. உலக அமைதி மற்றும் சர்வதேசச் சட்டத்தை மேம்படுத்துவதற்காக மேற்கொண்ட பணிகளைப் பாராட்டி அமைதிக்கான பரிசு அவருக்குத் தரப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இருந்து புலம் பெயர்ந்து தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் வாழ்ந்த எளிய தமிழ்க்குடும்பத்தில் 1941 ஆம் ஆண்டு பிறந்தவர் நவநீதம் பிள்ளை. நாராயணசாமி - சாந்தம்மாள் இணையருக்கு மொத்தம் எட்டு குழந்தைகள். இவர் ஐந்தாவது. சட்டம் படித்தார். நடால் மாகாணத்தில் வழக்கறிஞராக தனது பணியைத் தொடங்கினார். உலகப் புரட்சியாளர்களில் ஒருவராகப் போற்றப்படும் நெல்சன் மண்டேலா சிறையில் இருந்தபோது அவரைச் சந்தித்துப் பேசிய பெருமையும் இவருக்கு உண்டு.

நிறவெறி ஆட்சி முடிவுக்கு வந்த பிறகு 1995 ஆம் ஆண்டு அதிபர் நெல்சன் மண்டேலாவால் நீதிபதியாகவும் இவர் நியமிக்கப்பட்டார். தென்னாப்பிரிக்க உயர்நீதிமன்றத்தில் வெள்ளையர் அல்லாத முதல் பெண் நீதிபதியாக உயர்ந்தார். அத்தோடு மனநிறைவு பெற்றுவிடவில்லை அவர். அங்கிருந்து ஐக்கியநாடுகள் அவைக்கு பணியாற்றச் சென்றார். ஐக்கிய நாடுகள் அவையின் மனித உரிமை களுக்கான உயர் ஆணையராக சென்றார். 2003 முதல் 2014 வரை அங்கு பணியாற்றினார்.

2003 காலக்கட்டம் மிகமிக முக்கியமானது. ஈழத்தமிழர் உரிமைப் போராட்டம் நசுக்கப்பட்டு அவர்களது மரண ஓலம் கொடூரக் குண்டுகளால் அமுக்கப்பட்டு தமிழர் தம் மரண ஓலம் உலகம் முழுக்கக் கேட்ட காலம் அது. எவராலும் அடக்க முடியாத ராஜபக்ஷே கும்பலின் ஆணவத்தை யாராவது அடக்க மாட்டார்களா என்று தமிழர்கள் ஏங்கித் தவித்த அந்தக் காலத்தில் ஐ.நா. அவையில் இருந்தார் நவநீதம் பிள்ளை. மனித உரிமை ஆர்வலராக மட்டுமல்ல, தொப்புள் கொடி அறுத்துக் கொள்ளாத தமிழச்சியாக அவர் செயல்பட்டார். முள்ளிவாய்க்கால்பகுதியில் நடந்தது இனப்படுகொலையே எனச் சொல்லி விசாரணை நடத்த உத்தரவிட்டவர் நவநீதம் பிள்ளை. போர்க்குற்றமே என்ற தீர்ப்பில் உறுதியாக இருந்தார். சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.

போர்க்காலங்களில் நடைபெறும் பாலியல் வன்கொடுமைகளும் போர்க்குற்றமேஎன்றும், இனவெறியைத் தூண்டும் வகையில் எழுதுவதும் போர்க்குற்றமே என்றும் சொன்னவர் இவர்.

போர் முடிந்துவிட்டது என்று இலங்கை அரசு அறிவித்தபோது, போரில் கொல்லப்பட்ட பொதுமக்களுக்கு நீதி கிடைக்க வேண்டாமா என்ற கேள்வியை சர்வதேச அரங்கில் தொடர்ந்து எழுப்பினார்.

2009ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் சிறப்பு அமர்வில் சர்வதேச விசாரணைக் கோரிக்கையை முன் வைத்தார் நவநீதம் பிள்ளை. கடுமையான மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்று குரல் எழுப்பினார். இதனடிப்படையில் விசாரணைக் குழு அமைக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு இக்குழுவின் அறிக்கை வெளியானது. அனைத்து மனித உரிமை மீறல்களும் ஐ.நா. குழுவால் உறுதி செய்யப்பட்டது. இக்குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று நவநீதம் பிள்ளை வலியுறுத்தினார்.

2013ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் நவநீதம் பிள்ளை இலங்கைக்குச் சென்றார். பாதிக்கப்பட்ட மக்களைப் பார்த்தார். தமிழ்ச் சமுதாயத்தைச் சந்தித்து உரையாடினார். துணிச்சலாக கொழும்புவில் பேட்டியும் அளித்தார். 2014ஆம் ஆண்டு பிப்ரவரி 24ஆம் தேதி நவநீதம் பிள்ளை தலைமையிலான ஐ.நா. மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகம் இலங்கை தொடர்பான முக்கிய அறிக்கையை வெளியிட்டது. அதே ஆண்டு மார்ச் மாதம் ஐ.நா. மனித உரிமைகள்பேரவையில் இலங்கை தொடர்பான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. விசாரணை நடத்தும் அதிகாரம் ஐ.நா. மனித உரிமை உயர் ஆணையர் அலுவலகத்துக்கு தரப்பட்டது. உலகின் பல்வேறு நாடுகள் மூலமாக இதைத் தடுக்க முயற்சித்தது இலங்கை. ஆனால் அதை மீறி வென்றார் நவநீதம் பிள்ளை.

தமிழர்களுக்காக வாதாடியதற்காக மட்டும் அவரை பெருமையாக நினைக்கவில்லை. உலக மனிதத்துக்காக உழைத்தார் அவர். தென்னாப்பிரிக்க பெண்களுக்கான உரிமை அமைப்பைத் தொடங்கி நடத்தினார். ருவாண்டாவுக் கான சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தின் நீதிபதியாக இருந்தார். சர்வதேச குற்றவியல் நீதிமன்ற நீதிபதியாகவும் இருந்தார். பாலஸ்தீனத்துக்கான ஐ.நா. விசாரணை ஆணையத்தின் தலைவராக இருந்த போது அங்கு நடந்த மனித உரிமை மீறல்களுக்கு எதி- ராகவும் துணிச்சலாக அறிக்கை கொடுத்தார். பாலினச் சிறுபான்மையினர் உரிமைகளுக்காக 'Frce & Equal' என்ற உலகளாவிய பிரச்சாரத்தைத் தொடங்கினார்.

2012 இலங்கை மீதான போர்க்குற்ற விசாரணை தொடர்பான தீர்மான வாக்கெடுப்பில் இலங்கை அரசை இந்திய அரசு ஆதரிக்கக் கூடாது என்று தலைவர் கலைஞர் அறிக்கை வெளியிட்டார். சென்னையில் தமிழ் ஈழ ஆதரவாளர் கூட்டமைப்பு – டெசோமாநாடு நடைபெற்றது. 'இலங்கைத் தமிழர்கள், அவர்களது அரசியல் தீர்வை அவர்களேமுடிவு செய்யும் உரிமை அவர்களுக்கே வழங்கும் தீர்மானத்தை ஐ.நா. சபையிலும், மனித உரிமை ஆணையத்திலும் கொண்டு வர வேண்டும்' என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. டெசோ மாநாட்டுத் தீர்மானங்களை தலைவர் மு.க.ஸ்டாலின்,டி.ஆர்.பாலு ஆகியோர் அமெரிக்கா சென்று ஐ.நா. பொதுச் செயலாளர் யான் லியாசன்,ஜெனீவா ஐ.நா. மனித உரிமை ஆணையம் தலைவர் நவநீதம் பிள்ளை ஆகியோரிடம் வழங்கினார்கள். வரலாற்றில் பதிவாக வேண்டிய நிகழ்வு இது.

ஈழத்தமிழர்க்கு இன்று வரை நீதி கிடைக்கவில்லைதான். என்றாலும் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை உலக நாடுகளின் கவனத்துக்குக் கொண்டு சென்று, இலங்கையில் நடந்தது போர்க்குற்றமே என்பதை ஐ.நா. அவை வரைச் சொல்ல வைத்தவர் நவநீதம் பிள்ளை.

என்றாவது ஒரு நாள் ஈழத்தமிழர்க்கு நீதி கிடைக்கும் போது எழும் மகிழ்ச்சியே அவருக்கு நோபல் பரிசை விட மிகப்பெரிய பரிசாக அமையும்.

நவநீதம் பிள்ளைக்கு நல்வாழ்த்து!

banner

Related Stories

Related Stories