தமிழ்நாடு

ஆ.. தள்ளு.. தள்ளு.. தள்ளு : நடுரோட்டில் பழுதாகி நிற்கும் வெற்றிப் பயணம் பேருந்துகள் - TVK லட்சணம்!

வெற்றிப் பயணம் திட்டப் பேருந்துகள், அடிக்கடி பழுதாகி சாலையிலேயே நிற்பதாக பயணிகள் குற்றம்சாட்டுகிறார்கள்.

ஆ.. தள்ளு.. தள்ளு.. தள்ளு :  நடுரோட்டில் பழுதாகி நிற்கும் வெற்றிப் பயணம் பேருந்துகள் - TVK  லட்சணம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

த.வெ.க அரசு பெண்களுக்காக அண்மையில் அறிமுகப்படுத்திய வெற்றிப் பயணம் திட்டப் பேருந்துகள் ஒன்று, நடுவழியில் பழுதாகி நின்ற சம்பவம் சென்னையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை திருவொற்றியூர், எண்ணூர் பகுதியிலிருந்து ராயபுரம் மற்றும் சென்ட்ரல் வழியாக திருவான்மியூர் பணிமனை வரை செல்லக்கூடிய மார்க்கத்தில் இந்த புதிய பேருந்து இயக்கப்பட்டது. இன்று எண்ணூர் பகுதியிலிருந்து புறப்பட்ட அந்தப் பேருந்து, திருவொற்றியூர் தேரடிப் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென பழுதாகி நின்றது. ஓட்டுநர் எவ்வளவு முயன்றும் பேருந்தை மீண்டும் இயக்க முடியவில்லை.

இதையடுத்து, செய்வதறியாது திகைத்த ஓட்டுநரும் நடத்துநரும் பேருந்தில் இருந்த பயணிகளைப் பாதுகாப்பாக இறக்கிவிட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போக்குவரத்து போலீஸார், பொதுமக்கள் மற்றும் பயணிகளின் உதவியுடன் பழுதான பேருந்தைத் தள்ளிச் சென்று சாலையின் ஓரமாக நிறுத்தினர்.

பின்னர், இதுகுறித்து சம்பந்தப்பட்ட பணிமனைக்கு (டிப்போ) தகவல் அளிக்கப்பட்டு, அங்கிருந்து வரவழைக்கப்பட்ட மெக்கானிக்குகள் பேருந்தைத் தற்காலிகமாகச் சீரமைத்து பணிமனைக்குக் கொண்டு சென்றனர்.

இச்சம்பவம் காரணமாக அப்பகுதியில் பயணித்த பயணிகள் மட்டுமன்றி, அந்தச் சாலையில் சென்ற பிற வாகன ஓட்டிகளும் கடுமையான போக்குவரத்து நெரிசலில் சிக்கி அவதிக்குள்ளாகினர். பின்னர் போக்குவரத்து போலீஸார் நெரிசலைச் சீர்செய்து போக்குவரத்தைச் சீரமைத்தனர்.

புதிதாகத் தொடங்கப்பட்ட திட்டத்தின் கீழ் இயக்கப்படும் பேருந்துகள் இதுபோன்று நடுவழியில் பழுதாகி நிற்பது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, அரசுப் பேருந்துகளின் முறையான பராமரிப்பை உறுதி செய்து, இதுபோன்ற போக்குவரத்துப் பாதிப்புகள் ஏற்படுவதைத் தவிர்க்கப் போக்குவரத்துத் துறை உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

banner

Related Stories

Related Stories