
டெல்லியில் ஜனநாயகத்தைக் காக்க போராட்டத்தில் ஈடுபடும் இளைஞர்களை அடாவடித்தனமாக பா.ஜ.க அரசு கைது செய்வதைப்போல், தமிழ்நாட்டில் உரிமைக்குரல் எழுப்பி போராடுபவர்களை அடாவடித்தனமாக கைது செய்து வருகிறது த.வெ.க அரசு.
‘கொள்கை எதிரி பா.ஜ.க’ என தேர்தல் பிரச்சாரத்திற்கு பயன்படுத்திய முழக்கத்தை, தற்போது எள் அளவும் நினைவில் நிறுத்தாமல், அடக்குமுறை ஆட்சியை மட்டுமே வெளிப்படுத்தி வருகிறது விஜய் தலைமையிலான அரசு.
அதன் தொடர்ச்சியாக, இன்று (அக்.12) சென்னை ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து நடைபெற இருந்த மருத்துவப் பணியாளர்கள் போராட்டத்தில் கலந்துகொள்ள முற்பட்டபோது, பெண்கள் என்றும் பாராமல் வலுக்கட்டாயமாக இழுத்துச்சென்று கைது செய்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.

இதனைக் கண்டித்து, தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி எம்.பி, தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டது பின்வருமாறு,
“பணிநிரந்தரம் செய்யக் கோரி போராட்டம் நடத்திய மருத்துவப் பணியாளர்களைக் காவல்துறை கைது செய்திருப்பது கண்டனத்திற்குரியது.
தேர்தல் நேரத்தில் வாய்க்கு வந்ததை எல்லாம் வாக்குறுதியாகக் கூறி மக்களை ஏமாற்றிவிட்டு, இன்று அவற்றை நிறைவேற்றக் கோரி மக்கள் போராடினால் ஒடுக்குமுறையை ஏவி அடக்கிக் கொண்டிருக்கிறது இந்த அராஜக அரசு.
விவசாயிகள், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் என இந்த அரசு ஏமாற்றியவர்களின் பட்டியல் நாளுக்கு நாள் நீண்டு கொண்டே போகிறது.
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாமல், போராடுபவர்களைக் காவல்துறையை வைத்துக் கைது செய்தே காலத்தை ஓட்டிவிடலாம், தேர்தல் நேரத்தில் முகத்தைக் காட்டினால் மட்டும் போதும் என்கிற மிதப்பில் இருக்கிறாரா முதலமைச்சர்?
கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்; அவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும்.”






