
தவெக ஆட்சியில் தமிழ்நாட்டின் சட்டம்-ஒழுங்கு மிகவும் கேடுகெட்ட, மோசமான நிலைக்குச் சென்றுவிட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றன.
தவெக நிர்வாகிகள் மீதான பாலியல் புகார்கள், பெண்கள் பாதுகாப்பு ஆகியவற்றில் தமிழ்நாடு அரசு அலட்சியமாக செயல்படுவதாகவும் தொடர் குற்றச்சாட்டுக்கள் எழுந்தவண்ணம் உள்ளது.
இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு தொடர்பான முக்கிய விவரங்கள் இனி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் வழங்கப்படாது என தவெக அரசு புதிய அரசாணை வெளியிட்டு அதிர்ச்சியளித்தது.
அரசாணைப்படி மாணவர்கள், விவசாயிகள், அரசியல் கட்சிகளின் போராட்டங்கள், காவல் மரணங்கள், துப்பாக்கிச்சூடு தொடர்பான அறிக்கைகள் RTI-ன் கீழ் இனி பெற முடியாது. மேலும், சமூக-சாதிய மோதல்கள், போராட்ட வழக்குகளை திரும்பப் பெறுவதற்கான கோரிக்கைகள் உள்ளிட்டவை தொடர்பான தகவல்களையும் RTI-ன் கீழ் பெற முடியாது என தெரிவிக்கப்பட்டது.
தவெக அரசு தனது தவறுகள், முறைகேடுகள் மற்றும் காவல்துறையின் மீதான புகார்களைப் பொதுமக்களிடம் இருந்து மறைக்கவே இந்த அரசாணை வெளியிட்டதாக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், தவெக அரசின் கூட்டணிக் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் என பலரும் கடும் எதிர்ப்பைத் தெரிவித்தனர்.இதனைத் தொடர்ந்து, இந்த அரசாணை திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது தவெக அரசு.
தவெக அரசின் யுக்தியாக இது போன்ற செயல்கள் உள்ளதா? அரசாணையை வெளியிட்டு பின்னர் திரும்பப்பெறுவது இயல்பாக இருந்தாலும் கூட, ஒரு திட்டங்கள் குறித்து சரியான ஆய்வை மேற்கொண்டு அதற்கான அரசாணையை வெளியிடுவதே ஒரு நிர்வாகத்திறன் மிகுந்த அரசாக பார்க்கப்படும். ஆனால், ஒன்றை அறிவித்து அதற்கான எதிர்ப்பைப் பொறுத்து திரும்பப் பெறுவது தவறான முன்னுதாரணம் என கண்டனங்கள் எழுந்துள்ளது.
குறிப்பாக திருவண்ணாமலை மேல்மா கிராமத்தில் சிப்காட்டுக்காக நிலம் கையகப்படுத்தும் அரசாணையை வெளியிட்டுவிட்டு, கடும் எதிர்ப்பு கிளம்பியதும் அதனை திரும்பப்பெற்றது. கடந்த காலங்களில் விவசாயிகளுக்கு ஆதரவாக இருப்பதுபோல நடித்துவிட்டு, ஆட்சிக்கு வந்ததும் அதற்கு நேர்மாறாக செயல்படுவது தவெக அரசின் மிகவும் அற்பத்தனமான செயல் என பொதுமக்கள் கண்டித்து வருகின்றனர்.

இதுமட்டுமில்லை, பரந்தூர் விமான நிலையத் திட்டம், சென்னை பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைப்பதற்கான அரசாணை என அனைத்திலும் இரட்டை நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது தவெக அரசு.
குறிப்பாக பரந்தூர் விமான நிலையத் திட்டம் விவசாயிகளின் நலனில் அக்கறை இருப்பதால் ரத்து செய்தோம் எனக்கூறிவிட்டு, தற்போது அங்கு சிப்காட் தொழிற்சாலை அமைப்பதற்கான திட்டம் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் பட்சத்தில், மீனவர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என தெரிந்தே அல்லது எந்த ஒரு ஆய்வும் செய்யாமல் தான் அரசாணை வெளியிடப்பட்டதா என்ற கேள்வியும் எழுகிறது. இதுகுறித்து பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா பேசுகையில், புதிய தலைமைச் செயலகம் அமைக்கும் இறுதி முடிவை முதலமைச்சர் எடுக்கவில்லை. மீன்வர்களின் பக்கம்தான் முதலமைச்சர் விஜய் இருப்பார் என பேசுகிறார். அப்படியென்றால் ஏன் அரசாணை வெளியிட வேண்டும் என திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
இப்படி அரசின் செயல்திட்டங்கள், முன்னெடுப்புகள் என அனைத்திலும் இரட்டை நிலைப்பாடு என்றால் அரசை நடத்துவது யார்? முதலமைச்சரா? அல்லது வேறு ஏதேனும் சக்திகளா? என்ற கேள்வி எழுகிறது.
அதேபோன்றுதான் தற்போது வெளியிட்டு பின்னர் திரும்பப்பெற்றுள்ள தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் சட்டம், ஒழுங்கு குறித்த சில தகவல்களை பெற விலக்கு என்பதும். இப்படி அனைத்தையும் அறிவித்து பின்னர் திரும்பப்பெறுவது என்பது தவெக அரசிற்கு நல்லதல்ல இதனால் கடும் பின்விளைவுகள் ஏற்படும் என தெரிவித்துள்ளனர்.






