
கேரியரின் உச்சத்தில் இருந்தவரை தரைக்கு இறங்கி வந்து தாராபுரத்தில் முருங்கைக்காய் பறிக்க வைத்தது தி.மு.க.வின் வெற்றிதானே?
கேரியரின் உச்சத்தில் இருந்தவரை ரோட்டில் இறங்க வைத்து தெருவோரக் கடையில் டீ குடிப்பது மாதிரி நடிக்க வைத்ததும் தி.மு.க.வின் வெற்றிதானே?
கேரியரின் உச்சத்தில் இருந்தவரை சகதியில் இறங்கி டிராக்டர் ஒட்டுவது போல நடிக்க வைத்ததும் தி.மு.க.வின் வெற்றிதானே?
ஒரே ஒரு தொகுதிக்குக்குள் அரைமணி நேரம் வந்து மூன்றே மூன்று நிமிடம் கத்தி விட்டு ஓடியவரை நான்கு நாட்கள் அலையாக அலைய வைத்ததும் தி.மு.க.வின் வெற்றிதானே?
ஐந்து நிமிடம் பேசினாலே தி.மு.க.வை கொத்து புரோட்டா போட்டுவிடுவார் என்று சொல்லப்பட்டவரை ஆள் இல்லாத கிராமங்களுக்குள்ளும் அலைய விட்டதும் தி.மு.க.வின் வெற்றிதானே?
ஐம்பதாயிரம் வித்தியாசம் வரும் என்று சொன்னார்கள் சில அமைச்சர்கள். 'இல்லை, ஒரு லட்சம் தாண்டி விடும்' என்றார்கள் சில அமைச்சர்கள். இவர்களது ஆசையை நிராசை ஆக்கியது தி.மு.க.வின் வெற்றிதானே? தாராபுரத்தில் 9 ஆயிர-மும், மதுராந்தகத்தில் 19 ஆயிரமும்தான் த.வெ.க. கூடுதல். தாராபுரத்தில் வெற்றி பெறுவோமா என்று கடைசி வரைக்கும் விஜய்யை பதற்றத்தில் வைத்திருந்ததும் தி.மு.க.வின் வெற்றிதானே?
'No officials movements - Halt at Residence' என்று அறிவித்துவிட்டு வீட்டுக்குள் முதலமைச்சரை பதுங்க வைத்ததும் தி.மு.க.வின் வெற்றிதானே?
'தி.மு.க. அவ்வளவுதான். இத்தோடு முடிந்து விட்டது' என்று கனைத்தார்களே பல மந்திரிகள். மதுராந்தகத்தில் போட்டியிட்ட பரந்தாமன் வாங்கிய வாக்குகள் 54,003. தாராபுரத்தில் போட்டியிட்ட சுகன்யா வாங்கிய வாக்குகள் 57,370. என்றால் இதுவல்லவா திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாபெரும் வெற்றி?

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சட்டமன்றத்தில் என்ன சொன்னார்? 'தி.மு.க. வாங்கி இருக்கும் வாக்குகளில் 15 விழுக்காடு அவர்களது கூட்டணிக் கட்சிகளின் வாக்குகள் தான். அவர்கள் மட்டும் இல்லை என்றால் தி.மு.க. எந்தத் தொகுதியிலும் டெபாசிட் வாங்கி இருக்காது' என்று கனைத்தார்.
என்ன நடந்திருக்கிறது மதுராந்தகத்திலும் தாராபுரத்திலும்? காங்கிரஸ் இல்லாமல், இந்தியக் கம்யூனிஸ்ட் இல்லாமல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் இல்லாமல், விடுதலைச் சிறுத்தைகள் இல்லாமல், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் இல்லாமல், ம.தி.மு.க. இல்லாமல் தி.மு.க. 30 விழுக்காட்டுக்கு மேல் வாங்கி இருப்பதுதானே தி.மு.க.வின் மாபெரும் வெற்றி?
'தி.மு.க. தனித்துப் போட்டியிட்டு இவ்வளவு வாக்குகளை எப்படி வாங்கியது?' என்று கோட்டையில் ஆலோசனை நடந்ததாமே? இதுதானே தி.மு.க.வின் வெற்றி?
'தி.மு.க. டெபாசிட் வாங்காது' என்று முதலமைச்சரை சிலர் நம்ப வைத்துள்ளார்கள். அதில் மண்ணைப் போட்டது தி.மு.க.வெற்றிதானே?
விஜய் விட்ட அறிக்கையில் மகிழ்ச்சியே இல்லையே, ஏன்? இதுதானே தி.மு.க.வின் வெற்றி?
'வாக்குக்குக் காசு கொடுக்காமல் ' என்பதை திரும்பத் திரும்பச் சொல்கிறார் விஜய். இரண்டு தொகுதியிலும் எவ்வளவு காசை த.வெ.க. இழந்துள்ளது என்பது விஜய்க்கும் அவரது அமைச்சர்களுக்கும் தெரியும். 'அதிகமாக பணம் கொடுக்கிறது த.வெ.க.' என்று சொன்னது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி. 'ஜிபே மூலம் பணம் கொடுக்கிறது த.வெ.க.' என்று சொன்னது இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி.
'ரூ.5 ஆயிரம் விஜய் கட்சியில் இருந்து எனக்கு கொடுத்துள்ளார்கள். 'என்று புக்கத்துறை என்ற ஊரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி ஒருவரிடம் வாக்காளர் ஒருவர் சொல்லி இருக்கிறார். 'வீட்டுக்கா? ஒரு ஆளுக்கா?' என்று அந்த நிர்வாகி கேட்கிறார். 'ஒரு ஆளுக்கு ரூ.5 ஆயிரம் கொடுத்துள்ளார்கள்' என்று அந்த வாக்காளர் சொல்லி இருக்கிறார். இதை நான் நிரூபிப்பேன் என்கிறார் மார்க்சிஸ்ட் நிர்வாகி. விஜய்க்கு இது கேவலம் இல்லையா? இதுதான் விஜய்யின் தோல்வி!

'ஐந்து மாத காலம் நான் நல்லாட்சி கொடுத்துள்ளேன், அதனால் எனக்கு மக்கள் வாக்களித்தார்கள்' என்று விஜய் சொல்ல முடியாததுதான் அவரது தோல்வி!
விஜய் தன்னை நம்பவில்லை. தாராபுரம் சத்தியபாமாவின் கண்ணீரைத்தான் நம்பினார். அழவைத்து ரீல்ஸ் எடுத்தார். இதுவே அவருக்கு பெரிய தோல்விதானே?
விஜய் கட்சி தாராபுரத்தில் அதிக வாக்குகள் வாங்கி வெற்றி பெற்றதற்கு என்ன காரணம் என்பதை நாளிதழ்கள் எழுதி இருக்கின்றன. விஜய் நல்லாட்சி கொடுத்துவிட்டார், அவரது ஆட்சியில் ஏராளமான திட்டங்கள் வந்துவிட்டன, அவர் மீது மக்-கள் பெரிய நம்பிக்கை வைத்துள்ளனர் என்று எந்தப் பத்திரிக்கையும் எழுதவில்லை. இதுவே அவரது தோல்வி தானே?
கேவலமான தந்திரத்தை விஜய் செய்தார். ‘எந்தக் கட்சிக்கும் ஆதரவு இல்லை’ என்று சொன்ன பா.ம.க. ஆதரவு தங்களுக்கு இருப்பதாக படம் காட்டினார்கள். பா.ம.க. கொடி விஜய் நகர்வலத்தில் காட்டப்பட்டது. 'சௌமியா அன்புமணி அமைச்சராகப் போகிறார்' என்று பொய்ச்செய்தி பரப்பினார்கள். அதாவது விஜய் தன்னை நம்பவில்லை. ‘மற்றும் பலரைத்தான் நம்பினார்’. இது அவரது தோல்விதானே?
'த.வெ.க. -பா.ம.க. கூட்டணி உருவாகி சௌமியா அன்புமணிக்கு அமைச்சர் பதவி கிடைக்கக் கூடும் என்ற தகவல் வலுத்ததாலும் வன்னியர் வாக்கு அப்படியே த.வெ.க.வுக்கு மடைமாற்றமாகி உள்ளது' என்று 'தினமணி' (10.10.2026) எழுதி இருக்கிறது. விஜய் தன்னை நம்பவில்லை. பா.ம.க.வைத் தான் நம்பி இருக்கிறார் என்பது தோல்விதானே?
'சௌமியா அன்புமணி அமைச்சராகும் தகவலால் த.வெ.க.வுக்குச் சென்ற வாக்குகள்' என்று 'இந்து தமிழ் திசை' (10.10.2026) நாளேடு எழுதி இருக்கிறது. 'மதுராந்தகம், தாராபுரத்தில் பா.ம.க.வின் வாக்குகள் த.வெ.க. வேட்பாளருக்கு சென்றுள்ளது' என்று பா.ம.க. நிர்வாகி ஒருவர் ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்துள்ளார் என்றும் அந்த நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது விஜய்யின் தோல்விதானே?
பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மை பெற முடியவில்லை விஜய்யால். தி.மு.க. கூட்டணியில் வென்றவர்களுக்கு அமைச்சர் பதவிகள் கொடுத்து இரவல் முதலமைச்சர் நாற்காலியைப் பெற்று உட்கார்ந்து இருக்கிறார். இப்போதும் பா.ம.க.வுக்கு அமைச்சர் பதவி தரப்போவதாகச் சொல்லி ஏமாற்றி வாக்குத் திருட்டு செய்துள்ளார். இதுவும் விஜய்யின் தோல்விதானே?
இவை அனைத்தையும் மொத்தமாகச் சேர்த்து திராவிட நாயகன் - தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், ‘தி.மு.க.வைப் பொறுத்தவரையில் தோல்வியில் வெற்றி அடைந்துள்ளது. த.வெ.க. வெற்றியில் தோல்வி அடைந்துள்ளது’ என்று மிகச் சரியாகச் சொல்லி இருக்கிறார். இதற்குள் அனைத்தும் அடங்கி இருக்கிறது.






