
முரசொலி தலையங்கம் (08-10-2026)
படிவம் 6 - தான் காரணம்!
தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் படிவம் -6இல் செய்துள்ள திருத்தத்தை நாங்கள் அங்கீகரிக்கவில்லை என்று உச்சநீதிமன்றம் இப்போது சொல்லி இருக்கிறது. இப்போது சொல்லி என்ன பயன்? சதிகரமான தேர்தல்கள் தான் நடந்து முடிந்து விட்டனவே!
தேர்தல்களில் தான் பிரச்சினைகள் வரும் என்றால் இந்தியாவைப் பொறுத்தவரையில் தேர்தல் ஆணையர்களே பிரச்சினைக்கு உரியவர்கள் ஆனார்கள். அதிலும் தலைமைத் தேர்தல் அதிகாரியாக ஞானேஷ்குமார் நியமிக்கப்பட்டது முதல் அவரைச் சுற்றியம், அவரால் உருவாக்கப்படும் பிரச்சினைகள் தான் அதிகம். தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் குமாருக்கு நாங்கள் சொன்ன ஆலோசனைகள் எதையும் அவர் கேட்காமல் தன்னிச்சையாக நடந்து கொண்டார் என்று மற்ற இரு தேர்தல் ஆணையர்களும் சொல்ல விவகாரம் இப்போது இந்தியா முழுவதும் வெடித்துள்ளது.
இதை வைத்து ஞானேஷ்குமாருக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் சைலேந்திர மணி திரிபாதி என்பவர் பொதுநல வழக்குத் தாக்கல் செய்துள்ளார். இரண்டு தேர்தல் ஆணையர்களின் எதிர்ப்பை மீறி தலைமைத் தேர்தல் ஆணையர் நடந்து கொண்டுள்ளார். இதில் மிக முக்கியமானது படிவம் 6 பிரச்சினை ஆகும். படிவம் 6 இரண்டு ஆணையர்களின் எதிர்ப்பை மீறி திருத்தப்பட்டுள்ளது. சட்டத் திருத்தம் செய்து திருத்த வேண்டியதை தன்னிச்சையாக இணையத்தில் திருத்தி இருக்கிறார்கள். பெற்றோர் விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. முந்தைய திருத்தம் தொடர்பான நிபந்தனைகளும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இரண்டு தேர்தல் ஆணையர்கள் ஒப்புதல் இல்லாமல் ஞானேஷ்குமார் இதைச் செய்துள்ளார். இவை அனைத்தும் சட்ட விரோதமானது. எனவே ஞானேஷ்குமார் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது. இதே போல் பாட்னாவைச் சேர்ந்த ராகேஷ் குமார் சிங் என்பவரும் மனு தாக்கல் செய்துள்ளார்.
இந்த இரு வழக்குகளும் உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜோய்மால்யா பாக்சி, மோகனா அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணையின் போது நீதிபதிகள் சொன்ன ஒரு கருத்து அதிர்ச்சிக்குரியதாக இருக்கிறது.
”தேர்தல் ஆணையம் பயன்படுத்தும் படிவம் 6 இல் செய்யப்பட்டுள்ளஎந்த மாற்றத்தையும் நாங்கள் அங்கீகரிக்க வில்லை. இதை இந்த நீதிமன்றம் தெளிவுபடுத்துகிறது. இது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கம் அளிக்க வேண்டும். அவர்கள் விளக்கம் அளித்த பிறகு, அதை மாற்றியது யார் என்பதைக் கண்டுபிடிப்போம்” என்று நீதிபதிகள் சொல்லி இருக்கிறார்கள்.
SIR நடைமுறையின் கீழ் வாக்காளர் பட்டியலில் இணைய வழியில் பெயர் சேர்க்கும் புதிய வாக்காளர்கள் தங்களது பெற்றோரின் SIR தகவல்களையும் சேர்க்க வேண்டும் என்று விதி சேர்க்கப்பட்டது. 2025 ஜூலை மாதம் இந்த திருத்தம் செய்யப்பட்டது. இந்த தகவல்களைப் பெறுவது சாதாரணமான விஷயம் அல்ல. அனைவருக்கும் இந்த தகவல்கள் கிடைக்காது. இந்த தகவலைச் சேர்க்க முடியாமல் போனதால் தான் கொத்துக்கொத்தாக பலரது பெயர்களை சேர்க்க முடியாமல் போனது. இந்த திருத்தம் கூடாது என்று தான் தேர்தல் ஆணையர்களான விவேக் ஜோஷி, சுக்பீர் சிங் சாந்து ஆகிய இருவரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள். ஆனால் அதை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மதிக்கவில்லை.
20 மாநிலங்களில் SIR பணிகள் நடந்துள்ளன. இதுவரை 13 கோடி பேர் பெயர்கள் நீக்கப்பட்டுள்ளது. இவை அனைத்தும் மீண்டும் கேள்விக்குரியதாக ஆகிறது. SIR நடவடிக்கைகளுக்குப் பிறகு நாடாளுமன்றத் தேர்தல் நடந்துள்ளது. தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தலும் நடந்துள்ளது. இந்த முடிவுகளும் நியாயமான, மக்கள் முடிவுகள் தானா என்பதும் கேள்விக்குரியது ஆகும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் எத்தகைய மோசடியைச் செய்துள்ளார் என்பது இதன்மூலம் தெரிய வந்துள்ளது. எதைக் கேட்டாலும், 'உச்சநீதிமன்றமே சொல்லி விட்டது, அங்கீகரித்து விட்டது' என்று சொல்லி வந்தார் ஞானேஷ்குமார். ஆனால், ‘படிவம் 6 திருத்தத்தை அங்கீகரிக்க வில்லை' என்று உச்சநீதிமன்றமே சொல்லி விட்டது.

படிவம் 6 இல் செய்யப்பட்ட திருத்தத்தை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளதாக கடந்த மாதம் செப்டம்பர் 26 ஆம் தேதி அன்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. ”வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தப் பணிக்கான படிவம் 6 இல் இணைக்கப்பட்ட உறுதிமொழி உச்சநீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
SIR இல்லாத காலங்களில் வாக்காளர் பதிவு விதிகள் 1968 இன் படி பழைய படிவங்களே பயன்படுத்தப்படும்” என்று செப்டம்பர் 6 அன்று தேர்தல் ஆணையம் சொல்லி இருக்கிறது. அப்படியானால் திட்டமிட்டு தேர்தல் ஆணையம் பொய் சொல்லி இருக்கிறது.
‘“ஆன்லைன் படிவம் 6 இல் சட்டவிரோத மாற்றத்தைச் செய்ய டி.சி.எஸ். நிறுவனத்துக்கு தேர்தல் ஆணையத்தில் யார் உத்தரவிட்டது? அவர்கள் அவ்வாறு செய்ய அழுத்தம் கொடுக்கப்பட்டதா?” என்று காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி எழுப்பி உள்ள கேள்வியும் மிகமிக முக்கியமானது. உச்சநீதிமன்றம் இதையும் விசாரிக்க வேண்டும்.
திட்டமிட்டு ஞானேஷ்குமார் படிவம் 6-ஐ சட்டவிரோதமாக மாற்றி இருக்கிறார். தேர்தலையே குற்றச்சம்பவமாக மாற்றி இருக்கிறார் ஞானேஷ்குமார். இதை விட சட்டவிரோதம் இருக்க முடியாது. எந்தவித மிகப்பெரிய தண்டனைக்கும் அவர் பொருத்தமானவரே ஆவார். உச்சநீதிமன்றத்திடம் இருந்து மக்கள் எதிர்பார்ப்பதும் அதுதான்.
தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க உச்சநீதிமன்றம் மறுத்து விட்டாலும், அவர் இதுவரை பிறப்பித்த அனைத்து உத்தரவுகளும் ஆய்வு செய்யப்படும் என்று சொல்லி இருக்கிறது. சட்டத்- தின் அடிப்படையில் எடுக்கப்படாத முடிவுகளை ரத்து செய்வோம் என்றும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் சொல்லி இருப்பது வரவேற்கத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் தவறான முடிவுகளால் நடத்தப்பட்ட தேர்தல் முடிவுகளை என்ன செய்யப் போகிறீர்கள் என்பது தான் மிகமிக முக்கியமான கேள்வி ஆகும். தவறான முடிவுகளால் தவறான மனிதர்கள் ஆட்சியைக் கைப்பற்றி இருப்பதற்கும் முடிவு கட்டியாக வேண்டும்.
ஒரு ஞானேஷ்குமார் மீது நடவடிக்கை எடுப்பதால் மட்டும் இப்பிரச்சினைக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியாது. வைத்து விடக் கூடாது. ஞானேஷ்குமார் எடுத்த நடவடிக்கைகளின் விளைவுகளையும் விசாரணை செய்தாக வேண்டும்.






