முரசொலி தலையங்கம்

“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!

தவெக 100 ஆட்சியில் நிகழ்த்தப்பட்ட 18 சாதனைகள் என விளம்பரம் கொடுத்துள்ள நிலையில், அது 18 சாதனைகள் இல்லை பதினெட்டும் ஓட்டைகள் என முரசொலி தலையங்கம் விமர்சித்துள்ளது.

“தவெக 100 நாள் ஆட்சி.. 18 சாதனைகள் இல்லை..பதினெட்டும் ஓட்டைகள்” : முரசொலி தலையங்கம் விமர்சனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

முரசொலி தலையங்கம்!

19.08.2026

ஒரு விளம்பரத்தில் 18 ஓட்டைகள்!

நூறு நாள் ஆண்டு விட்டாராம் முதலமைச்சர் விஜய். அதைக் கொண்டாட அனைத்து நாளிதழ்களிலும் முழுப் பக்க விளம்பரங்கள். இங்கே பார்த்தால் போதாது என்று கர்நாடகம் வரைக்கும் விளம்பரங்கள்.

18 சாதனைகளை அடுக்கி இருக்கிறார்கள். பதினெட்டும் ஓட்டைகள்.

1. சிங்கப் பெண் அதிரடிப்படை என்பது தி.மு.க. ஆட்சியில் செயல்பட்ட பிங்க் பேட்ரோல் (Pink Patrol) தான். அந்தத் திட்டத்தை ஸ்டிக்கர் ஒட்டி சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை என மாற்றினார்கள். இந்த படைக்காக புதிதாக காவலர்களை எடுக்காமல் ஏற்கெனவே உள்ள காவலர்களை இந்த படையில் சேர்த்து மறுபெயர் இட்டிருக்கிறார்கள்.

2. போதைப் பொருளை ஒடுக்குவதற்கான சிறப்பு அதிரடிப்படையும் கடந்த தி.மு.க. ஆட்சியில் இருந்தது தான். தமிழ்நாட்டில் போதைப் பயன்பாட்டை முற்றிலும் ஒழிக்க திராவிட மாடல் அரசால் கொண்டு வரப்பட்ட திட்டம், 'போதைப் பொருட்கள் இல்லாத தமிழ்நாடு' என்ற திட்டமாகும். இத்திட்டம் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் நாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால தொடங்கி வைக்கப்பட்டது. இதையே இவர்களும் அறிவித்திருக்கிறார்கள்.

3. மின் கட்டணத்தில் 200 யூனிட் வரை கட்டணமில்லை என்ற அறிவிப்பு மிகமிக மோசடியானது. இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு 200 யூனிட் வரை மின்சாரத்துக்குக் கட்டணமில்லை என்று அரசாணை வெளியிட்டார் விஜய். ஆனால் தேர்தலுக்கு முன்னதாக அவர் வெளியிட்ட அறிக்கையில், தகுதி வாய்ந்த வீடுகளுக்கு ஒவ்வொரு மாதமும் 200 யூனிட் கட்டணமில்லா மின்சாரம் வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. தேர்தல் அறிக்கையில் சொன்னது வேறு வெற்றி பெற்றதற்கு பிறகு செய்தது வேறு.

4. பிறக்கும் அனைத்துக் குழந்தைகளுக்கும் தாய்மாமன் தங்க மோதிரத் திட்டத்தில் பரிசு என்று சொல்லப்பட்டது. இப்போது அரசு

மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகளுக்கு மட்டுமே என்று சுருக்கப்பட்டு விட்டது. நேற்றைய தினம் வெளியான கொள்கை விளக்கக் குறிப்பில் இந்தத் திட்டமே இடம்பெறவில்லை.

5. திருமணம் ஆகும் மணமக்களுக்கு வழங்குவதற்காக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள பணத்தை வைத்து ஆண்டுக்கு 60 ஆயிரத்துக்கும் குறைவானவர்களுக்குத் தான் சீர்வரிசை செய்ய முடியும். நாட்டில் நடக்கும் மொத்த திருமணங்கள் எவ்வளவு?

6. பெருந்தலைவர் காலை உணவுத் திட்ட விரிவாக்கம் என்பது திராவிட மாடல் ஆட்சியின் திட்டத்துக்கு பெயர் மாற்றியது மட்டுமே.

7. நூறு நாளில் 1 லட்சம் கோடி முதலீடு வந்தது என்பதை அமைச்சர் கீர்த்தனாவே இன்னொரு முறை வெளியில் சொல்ல மாட்டார். ஊடகங்களை உள்ளே விடாமல் பூட்டிய ஹோட்டலுக்குள் எதற்காக உலகளாவிய ஒப்பந்தங்கள் போட வேண்டும்?

8. கரும்பு ஒன்றுக்கு ஊக்கத்தொகை வழங்க தி.மு.க. ஆட்சியை விடக் குறைவான நிதியே ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

9. உழவர்களில் 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்திருப்போர் அனைவருக்கும் பயிர்க்கடன் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்று சொல்லி விட்டு இப்போது ஏமாற்றி வருகிறார் விஜய். நாடு முழுவதும் உழவர்கள் போராடி வருகிறார்கள்.

10. மூடப்பட்டதாக அறிவிக்கப்பட்ட மதுபானக் கடைகளில் பெரும்பாலானவை திறந்து இருக்கின்றன. விஜய் ஆட்சிக்கு வருவதற்கு முன்பு இருந்ததை விட பார்களின் எண்ணிக்கை அதிகம் ஆகி இருக்கிறது.

11. ‘கலைஞர் வீடு கட்டும் திட்டம்' வெற்றி வீடு கட்டும் திட்டமாக ஆகி இருக்கிறது.

12. 'உலகம் உங்கள் கையில்' என திராவிட மாடல் ஆட்சியில் தரப்பட்ட கணினிகள், வெற்றி மடிகணினிகள் ஆகி இருக்கிறது.

13. திராவிட மாடல் ஆட்சியின் 'நான் முதல்வன்' திட்டம் ‘வெற்றி திறன் பயிற்சித்' திட்டம் ஆகி இருக்கிறது.

14. நூறு நாள் வேலை வாய்ப்பே கிடைக்காத போது 150 வேலை வாய்ப்பை கொடுத்து விட்டாராம்.

15. தமிழ்நாட்டில் மாணவ, மாணவியருக்கு சைக்கிள் கொடுக்க ஆரம்பித்து 25 ஆண்டுகள் ஆகிவிட்டது. மக்கள் காதில் சைக்கிள் செயினை சுற்றுகிறார் விஜய். சைக்கிளில் வாட்டர் பாட்டில் மாட்டப் போகிறாராம். சைக்கிளில் வீல் இருக்கும், பெல் இருக்கும் என்று சொல்ல வேண்டியது தானே?

16. அனைத்து ஆட்சியிலும் சுகாதாரத்துக்கும், குடிநீருக்கும் சாலைகள் போடவும் பணம் ஒதுக்கத்தான் செய்வார்கள். இதில் என்ன புதுமை?

17. ஆடுகளுக்கு 'வெற்றி ஆடுகள்' என்று பெயர் சூட்டி இருக்கிறார் விஜய். இது அந்த ஆடுகளுக்குத் தெரியுமா எனத் தெரியவில்லை. மகளிருக்கு ஆடுகள் கொடுக்கும் திட்டம் 2011 முதல் நடைமுறையில் இருக்கிறது.

18. வெளிப்படையான நிர்வாகமாம். ஊழல் இல்லையாம். ஜூனியர் விகடன், நக்கீரன் இதழ்களைப் பார்க்கவில்லையா முதலமைச்சர்? குறைந்தது மூன்று மாதத்தில் இரண்டு இதழ்களிலும் 10 அட்டைப்படக் கட்டுரை களாவது ஊழலைப் பற்றி வந்திருக்கும். 'துக்ளக்' இதழும் ஊழல்கள் பற்றி எழுதி இருக்கிறது. ‘ஆடியோ ஆதாரம் இருக்கிறது' என்கிறார் அண்ணாமலை.

‘ஊழல் செய்யக் கூடாது' என்று அமைச்சரவைக் கூட்டத்தில் முதலமைச்சர் எச்சரித்ததாக த.வெ.க. செய்தி துறையே செய்தி பரப்புகிறது. ஊழல் நடப்பதால்தானே முதலமைச்சர் பேசுகிறார்?

banner

Related Stories

Related Stories