
அ.தி.மு.க.வின் உள்கட்சிப் பிரச்சினை குறித்து நாம் ஏதும் சொல்ல விரும்பவில்லை. ஆனால் அந்த பிரச்சினையை தனக்குச் சாதகமாக ஆளும் கட்சியான த.வெ.க. பயன்படுத்திக் கொண்டு குளிர்காய்வது சரியானது அல்ல. அதிலும் குறிப்பாக சபாநாயகர் நடந்து கொண்ட முறை சரியானது அல்ல.
தேர்தலின் போது தி.மு.க.வையும் அ.தி.மு.க.வையும் மிகக்கடுமையாக விமர்சித்தார் விஜய். இரண்டு கட்சிகளும் தங்களுக்குள் கூட்டணி வைத்துக் கொண்டு இன்னொரு கட்சியை வரவிடாமல் தடுப்பதாகச் சொன்னார். அ.தி.மு.க.வை ஊழல் சக்தி என்று சொன்னார் விஜய். எனக்கும் தி.மு.க.வுக்கும் தான் போட்டியே என்று சொன்னார்.
பெரும்பான்மையைப் பெறாத விஜய் என்ன செய்தார்? தி.மு.க. கூட்டணியில் சேர்ந்து வெற்றி பெற்ற கூட்டணிக் கட்சிகளை தன்னோடு இணைத்துக் கொண்டார். தி.மு.க. கூட்டணிக் கட்சிகளின் 13 இடங்களைக் காட்டி தான் ஆட்சி அமைக்கும் பெரும்பான்மை தனக்கு இருப்பதாகச் சொல்லி ஆளுநரிடம் ஆட்சி அமைக்க அனுமதியைப் பெற்றார் விஜய்.
அடுத்து அவர் செய்தது மிகப்பெரிய கேவலமான காரியம் ஆகும். அ.தி.மு.க.வை தனக்குச் சாதகமாக விஜய் உடைத்தார். அவர்களில் 25 பேர் ஆதரவையும் பெற்றார். அவர்களையும் காட்டித் தான் 144 உறுப்பினர் ஆதரவு தனக்கு இருப்பதாக நிரூபித்தார் முதலமைச்சர் விஜய். இப்படி இரவல் கட்சிகளை வைத்துத்தான் முதலமைச்சர் நாற்காலியில் உட்கார்ந்து இருக்கிறார் விஜய்.
அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடா உத்தரவு ( Whip Order ) என்பது த.வெ.க.ஆட்சிக்கு எதிராக வாக்களிக்க வேண்டும் என்பது ஆகும். அதனை மீறிய 25 உறுப்பினர்களை சட்டப்படி தகுதி நீக்கம் செய்திருக்க வேண்டும் சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன். கொறடா உத்தரவை மீறினால் அது கட்சித் தாவல் ஆகும். அரசமைப்பு சட்டத்தின் 10 ஆவது அட்டவணையின் கீழ் பதவி போய்விடும். தனியாகச் செயல்படுகிறவர்கள் கொறடாவை நியமிக்கவும் முடியாது.
எனவே, அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வ கொறடாவைத் தேர்ந்தெடுத்து அனுப்பியதையே சபாநாயகர் ஏற்காமல் இழுத்தடித்துள்ளார். சபாநாயகரின் முதல் தவறு இது. இதில் இருந்தே சபாநாயகரின் உள்நோக்கம் தெளிவாகி விட்டது. அ.தி.மு.க.வின் அதிகாரப்பூர்வமான கொறடாவை ஏற்றுக் கொண்டு விட்டால், கொறடா உத்தரவையும் ஏற்க வேண்டும், கொறடா உத்தரவை மீறியவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சாமர்த்தியமாக தன்னை இப்பிரச்சினையில் இருந்து விடுவித்துக் கொள்வதை போல தந்திரமாக நடந்து கொண்டுள்ளார் சபாநாயகர்.

அ.தி.மு.க. பொதுக்குழுவால் அதிகாரப்பூர்வமாக பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எடப்பாடி பழனிசாமி. அவர் தரப்பில் கொறடாவாக அறிவிக்கப்பட்டவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி. அவரைதான் கொறடாவாக சபாநாயகர் ஏற்றுக் கொண்டு இருக்க வேண்டும். அவரை ஏற்காமல் இருப்பது சபாநாயகரின் தவறு ஆகும்.
அ.தி.மு.க.வைச் சேர்ந்த சிலருக்கு அமைச்சர் பதவி தருவதாகவும், வாரியத் தலைவர் பதவி தருவதாகவும் த.வெ.க. ஆசை வார்த்தைகளைக் கூறிஇருக்கிறது என்று பகிரங்கமாக சபையில் குற்றம் சாட்டினார் எடப்பாடி பழனிசாமி. இந்த நிலையில் அதி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியைப் பேச அழைத்தது சபாநாயகரின் தவறான செயல் ஆகும். கொறடா உத்தரவை கடைப் பிடிப்பதும், கடைப்பிடிக்காமல் போவதும் அவர்களது பிரச்சினை. இதில் சபாநாயகருக்கு என்ன ஆர்வம் வந்தது?
அ.தி.மு.க.வைச் சேர்ந்த 25 பேர் இல்லாவிட்டாலும் த.வெ.க. ஆட்சிக்கு 119 உறுப்பினர் ஆதரவு இருக்கிறது. ஆட்சி எப்படியானாலும் தப்பிப் பிழைத்து விடும். பிறகு ஏன் அ.தி.மு.க.வை பிளவுபடுத்தி, கூடுதல் ஆதாயம் தேட த.வெ.க. நினைக்க வேண்டும்?
எஸ்.பி.வேலுமணி, சி.வி.சண்முகம் என்ற குழுவால் கொறடா என்பதாக அதிகாரப்பூர்வமற்ற முறையில் கொறடாவாக சி.விஜயபாஸ்கர் தேர்ந்தெடுக்கப்பட்டு இருப்பதாக சபாநாயகருக்கு ஒரு கடிதம் தரப்பட்டுள்ளது. அங்கீகாரம் இல்லாத சிலரால் அப்படி ஒருவர் கொறடாவாக தேர்ந்தெடுக்க முடியுமா? அந்தக் கட்சியின் பொதுச்செயலாளர் என்ற பொறுப்பில் இருக்கிறாரா வேலுமணி?
அங்கீகாரம் இல்லாத சிலரால் ஒருவர் கொறடாவாக அறிவிக்கப்பட்டால், அதனை சபாநாயகரால் ஏற்றுக் கொள்ள முடியுமா? விதிமுறைகளில் மிகமிகச் சாதாரணமானது இது. அங்கீகரிக்க முடியாது. ஒரு கட்சியின் அதிகாரப்பூர்வ மானவரால்தான் கொறடாவைத் தேர்ந்தெடுக்க முடியும். இப்படி இருக்கும் போது சபாநாயகர் தவறாகச் செயல்படுவது சரியானது அல்ல.
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தின் முடிவுப்படி அக்ரி கிருஷ்ணமூர்த்தியை தேர்ந்தெடுத்துள்ளோம் என்று சபாநாயகரிடம் ஒரு மனுதரப்பட்டுள்ளது. ஒரு குழுவினர் டாக்டர் விஜயபாஸ்கரை கொறடாவாக தேர்ந்தெடுத்துள்ள தாக சபாநாயகரிடம் மனு தந்துள்ளார்கள். “இந்த இரண்டு மனுக்களையும் பரிசீலித்து வருகிறேன். விரைவில் ஆய்வு செய்யப்பட்டு உரிய முடிவுகள் எடுக்கப்படும்” என்று சபாநாயகர் ஜே.சி.டி.பிரபாகரன் சொல்லி இருக்கிறார். ‘விரைவில்’ என்றால் எப்போது? இந்த பிரச்சினையே வாக்களிப்பதற்கு முன் தீர்த்திருக்கவேண்டியது ஆகும். 'அ.தி.மு.க.வில் இரண்டு கொறடா மனுக்கள் வந்துள்ளதால், நம்பிக்கை அளிக்கும் தீர்மானத்தை ஒத்தி வைக்க வேண்டியதாக இருக்கிறது' என்றல்லவா சரியான சபாநாயகராக இருந்தால் செய்திருப்பார்.
ஒரு சிலரால் கொறடாவைத் தேர்ந்தெடுக்க முடியாது என்பது வேலுமணி குழுவுக்குத் தெரியும். அதனால்தான், 'எங்களுக்கும் இப்போதும் எடப்பாடி பழனிசாமிதான் பொதுச்செயலாளர்' என்று அவர்கள் சொல்லி வருகிறார்கள்.
அசிங்கமான காமெடி என்னவென்றால், த.வெ.க. யாருடைய ஆதரவை பெற்றுள்ளது?
'நாங்கள் தி.மு.க. கூட்டணியில் தொடர்கிறோம்' என்ற கட்சிகளின் ஆதரவைப்பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
‘எங்களுக்கும் எடப்பாடி பழனிசாமி தான் பொதுச்செயலாளர்' என்று சொல்லும் அ.தி.மு.க. உறுப்பினர்கள் சிலரின் ஆதரவைப் பெற்று ஆட்சி அமைத்துள்ளது.
ஆனால், பெயர் த.வெ.க. ஆட்சி. பார்ப்போம் எவ்வளவு காலம் போகிறது என்று!






