
முரசொலி தலையங்கம்
15.05.2026
எப்போதும் சரியும் அரசு!
பெரும்பான்மையை நிரூபித்து விட்டதாக முதலமைச்சர் விஜய் மகிழ்ச்சி அடையக் கூடாது. எப்போதும் சரியும் அரசு தான் இது.
தமிழ்நாடு சட்டமன்றம் என்பது 234 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்டது. 118 உறுப்பினர்களைக் கொண்ட கட்சி தான் ஆளும் கட்சியாக அமர முடியும். த.வெ.க. 118 இடங்களைக் கைப்பற்றி ஆட்சி அமைக்கும் பெரும்பான்மையைப் பெறவில்லை. 108 இடங்களைத் தான் வென்றது. அக்கட்சியின் தலைவர் ஒரு இடத்தில் போட்டியிட்டால் தோற்றுவிடுவோமோ என்று பயந்து இரண்டு இடங்களில் போட்டியிட்டார். இரண்டிலும் வென்றதன் அடிப்படையில் ஒன்றில் இருந்து தனது பதவியை விலக்கிக் கொண்டு விட்டார். இதனால் த.வெ.க.வின் பலம் 107 ஆனது.
திருப்பத்தூர் தொகுதியில் 1 வோட்டில் தான் த.வெ.க. வென்றது. இது தொடர்பாக தி.மு.க. சார்பில் முன்னாள் அமைச்சர் பெரியகருப்பன் வழக்கு போட்ட நிலையில் திருப்பத்தூர் உறுப்பினரை வாக்களிக்கத் தடை செய்துள்ளது சென்னை உயர்நீதிமன்றம். எனவே த.வெ.க. எண்ணிக்கை 106 ஆனது. சபாநாயகர் நாற்காலியில் இருப்பவர் வாக்களிக்க முடியாது. எனவே, த.வெ.க.வின் பலம் சபையில் இப்போது 105 தான்.
118 இருக்க வேண்டிய சபையில் 105 தான் த.வெ.க.வின் பலம் ஆகும். இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி, இந்தியக் கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் ஆகிய கட்சிகளின் ஆதரவை த.வெ.க. பெற்றுள்ளது. இவர்கள் தங்களது 13 உறுப்பினர்களை ஆட்சி அமைக்க ஆதரவு தந்தார்கள். இவர்கள் த.வெ.க.வுடன் கூட்டணி அமைத்து போட்டியிட்டவர்களா? இல்லை.
தி.மு.க. கூட்டணி ஆட்சிக்கு வர வேண்டும், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும் என்று சொல்லி வாக்குக் கேட்டவர்கள். இவர்களது உறுப்பினர்களை தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க கடன் வாங்கி இருக்கிறார் முதலமைச்சர் விஜய். தனக்கு எதிரான கூட்டணியில் நின்று போட்டியிட்ட கட்சிகளைச் சேர்த்துக் கொண்டு பெரும்பான்மையை அடைந்து விட்டதாகச் சொல்லி ஆளுநருக்கு கடிதம் தந்தார் விஜய்.

கூட்டணி ஆட்சியை அமைப்பதில், கூட்டணிகளின் தயவில் ஆட்சியை அமைப்பதில் தவறு இல்லை. அது தேர்தலுக்கு முந்தியே கூட்டணி அமைந்து, அதே கூட்டணி மக்களைச் சந்தித்து வாக்குகளைப் பெற்று, பிறகு கூட்டணி ஆட்சியை அமைக்கலாம். ஆனால் எதிரெதிர் துருவங்களாக நின்று, மக்களைச் சந்தித்து, விமர்சனங்களை வைத்துவிட்டு, பின்னர் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சி அமைக்க பெரும்பான்மை இல்லாத நிலையில் – எதிர்த்து சண்டையிட்டவர்கள் ஒன்றாகச் சேர்ந்து ஆட்சி அமைப்பது மக்களது எண்ணத்துக்கு மாறானது ஆகும். இதனைத் தான் திருவாளர் விஜய் செய்திருக்கிறார்.
காங்கிரஸ் கட்சி நீங்கலாக இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகியவை தகுதியின் அடிப்படையில் – கொள்கையின் அடிப்படையில் – கோட்பாடுகளின் அடிப்படையில் – ஆளும் கட்சிக்கு ஆதரவைத் தரவில்லை. இன்னொரு தேர்தல் வந்துவிடக் கூடாது – குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது – என்று தான் காரணம் சொல்லி இருக்கிறார்கள். அதாவது வேறு வழியில்லாமல் ஆதரிப்பதாகச் சொல்லி இருக்கிறார்கள். நல்லாட்சி தரும் என்பதற்காக அவர்கள் ஆதரிக்கவில்லை. இவர்களை வைத்துத் தான் பெரும்பான்மையை நிரூபித்துள்ளார் விஜய்.
‘தி.மு.க. கூட்டணியில் இன்னும் தொடர்கிறோம்’ என்று தான் இக்கட்சிகள் சொல்லி இருக்கின்றன. கொள்கை ரீதியாக தி.மு.க. கூட்டணியில் தொடரும் கட்சிகளை, தனது ஆட்சிக்கு முட்டுக் கொடுக்க பயன்படுத்திக் கொண்டுள்ளார் முதலமைச்சர் விஜய். இதில் என்ன பெருமை இருக்கிறது?
இதைவிடக் கொடுமை, ஊழல் சக்திகளாக அவரால் சொல்லப்பட்ட அ.தி.மு.க.வின் ஒரு அணியினர் தயவை நாடியது தான். இதனை எதிர்க்கட்சித் தலைவர் மாண்புமிகு உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்தில் அவருக்கே உரிய பாணியில் கிண்டலாக அம்பலப்படுத்தி விட்டார். ‘புஷ்பா’ படத்தில் முதலில் ஷோபா போகும். பிறகு சி.எம்.போவார்’. இந்தக் கதை தான் இன்றைய விஜய் ஆட்சியின் காட்சி என்று விளக்கி விட்டார் எதிர்க்கட்சித் தலைவர்.

யாருடைய தயவில் தனது நாற்காலியைக் காப்பாற்றி இருக்கிறார் முதலமைச்சர் விஜய்? ஊழலில் ஊறிப்போன அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் தயவில்!
அ.தி.மு.க. ஆட்சி காலத்தில் அமைச்சர்களாக இருந்த ஏழு பேர் மீது தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இவர்கள் தயவோடுதான் தனது பெரும்பான்மையை நிரூபித்துள்ளார்.
முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது ஏராளமான வழக்குகள் விசாரணையில் இருக்கிறது. சாலைகள் அமைப்பதில் முறைகேடுகள் நடைபெற்றதாக வழக்கு, வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக வழக்கு, எல்இடி வாங்கியதில் முறைகேடு நடைபெற்றதாக வழக்கு என லஞ்ச ஒழிப்புத்துறையால் பதிவு செய்யப்பட்டு உள்ளது. கே. பி.அன்பழகன், எம்.ஆர்.விஜயபாஸ்கர், காமராஜ், சி.விஜயபாஸ்கர், கே.சி.வீரமணி ஆகியோர் வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கு விசாரணை நிலுவையில் உள்ளது.
‘’இந்த வழக்குகளில் குற்றம் செய்தவர்கள் பண மோசடி மற்றும் வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்தது, ஊழல் குற்றத்தில் ஈடுபட்டதால் அவர்கள் மீது அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்வதற்கான முகாந்திரம் உள்ளது” என்று தி.மு.க. எம்.பியான கிரிராஜன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்கும் நிலுவையில் உள்ளது.
டாக்டர் விஜயபாஸ்கர் மீது வருமானத்துக்கு அதிகமாக 35.79 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், கே.பி.அன்பழகன் வருமானத்துக்கு அதிகமாக 45.20 கோடி ரூபாய் சொத்து சேர்த்ததாகவும், காமராஜ் மீது வருமானத்துக்கு அதிகமாக 58.44 கோடி சொத்து சேர்த்ததாகவும் வழக்கு பதிவாகி வெவ்வேறு நீதிமன்றங்களில் நடைபெற்று வருகிறது. இதெல்லாம் திருவாளர் விஜய்க்கு தெரியுமா? தெரியும். தெரிந்தே தன்னைக் காப்பாற்றிக் கொள்ள ஊழல் சக்திகளின் உதவியை நாடி இருக்கிறார்.
தன்னை தூயசக்தியாகச் சொல்லிக் கொள்ளும் முதலமைச்சர் விஜய், ஊழல் சக்திகளான இவர்கள் தயவில் தான் ஆட்சியை அமைத்துள்ளார். பெரும்பான்மையை இந்த லட்சணத்தில் தான் நிரூபித்துள்ளார் முதலமைச்சர் விஜய்.






