முரசொலி தலையங்கம்

“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

“ரயில்வே பணியிடங்களை ஒழிப்பதா?” என தலைப்பிட்டு, இந்திய ரயில்வே துறையில் பணியிடங்களை நீக்க நடவடிக்கை எடுத்திருக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசைக் கண்டித்த முரசொலி தலையங்கம்.

“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஆட்சிக்கு வந்ததும் ரயில்வே துறைக்கான தனி நிதிநிலை அறிக்கையை ஒழித்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இப்போது 30 ஆயிரம் ரயில்வே பணியிடங்களை ஒழிக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.

2018 முதல் 92 ஆயிரம் ரயில்வே பணிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 2024–25 ஆம் நிதி ஆண்டிலும் 28 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பணியிடங்கள் ஒழிக்கப்பட்டன. எனவே ரயில்வே துறையில் ஆட்களைக் குறைப்பது தொடர்ந்து நடந்து வரும் விவகாரமே ஆகும்.

இந்திய ரயில்வேயில் 2026–27 நிதியாண்டில் சுமார் 29,608 “Non–Safety” (பாதுகாப்பு அல்லாத) பணியிடங்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஒழிக்கத் திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நாடு முழுவதும் சுமார் 29,608–க்கும் மேற்பட்ட பதவிகள் ரத்து செய்யப்பட உள்ளன.

ரயில்வேயில், பணியாளர்களைக் குறைப்பதன் மூலம் நிர்வாகச் செலவைக் குறைத்து, புதிய தொழில்நுட்பத்தைப் புகுத்துவது இதன் நோக்கம் என்று சொல்லிக் கொள்கிறார்கள்.

ரயில்வே வாரியத்தின் இயக்குநர் அமித் சிங் மெஹ்ரா, அனைத்து மண்டல ரயில்வே பொது மேலாளர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ரயில்வேயின் மொத்த அங்கீகரிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையில் 2 சதவீதத்தை இந்த சீரமைப்பு நடவடிக்கைக்கு உட்படுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்திய ரயில்வேயில் சுமார் 14.80 லட்சம் பணியாளர்கள் உள்ள நிலையில், இந்த 2 சதவீத இலக்கின் கீழ் 29,608 பணியிடங்கள் பாதிக்கப்பட உள்ளன.

இந்தப் புதிய திட்டத்தால் வட இந்திய ரயில்வே (Northern Railways) மிக அதிக அளவில் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. அங்கு மட்டும் சுமார் 3,303 பணியிடங்கள் இந்த மாற்றத்திற்கு உள்ளாகின்றன. இதனைத் தொடர்ந்து:

கிழக்கு ரயில்வே: 2,544 பணியிடங்கள்

மத்திய ரயில்வே: 2,492 பணியிடங்கள்

மேற்கு ரயில்வே: 2,339 பணியிடங்கள்

தெற்கு ரயில்வே: 1,900 பணியிடங்கள்

ஆகியவை அதிக பாதிப்புக்குள்ளாகும் முதல் நான்கு மண்டலங்களாகப் பட்டியலிடப்பட்டுள்ளன.

இவை தவிர, தென் மத்திய ரயில்வே (SCR), தென்கிழக்கு ரயில்வே (SER) மற்றும் கிழக்கு மத்திய ரயில்வே (ECR) ஆகிய மண்டலங்களில் தலா 1,800 முதல் 2,000 பணியிடங்கள் வரை குறைக்கப்பட வாய்ப்பு உள்ளது.

“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

தென்மேற்கு ரயில்வேயில் (SWR) ஒப்பீட்டளவில் குறைவாக 893 பணியிடங்கள் மட்டுமே முறைப்படுத்தப்பட உள்ளன. இது தவிர, ரயில்வேயின் சிறிய பிரிவுகளில் 20 முதல் 217 பணியிடங்கள் வரை குறைக்கப்பட இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு காலாண்டிலும் சீராகச் செய்து முடிக்க வேண்டும் என்று ரயில்வே வாரியம் அறிவுறுத்தியுள்ளது. ரயில்வே வாரியத்தின் செயல்திறன் மற்றும் ஆராய்ச்சி (E&R) இயக்குநரகத்தின் வருடாந்திர புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் இந்த இலக்குகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இந்திய ரயில்வேயில் நாடு முழுவதும் 4 லட்சத்துக்கும் அதிகமான காலிப் பணியிடங்கள் (Non–Gazetted Posts) நிரப்பப்படாமல் உள்ளன. சிக்னல் மற்றும் தொலைத் தொடர்பு, போக்குவரத்துத் துறை ஆகியவற்றில் கணிசமான எண்ணிக்கையிலான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. இதில், சிக்னல் மற்றும் தொலைத்தொடர்புத் துறையிலும் போக்குவரத்துத் துறையிலும் அதிகமான பணியிடங்கள் நிரப்பப்படாமல் உள்ளன. ஊழியர்களே இல்லாமல் ரயில்வே துறையை நடத்த முடியுமா?

நாட்டிலேயே அதிக பணியாளர்கள் கொண்ட துறையாக ரயில்வே இருக்கிறது. குறைந்த செலவில் பாதுகாப்பான பயணம் என்பதால் மக்களின் சிறந்த தேர்வாக ரயில்வே இருக்கிறது. தினந்தோறும் 22 ஆயிரம் ரயில்கள் ஓடுகின்றன. பயணிகள் போக்குவரத்து மட்டுமல்ல, சரக்குப் போக்குவரத்தும் அதிகமாகி வரும் சூழலில் பணியாளர்களைக் குறைக்கும் செயலைச் செய்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு.

ரயில்வே துறைக்கான தனி நிதிநிலை அறிக்கை வெளியிடுவதை நிறுத்தினார்கள். ஒன்றிய பொது நிதி நிலை அறிக்கையில் சேர்த்தார்கள். பின்னர் வந்த நிதிநிலை அறிக்கையில், ரயில்வே குறித்த தகவல்களைப் படிப்படியாக குறைத்தார்கள். புதிய வழித்தடங்கள் உருவாக்குவதில் பாரபட்சம் காட்டினார்கள். அதிலும் குறிப்பாக தென்னகம் பெரிதும் புறக்கணிக்கப்பட்டே வந்துள்ளது.

“ரயில்வே துறையை ஒழித்து வரும் ஒன்றிய பா.ஜ.க அரசு!” : முரசொலி தலையங்கம் கண்டனம்!

பொதுப் போக்குவரத்தின் அடித்தளமாக இருக்கக் கூடிய ரயில் பயணமானது பாதுகாப்பற்றதாக மாறிக் கொண்டு இருக்கிறது.

கடந்த ஆண்டு கடலூர் செம்மங்குப்பம் ரயில்வே கேட்டில் மிகப்பெரிய விபத்து நடந்தது. தண்டவாளத்தை கடக்க முயன்ற பள்ளி வேன் மீது ரயில் மோதியது. ரயில் வருகிறது என்றால் கேட் மூட வைக்கப்பட்டு இருக்க வேண்டும். கேட் திறந்து இருந்ததால் பள்ளி வாகனம் செல்ல முயற்சித்துள்ளது.

கேட்டை மூடாதது யார் தவறு? 2030 ஆம் ஆண்டுக்குள் அனைத்து லெவல் கிராசிங்குகளில் மேம்பாலம், கீழ் பாலம் அமைக்கப்பட்டுவிடும் என்று சொல்லப்பட்டுள்ளது. அனைத்து ரயில்வே கேட்டுகளும் ‘இன்டர் லாக்’ தொழில் நுட்பத்தின் அடிப்படையில் மாற்ற வேண்டும். இதுபோன்ற பணிகளில் கவனம் செலுத்த ஊழியர்கள் மிக அதிகமாகத் தேவை.

ரயில்வே சேவையின் தரத்தை உயர்த்தவும், ரயில் பயணிகளின் பாதுகாப்பை கவனிக்கவும் ஊழியர்கள் மிக அதிகமாகத் தேவை. பணியிடங்களை ஒழிப்பது என்பது ரயில் சேவையை மதிக்காத தன்மை ஆகும். ரயில்வே துறையின் முக்கியத்துவத்தைக் குறைப்பதும் ஆகும். தினந்தோறும் கோடிக்கணக்கான மக்கள் ரயில் சேவையை பயன்படுத்துகிறார்கள்.

அந்த மக்களை மதிக்காத தன்மை ஆகும். ஒட்டுமொத்த சாதாரண, சாமானிய மக்களுக்கு இழைக்கப்படும் அநீதி இது. ஊழியர்களைக் குறைத்துக் கொண்டே போவது, ரயில்வே துறையை தனியார் மயமாக்கும் திட்டத்தின் தொடர்ச்சியாகவே பார்க்க வேண்டி உள்ளது. ஆட்களைக் குறைப்பதால், இப்போது பணியில் இருப்பவர்களுக்கும் பணிச்சுமை அதிகரிக்கும்.

ஆண்டுக்கு இரண்டு கோடி வேலை வாய்ப்புகளை உருவாக்குவோம் என்று வாயால் வடை சுட்டார் பிரதமர் மோடி. ஆண்டு தோறும் லட்சக்கணக்கான, ஆயிரக்கணக்கான வேலை வாய்ப்புகளை ஒழித்துக் கொண்டு இருப்பதைத் தான் தொடர்ந்து பார்க்கிறோம். ‘மத்திய அரசுத் துறையில் வரும் இரண்டு ஆண்டுகளில் 10 லட்சம் பணியிடங்கள் நிரப்பப்படும்” என்று பிரதமர் மோடி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சொன்னார். ஆனால் தொடர்ச்சியாக வேலை பறிப்புகள் தான் நடக்கின்றன.

banner

Related Stories

Related Stories