
முரசொலி தலையங்கம் (20-04-2026)
சதியை முறியடித்த முதலமைச்சர்!
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் அரசியல் உரிமையைப் பறிக்க நினைத்தது பா.ஜ.க. அத்தகைய சதியை முறியடித்து விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரல் வளையை நெரிக்கத் திட்டமிட்டது பா.ஜ.க. அத்தகைய கொடூரத்துக்கு முடிவு கட்டி விட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீட்டை வழங்கப் போகிறோம் என்று சொல்லி விட்டு அதற்குள் தொகுதி மறுவரையறையையும், அதன் மூலமாக தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களுக்கு மாபெரும் குழியையும் தோண்டி வைத்திருந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. அதனை முன்கூட்டியே உணர்ந்து உரிமைக் குரலை உரக்கக் கொடுத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
இதனை ஓராண்டுக்கு முன்பே உணர்ந்து போராடினார் முதலமைச்சர் அவர்கள். தென் மாநில முதலமைச்சர்களின் கூட்டத்தைக் கூட்டினார்.
‘‘இந்தப் போராட்டம் எல்லை வரையறைக்கு எதிரானது அல்ல. இந்தப் போராட்டம் நியாயமான எல்லை வரையறையை வலியுறுத்துகிறது.
“This fight is not against delimitation.
This fight is for fair delimitation”என்பதை அப்போதே சொன்னார் முதலமைச்சர் அவர்கள். ‘’தமிழ்நாட்டுக்கான தொகுதிகள் குறையாது’’ என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா அப்போது சொன்னாரே தவிர, எந்த மாதிரி இதனைச் செய்யப் போகிறோம் என்று சொல்லவில்லை. திடீரென்று ஏப்ரல் 16 ஆம் தேதியை தேர்ந்தெடுத்து நாடாளுமன்றத்தைக் கூட்டியது பா.ஜ.க. அரசு.
543 தொகுதிகள் இருக்கும் மக்களவையை 850 ஆக்கி, வட மாநிலங்களுக்கு மிக அதிகமாகக் கொடுக்கத் திட்டமிட்டது பா.ஜ.க. தென் மாநிலங்களுக்கும் கூடுவதைப் போலத் தெரியும். ஆனால் வட மாநிலங்களை விடக் குறைவாகவே கூடும். இந்த சதியை உடனடியாக வெளிப்படுத்தி அறிக்கை கொடுத்தார் முதலமைச்சர் அவர்கள். இந்த அறிக்கை வந்த பிறகுதான் அகில இந்தியக் கட்சிகளே உன்னிப்பாக கவனித்தது.
‘அனைத்து மாநிலங்களுக்கும் கூடுகிறது, அதில் தவறு இல்லையே’ என்று தான் முதலில் அனைவரும் நினைத்தார்கள். ‘இல்லை, இது பாரபட்சத்துடன் அதிகரிக்கப்பட்டுள்ளது’ என்பதை இந்தியா முழுமைக்கும் அறிவித்தார் முதலமைச்சர் அவர்கள்.
‘மசோதா தாக்கல் செய்யப்படும் நாளில் கருப்புக் கொடி ஏற்றுவோம்’ என்று முதலமைச்சர் அவர்கள் சொன்ன பிறகுதான் இந்தியா முழுமைக்குமான கட்சிகள் எச்சரிக்கை உணர்வுடன் இந்த மசோதாவைப் பார்க்கத் தொடங்கியது. தேர்தல் பணியில் இருக்கும் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் அவசரக் கூட்டமாகக் கூட்டினார் முதலமைச்சர் அவர்கள். அனைவரையும் ஏப்ரல் 16 அன்று நாடாளுமன்றம் செல்லச் சொன்னார். உடனடியாக தி.மு.க. மாவட்டச் செயலாளர் கூட்டம் கூட்டினார். ‘கருப்புக் கொடி போராட்டம் நடத்துங்கள்’ என்று சொன்னார் முதலமைச்சர்.
நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பரப்புரையில் இருந்த முதலமைச்சர் அவர்கள், கருப்புச் சட்டை அணிந்து, கருப்புக் கொடியை ஏற்றினார். அந்த மசோதாவின் நகலையும் எரித்தார். நகல் எரிப்பு போராட்டம் நடத்தியது இந்தியாவையே திரும்பி பார்க்க வைத்தது. ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் இதனைக் கையில் எடுத்தது. அகில இந்திய காங்கிரஸ் தலைவர் கார்கே வீட்டில், ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் கூடியது. அதில் இந்த ஆபத்து முழுமையாக அனைவருக்கும் சொல்லப்பட்டது.

இதனை பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை. மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை முன்னே வைத்து, மற்றவைகளை பின்னால் வைத்து நிறைவேற்றிவிடலாம் என்று நினைத்தவர்கள் எண்ணத்தில் மண் விழுந்தது. தமிழ்நாட்டின் குரலை, அகில இந்தியாவின் குரலாக மாற்றியதில்தான் முதலமைச்சரின் வேகமும், விவேகமும் அடங்கி இருக்கிறது.
தொகுதி மறுவரையறையில் அதிக பலன் அடையும் மாநிலம் உத்தரப்பிரதேசம்தான். அந்த மாநிலத்தைச் சேர்ந்த அகிலேஷ் யாதவ் அவர்கள், நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் குரலை எதிரொலித்தார் என்றால் அதில்தான் முதலமைச்சரின் வேகமும், விவேகமும் அடங்கி இருக்கிறது.
முதலமைச்சர் அவர்கள் பற்ற வைத்த நெருப்பு இந்தியா முழுவதும் பரவியதால்தான் எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்ந்தன. ஒன்றிய பா.ஜ.க. அரசின் சதியை முறியடித்து, தொகுதி மறுவரையறை மசோதாவை நாடாளுமன்றத்தில் தோற்கடித்தன.
நாடாளுமன்றத்தில் பதிவான வாக்குகள் 528. இந்த மசோதா வெற்றி பெறுவதற்கு 352 வாக்குகள் தேவை. பா.ஜ.க.வுக்கு ஆதரவாக விழுந்தது 298 வாக்குகள்தான். எதிர்த்து பதிவான வாக்குகள் 230. மூன்றில் இரண்டு பங்கு வாக்குகள் இல்லாததால் மசோதா தோற்றது.
தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடப்பதால் அங்கிருந்து அனைத்து உறுப்பினர்களும் வரமாட்டார்கள் என்று பா.ஜ.க. அரசு நினைத்தது. ‘தேர்தலை விட அதுதான் முக்கியம்’ என்று அனைத்து உறுப்பினர்களையும் அனுப்பி வைத்தார் முதலமைச்சர் அவர்கள். இதனையும் பா.ஜ.க. எதிர்பார்க்கவில்லை. மேற்கு வங்கத்தில் இருந்தும் மம்தா பானர்ஜி, திரிணாமுல் காங்கிரஸ் உறுப்பினர்கள் அனைவரையும் அனுப்பி வைத்து விட்டார். குறைவான எம்.பி.க்கள் வந்தால் குறைவான எண்ணிக்கை போதும் என்று நினைத்தது பா.ஜ.க. அந்த எண்ணத்திலும் மண் விழுந்தது.
பா.ஜ.க.வின் சதி முறியடிக்கப்பட்டது. அதற்கான அரசியல் விழிப்புணர்வை விதைத்தவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். டெல்லி அணியா, தமிழ்நாடு அணியா என்று அவர் கேட்ட கேள்விக்கான விடையில் டெல்லி அணியை தமிழ்நாடு அணி வீழ்த்தி விட்டது. பா.ஜ.க. அரசு முதன்முதலாக நாடாளுமன்றத்தில் தோற்கிறது. டெல்லியைத் தோற்கடித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.






