
தமிழ்நாடு பாதிக்கப்படக் கூடாது!
முரசொலி தலையங்கம் (17.04.2026)
‘தொகுதி மறுசீரமைப்பு' என்ற பெயரால், தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் குரலை ஒடுக்கத் திட்டமிடுகிறது ஒன்றிய பா.ஜக. இதற்கு எதிராக மாபெரும் எழுச்சி முழக்கங்களை தி.மு.க. தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மாண்புமிகு மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பி வருகிறார்கள்.
இதைத் தொடர்ந்து வீடுகள்தோறும், வீதிகள்தோறும் கருப்புக் கொடியை ஏற்ற உத்தரவிட்டு இருந்தார். கழக நாடாளுமன்ற உறுப்பினர் கூட்டமும், கழக மாவட்டச் செயலாளர்கள் கூட்டமும் அவசரமாகக் கூட்டப்பட்டது. அதில் நாடாளுமன்றத்தில் எப்படிச் செயல்பட வேண்டும் என்பதையும், மக்கள் மன்றத்துக்கு இதனை எப்படிக் கொண்டு செல்ல வேண்டும் என்பதையும் விரிவாக விளக்கி இருக்கிறார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள்.
நாமக்கல்லில் தேர்தல் பரப்புரையில் இருந்த முதலமைச்சர் அவர்கள் கருப்புக்கொடி ஏற்றினார்கள். தொகுதி மறுவரையறை தொடர்பான மசோதா நகலைத் தீயிட்டு எரிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டார்கள்.
ஏனென்றால் ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டுவரத் திட்டமிட்டிருக்கும் சட்டமானது, தமிழ்நாட்டுக்கு ஆபத்தை விளைவிப்பதாகவே இருக்கிறது. அரசியலமைப்புச் சட்ட (131ஆவது திருத்த ) மசோதா என்று இதற்குப் பெயர். நாடாளுமன்றங்களிலும் சட்ட மன்றங்களிலும் பெண்களுக்கு மூன்றில் ஒரு பங்கு இடஒதுக்கீடு வழங்கும் 'நாரி சக்தி வந்தனன் அதினியம், (2023 இன் -106ஆவது திருத்தம்) என்ற சட்டத்தை நடைமுறைப்படுத்துவதே இதன் நோக்கமாகச் சொல்லப்படுகிறது.
மகளிர் சட்டமானது மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகுதான் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் இதனை இப்போதே செய்யப் போவதாகச் சொல்கிறார்கள்.
இந்தச் சட்டத்தின்படி மக்களவை இடங்கள் 543 என்ற எண்ணிக்கையில் இருந்து 850 ஆக உயரப் போகிறது. இதில் தான் பல சதி வலைகள் பின்னப்பட்டு உள்ளன. அனைத்து மாநிலங்களில் இருந்தும் மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் உறுப்பினர்களின் எண்ணிக்கை இப்போது 530 ஆக இருக்கிறது. இந்த எண்ணிக்கையை 815 ஆக உயர்த்தப் போகிறார்கள். யூனியன் பகுதிகளில் இருந்து வரும் உறுப்பினர்களின் எண்ணிக்கை 20 ஆக இருக்கிறது. இதனை 35 ஆக உயர்த்த இருக்கிறார்கள். ஆக மொத்தம் 850 என்று எண்ணிக்கை உயரப் போகிறது.
இப்போது செய்ய இருக்கும் அரசியலமைப்புச் சட்டத் திருத்தமானது, அரசியலமைப்புச் சட்டத்தில் 55,81,82,170, 330,332,334A ஆகிய பிரிவுகளைத் திருத்தப் போகிறது. மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை மாற்றுவது என்பது மிக முக்கியமான திருத்தம் ஆகும்.
2011 மக்கள் தொகையை அடிப்படையாக வைத்து தொகுதிகளின் எண்ணிக்கை மாநிலங்களில் அதிகரிக்க இருக்கிறது. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டை மிகச் சிறப்பாகப் பின்பற்றிய மாநிலங்கள் இதில் பின்னடைவைச் சந்திக்கின்றன. மக்கள் தொகைக் கட்டுப்பாட்டுக் கொள்கையைப் பின்பற்றாத மாநிலங்கள் இதனால் பலனடையும்.
உத்திரப்பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா ஆகிய ஐந்து மாநிலங்கள் அதிகமான பலனை அடையப் போகின்றன. இன்று 80 இடம் வைத்துள்ள உத்திரப்பிரதேசம், 140 இடங்களைப் பெறும். 40 இடம் வைத்துள்ள பீகார் 73 இடங்களைப் பெறும். 25 இடங்களை வைத்துள்ள ராஜஸ்தான், 48 இடங்களைப் பெறும். 29 இடங்களை வைத்துள்ள மத்தியப்பிரதேசம், 51 இடங்களைப் பெறும். 48 இடங்களை வைத்துள்ள மகாராஷ்டிரா மாநிலம் 79 இடங்களைப் பெறும்.

இந்தி பேசும் மாநிலங்கள் என்று சொல்லப்படுபவை (உபி, பீகார், மபி, ராஜஸ்தான், அரியானா, சத்தீஸ்கர், உத்திரகாண்ட், டெல்லி) இதுவரை 207 இடங்களை மொத்தமாக வைத்துள்ளன. இந்த இடங்களின் எண்ணிக்கை இனி 366 ஆக ஆகும். இதனை விழுக்காடு அடிப்படையில் சொன்னால் 77 விழுக்காடு அதிகரிப்பு ஆகும். இந்திய நாடாளுமன்றத்தில் இப்போது அவர்கள் 38.1 விழுக்காடு இருக்கிறார்கள். இனி 43.1 விழுக்காடாக உயர்ந்து நிற்பார்கள்.
இந்தத் தொகுதி சீரமைப்பில் தமிழ்நாடு 39 என்ற எண்ணிக்கையில் இருந்து 51 ஆக உயரும். கேரளா 20 ஆக இருக்கிறது. இனி 23 ஆகும். 42 ஆக இருக்கும் ஆந்திரா, தெலங்கானா 59 ஆகும். ஒடிசா 21 இலிருந்து 29 ஆகும். மேற்கு வங்கம் 42இலிருந்து 64 ஆகும். தொகுதி சீரமைப்பால் குறைவான பலனைப் பெறும் மாநிலங்கள் இவை.
தென்னிந்திய மாநிலங்கள் (தமிழ்நாடு, கர்நாடகம், ஆந்திரா, தெலங்கானா, கேரளா, புதுச்சேரி) என்று சொல்லப்படும் மாநிலங்களில் இருந்து இதுவரை 132 உறுப்பினர்கள் மட்டுமே தேர்ந்தெடுத்து அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இந்த எண்ணிக்கை 132 இலிருந்து 176 ஆக மட்டுமே உயர்ந்துள்ளது. இது விழுக்காடு அடிப்படையில் 33 விழுக்காடு அதிகரிப்பு மட்டுமே. வட மாநிலங்களில் 77 விழுக்காடு அதிகரித்துள்ளது. ஆனால் தென் மாநிலங்களில் 33 விழுக்காடு மட்டுமே அதிகரித்துள்ளது. இதனைத்தான் பாகுபாடு என்கிறோம்.
இன்றைய நாடாளுமன்றத்தில் தென்னிந்திய மாநிலங்களின் பங்களிப்பு என்பது 24.4 விழுக்காடு ஆகும். இனி இந்த விழுக்காடு 20.7 ஆக குறையும். இதனைத்தான் பாகுபாடு என்கிறோம்.
இந்திய நாடாளுமன்றத்தில் இந்தி பேசும் வட மாநில உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமானது 43.1 விழுக்காடாக இருக்கும். ஆனால் தென்னிந்திய மாநில உறுப்பினர்களின் பிரதிநிதித்துவமானது 20.7 விழுக்காடாக இருக்கும். தென்னிந்திய மாநிலங்களின் தயவு இல்லாமல் இனி ஒன்றியத்தில் யாரும் ஆட்சி செய்யலாம் என்பதே இன்று உருவாக்கப்பட்ட அரசியல் சதி ஆகும்.
இந்தியாவின் கிழக்கு மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை 14.4 இலிருந்து 13.7 ஆக குறையும். வடகிழக்கு மாநில உறுப்பினர்களின் எண்ணிக்கை 4.4 இலிருந்து 3.8 விழுக்காடாகக் குறையும்.
இதில் இன்னொரு பெரிய ஆபத்து இருப்பதாக முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் அவர்கள் சுட்டிக் காட்டி இருக்கிறார். 'தமிழ்நாட்டின் எண்ணிக்கை உயர்கிறது என்பதே மாயை ஆகும். இப்போது 39 உறுப்பினர்கள் இன்று இருப்பதை 58 ஆக உயர்த்தி விட்டு, தொகுதி மறுவரையறைக்குப் பிறகு அது 46 ஆக குறைந்துவிடும். தொகுதி மறுவரையறைக்குப் பிறகு மக்களவையில் தென் மாநிலங்களின் குரல் இன்னும் அதிகமாக நசுக்கப்படும். உறுப்பினர்களின் எண்ணிக்கை இன்னும் குறைக்கப்படும்” என்று சொல்லி இருக்கிறார்.
தமிழ்நாட்டுக்கு பா.ஜ.க. கெடுதல்தான் செய்யும் என்பது திரும்பத் திரும்ப மெய்ப்பிக்கப்பட்டு இருக்கிறது. தமிழ்நாடு பாதிக்கப்படாமல் காக்க அனைத்தையும் செய்தாக வேண்டும்.






