
ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மிகக் கடுமையான எச்சரிக்கையை கழகத் தலைவர் - மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் விடுத்துள்ளார்கள். தொகுதி மறுவரையறை என்ற பெயரால் தமிழ்நாட்டின் குரல்வளை நெரிக்கப்படுகிறது. தமிழ்நாட்டின் உரிமைக்குரல் ஒடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டை புறக்கணிப்பதை சட்டபூர்வமாகவே செய்ய இருக்கிறார்கள். இதற்கு எதிராகத்தான் தனது இறுதி எச்சரிக்கையை முதலமைச்சர் அவர்கள் விடுத்துள்ளார்கள்.
ஏப்ரல் 16 அன்று நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத் தொடர் கூடுகிறது. அதில் மக்களவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை 816 ஆக ஆக்கும் அரசியலமைப்புத் திருத்த மசோதாவைக் கொண்டு வரப் போகிறார்கள். நாடாளுமன்றம், சட்டமன்றங்களில் பெண்களுக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு அளிக்க வகை செய்யும் மசோதாவையும் கொண்டு வரப்| போகிறார்கள்.
தொகுதி மறுவரையறை என்பது வேறு. இடங்களை அதிகரிப்பது என்பது வேறு. மகளிர் இட ஒதுக்கீடு என்பது வேறு. ஆனால் மூன்றையும் போட்டுக் குழப்பி ஏமாற்றப் பார்க்கிறது பா.ஜ.க. இந்த ஆபத்தைத்தான் முதலமைச்சர் அவர்கள் எச்சரிக்கையாக விடுத்துள்ளார்கள்.
நேற்றைய தினம் முதலமைச்சர் விடுத்த காணொளி காட்சிப் பதிவானது அரசியல் அரங்கில் மிகமிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகிறது. இந்தியாவே உன்னிப்பாக அதனைக் கவனிக்கிறது.
“தமிழ்நாட்டின் வாசல் வரை பேராபத்து வந்துவிட்டது. ஏப்ரல் 16 நாடாளுமன்றம் கூடுகிறது. தமிழ்நாட்டிலும், மேற்கு வங்கத்திலும் தேர்தல் நடக்கும்போது இதனை அவசர அவசரமாகக் கூட்டுகிறார்கள். தொகுதி மறுவரையறை செய்வதை 25 ஆண்டுகளுக்கு தள்ளி வைக்கச் சொன்னோம். ஆனால் அதனை உடனடியாகச் செய்யப் போகிறது பா.ஜ.க. அரசு. இதனை எப்படிச் செய்யப் போகிறோம் என மாநிலங்களோடு விவாதிக்கவில்லை ஒன்றிய அரசு. மறைத்து மறைத்து செய்வதால் இதில் மாபெரும் ஆபத்து இருக்கலாம். வடமாநிலங்களுக்கு அரசியல் வலிமையை அதிகரிப்பது மாதிரியோ, தமிழ்நாட்டுக்கு அரசியல் வலிமையைக் குறைப்பது மாதிரியோ நடந்தால் நாங்கள் பார்த்துக் கொண்டு சும்மா இருக்க மாட்டோம். தமிழ்நாடே ஸ்தம்பிக்கும் வகையில் எங்களது எதிர்ப்பைக் காட்டுவோம். நானே களத்துக்கு வந்து போராடுவேன். இது இறுதி எச்சரிக்கை” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
“நீங்கள் பார்க்காத தமிழ்நாட்டை பார்ப்பீர்கள். 1950களில், 60களில் திராவிட முன்னேற்றக் கழகம் எத்தகைய உணர்ச்சிபூர்வமானப் போராட்டங்களை நடத்துமோ அத்தகைய போராட்டங்களை நாங்கள் நடத்துவோம். குடும்பம் குடும்பமாக வீதிக்கு வருவோம். பதவி, ஆட்சி, அதிகாரம் எல்லாம் இரண்டாம் கட்டம் தான். கொள்கை தான் முக்கியம். இதை மிரட்டலாக எடுத்துக் கொண்டாலும் கவலையில்லை.” என்று எச்சரித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

தொடர்ச்சியாகச் செய்யும் தேர்தல் பரப்புரை பொதுக்கூட்டங்களிலும் இதனை விரிவாகப் பேசி வருகிறார் முதலமைச்சர் அவர்கள். அந்தளவுக்கு இது மிகமிக முக்கியப் பிரச்சினையாக ஆகி இருக்கிறது.
சாதிவாரி கணக்கெடுப்பை 'இந்தியா' கூட்டணி கட்சிகள் வலியுறுத்தியது. அதற்குப் பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு; 2023ம் ஆண்டு தெலங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசிய பேச்சுக்கள் தொகுதி மறுவரையறை செய்யப்போகும் அநீதியை அவரது வாயாலே சொல்ல வைத்தது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிசாமாபாத்தில் பேசிய பிரதமர் மோடி, "மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென் இந்தியா 100 தொகுதிகள் வரை இழக்க நேரிடும். தென் இந்தியா இதனை ஏற்குமா? தென் இந்தியா காங்கிரசை மன்னிக்குமா?” என்றெல்லாம் ஆவேசமாக அப்போது கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி. இன்றைக்கு அதைத்தான் மோடி செய்யப் போகிறார்.
மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகளைப் பிரித்தால், மக்கள் தொகையைக் கட்டுப்படுத்திய மாநிலங்கள் இதனால் பாதிப்பு அடையாதா? அடையும். அதைத் தான் பா.ஜ.க. செய்யப் போகிறது. இதனை நேரடியாகச் செய்தால் பிரச்சினை வரும் என்பதால் மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை கேடயமாகப் பயன்படுத்திக் கொண்டு வருகிறார்கள்.
மகளிர் இட ஒதுக்கீட்டை யாரும் எதிர்க்கவில்லை. ஆனால் மகளிர் இடஒதுக்கீட்டில் இரட்டை வேடம்போடுவது பா.ஜ.க. தான். மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி விட்டதாக பா.ஜ.க. சொல்லிக் கொள்கிறது. அந்தச் சட்டத்தில் என்ன இருக்கிறது என்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு – அதனடிப்படையில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று சொல்லப்பட்டது. அப்படியானால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு முடியவே பல ஆண்டுகள் ஆகும். அதுவரை இவர்களால் மகளிருக்கான இடஒதுக்கீட்டையும் வழங்க முடியாது.
அனைத்து மாநிலங்களுக்கும் 50 விழுக்காடு தொகுதிகள் உயரும் என்று சொல்கிறார்கள். அது உண்மையல்ல. மக்கள் தொகை அடிப்படையில்தான் உயர்த்த இருக்கிறார்கள். இதுதான் ஆபத்து ஆனது. மக்கள் தொகையை கட்டுப்படுத்த வேண்டும் என்ற கொள்கையைப் பின்பற்றும் மாநிலங்களுக்கு இது பேராபத்து ஆகும். இது இந்தியாவின் எதிர்காலத்துக்கும் நல்லதல்ல.
"தென்னிந்தியாவுக்கும் சிறிய மாநிலங்களுக்கும் அநீதி இழைப்பதாக அமைந்தால் நீண்ட கால அளவில் நமது நாட்டை அது பலவீனப்படுத்தும்” என்று தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் சொல்லி இருப்பது தான் காலப் போக்கில் நடக்கும்.
வடக்கில், ஏழெட்டு மாநிலங்களில் வென்றால் போதும் ஆட்சியைத் தக்க வைக்கலாம் என்ற நினைப்போடு பா.ஜ.க. இருக்கிறது. அந்தப் பயத்தோடுதான் இந்தச் சட்டத்தை கொண்டு வருகிறார்கள்.






