
முரசொலி தலையைங்கம் (11-04-2026)
நிதானம் கெட்ட பழனிசாமி..
“தி.மு.க. ஆட்சியில வறட்சி வந்ததா? வெள்ளம் வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்னும் வரலை. அப்படி வந்திருந்தா இந்த முதலமைச்சரே காணாது போயிருப்பாரு. இவரு அந்த கொரோனாவுலயே போயிருப்பாரு” என்று சொல்லிவிட்டு தலையைக் குனிந்து சிரிக்கிறார் தரம் கெட்ட பழனிசாமி.
தரம் கெட்ட பழனிசாமி, தோல்வி பயத்தால் நிதானம் கெட்டு அலைகிறார். இவர் கெட்ட கேட்டுக்கு ஊர் ஊராகப் போய் வாக்கு கேட்கிறார்.
இதற்கு முதலமைச்சர் அளித்த பதில் நிதானமானது. உருக்கமானது. “கொரோனாவைப் பார்த்து நான் பயப்படவில்லை. கொரோனா வார்டுக்குள் அதற்கான உடையைத் தாங்கிச் சென்றவன் நான். இப்படிப் போக வேண்டும் என்று நான் யாருக்கும் முன்கூட்டியே சொல்லவில்லை. யாரிடமும் சொல்லாத ஒன்றை இன்று சொல்கிறேன்... இதைத் தெரிந்து என் மனைவி துர்காவதி என்னிடம் கோபித்துக் கொண்டு ஒரு வாரம் பேசவில்லை. இது சத்தியம்” என்று சொன்னார். விழுப்புரம் கூட்டத்தில் இதைக் கேட்ட போது பலரும் அழுதார்கள். இந்த உரை வீடியோவாகப் பரவி பலரையும் கலங்க வைத்தது.
உடனே, பொய்மூட்டை பழனிசாமி, ‘நான் அப்படிப் பேசவில்லை, கொரோனா காலத்தில் அவரைக் காணவில்லை’ என்று மழுப்பி இருக்கிறார் பழனிசாமி. அவர் வண்டி வண்டியாகப் பொய் சொல்வார் என்பது ஊர் அறிந்ததே ஆகும். மாட்டிக் கொண்டதும், பச்சையாகச் சொல்கிறார். பழனிசாமி பேசியதற்கு வீடியோ ஆதாரங்கள் இருக்கிறது.
“தி.மு.க. ஆட்சியில வறட்சி வந்ததா? வெள்ளம் வந்ததா? புயல் வந்ததா? கொரோனா வந்ததா? ஒன்னும் வரலை. அப்படி வந்திருந்தா இந்த முதலமைச்சரே காணாது போயிருப்பாரு. இவரு அந்த கொரோனாவுலயே போயிருப்பாரு” என்பது பழனிசாமி சொன்னது. அவர் சொன்னது வீடியோவாகவும் இருக்கிறது. ஊர், உலகம் பார்த்ததையே மாற்றுகிறார் பழனிசாமி.
பொதுவாகவே யாரையும் எடுத்தெறிந்து ஒருமையில் பேசுவதுதான் பழனிசாமிக்கு பழக்கம். தன்னை ஏதோ பெரிய பண்ணையாராக நினைத்துக் கொண்டு மற்றவர்களை கொத்தடிமைகளாக நினைப்பது அவரது வழக்கம். சசிகலா காலைப் பார்த்து ஊர்ந்து போய் காலைத் தொட்டு வணங்கி அங்கேயே விழுந்து கிடந்த மானம் கெட்ட பழனிசாமி, சசிகலா சிறைக்குப் போனதும் ‘நீ ஏன் சொந்தம் கொண்டாடுகிறாய்? நீ எனக்கு பதவி வாங்கிக் கொடுத்தியா?’ என்று ஒருமையில் கேட்டார். அரசியலில் ஒன்றாக இருந்தவர் பிரிவதும், அவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக் கொள்வதும் வழக்கம். ஆனால் இப்படி ஒருமையில் தலைவர்கள் பேசிக் கொள்வது இல்லை. அதனைச் செய்தவர் தான் பழனிசாமி. அதே போலத்தான் தினகரனையும் திட்டினார்.
பொதுவாகவே பல நேரங்களில் முதலமைச்சர் குறித்து விமர்சிக்கும் போது ஒருமையில் பேசி இருக்கிறார் பழனிசாமி. அதைப் பற்றி கூச்சப்படும் ரகம் அல்ல பழனிசாமி. ஒரு மாநிலத்தின் முதலமைச்சரை ஒருமையில் பேசுகிறோமே என்ற எண்ணம் அவருக்கு இருந்தது இல்லை. அந்தளவுக்கு பண்ணையார்த் தனம். ஆணவம். திமிர்த்தனம். யார் நம்மைக் கேட்பார்கள் என்ற எகத்தாளம். அன்றைக்கே தமிழ்நாட்டு ஊடகங்கள் அதனைக் கண்டித்திருக்க வேண்டும். யாரும் அதனைக் கண்டிக்கவில்லை.
இப்போதுகூட தலைவர் கலைஞரை, ‘உங்க அப்பாரு’ என்றுதாம் விளிக்கிறார் பழனிசாமி. 80 ஆண்டு பொதுவாழ்க்கைக்குச் சொந்தக்காரர், 50 ஆண்டுகள் ஒரு அரசியல் இயக்கத்தின் தலைவர், ஐந்து முறை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதலமைச்சர், தமிழ்நாட்டு வரலாற்றில் அதிக ஆண்டுகள் முதலமைச்சராக இருந்தவர், அதிகக் கோப்புகளில் கையெழுத்து இட்டவர், பல பிரதமர்களை உருவாக்கியவர், பல குடியரசுத் தலைவர்களை உட்கார வைத்தவர், இந்தியாவில் பல முறை ஆட்சி மாற்றத்துக்குக் காரணம் ஆனவர், 95 வயது வரை இம்மண்ணுக்காகவும், மக்களுக்கும், மொழிக்கும் வாழ்ந்த கலைஞரை, ‘உங்க அப்பாரு’ என்று சொல்வதற்கு தடித்த தோலும், உடம்புக் கொழுப்பும்தான் காரணம்.
கலைஞர், கோடிக்கணக்கான தமிழர்களால் அப்பாவாக, அண்ணனாக, ஏற்றுக் கொள்ளப்பட்டவர். பழனிசாமியைப் போல சொந்தக்கட்சிக் காரர்களால் புறக்கணிக்கப்பட்டவர் அல்ல. கூட இருப்பவர்கள் எப்போது குழி பறிப்பார்கள் என்று நித்தமும் செத்துப்பிழைக்கும் பழனிசாமி, கோடிக்கணக்கான மக்களின் இதயங்களில் இன்னமும் வாழ்ந்து கொண்டிருக்கும் கலைஞர் பெயரையே உச்சரிக்கத் தகுதி இல்லாதவர்.

கொரோனா காலத்தில் ஊரடங்கு போட்டுவிட்டு சேலத்தில் முடங்கிக் கிடந்த உதவாக்கரைதான் பழனிசாமி. திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள் அத்தனை பேரையும், ‘ஒன்றிணைவோம் வா’ என்று அழைத்து வாழ்வாதாரம் இழந்து கிடந்த மக்களுக்கு உதவச் சொன்னவர் கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின். தி.மு.க. உடன்பிறப்புகள் ஒவ்வொருவரும் வீட்டுக்குள் இல்லை. வீதியில் மக்களுக்கு உதவி வந்தார்கள். உணவு கொடுத்தது தி.மு.க. உணவு தயாரித்துக் கொடுத்தது தி.மு.க. அனைத்து உதவியையும் செய்தது தி.மு.க. பழனிசாமி, மிக்சர் சாப்பிட்டுக் கொண்டு இருந்தார்.
“முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் எனும் நான்” என்று பதவிப் பிரமாணம் எடுத்துவிட்டு கோட்டைக்கு வந்த முதலமைச்சர் அவர்கள் போட்ட முதல் ஐந்து கையெழுத்தில் இதுவும் ஒன்று; என்ன என்றால், “அனைத்துக் குடும்பத்துக்கும் கொரோனா நிதியாக 4 ஆயிரம் வழங்குவேன்” என்பதுதான்.
வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட மக்களுக்கு 5 ஆயிரம் ரூபாய் கொடுங்கள் என்று அன்றைய எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின் அவர்கள் சொன்னார்கள். கடைசி வரைக்கும் பழனிசாமி தரவில்லை. தி.மு.க. ஆட்சிக்கு வந்ததும் முதலில் 2 ஆயிரம், பின்னர் 2 ஆயிரம் வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். முதலில் 22 மளிகைப் பொருட்களையும்- பின்னர் 14 மளிகைப் பொருள்களையும் 2 கோடி குடும்பங்களுக்கு வழங்கினார் முதலமைச்சர் அவர்கள். கொரோனாவை வென்றவர் மட்டுமல்ல - கொரோனாவால் வாழ்வாதாரம் இழந்த மக்களின் வாழ்க்கையையும் மீட்டுத் தந்தவர்தான் முதலமைச்சர் அவர்கள்.
பழனிசாமி ஆட்சி தொடர்ந்திருந்தால் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கவே முடியாது. மக்கள் மரணிப்பதைப் பார்த்தும் ‘மிக்சர்’ சாப்பிட்டுக் கொண்டு இருந்திருப்பார் பழனிசாமி. இவ்வளவு தோல்விக்குப் பிறகும் பழனிசாமிக்கு உடம்புத் திமிர் அடங்கவில்லை. மே முதல் வாரத்தில் மொத்தமாக திமிர் அடங்கிவிடும்.






