
வணிக சிலிண்டர்களின் விலையை ஏற்றி அப்பாவிகள் தலையில் இடியாய் இறங்கி இருக்கிறார் பிரதமர் மோடி. மக்களுக்காக எந்த நன்மையையும் சிந்திக்கத் தெரியாதவர் மோடி என்பது மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கப்பட்டு வருகிறது.
நாடு முழுவதும் வணிக சிலிண்டர்களின் விலை 203 ரூபாய் கூடுதலாகி விட்டது. எரிபொருள் விலை அதிகரிப்பானது அனைத்து மக்களையும் பாதித்து வருகிறது. பொதுத் துறை எண்ணெய் நிறுவனங்கள் வீடுகளுக்கு 14.20 கிலோ எடையிலும், வணிகப் பயன்பாட்டுக்கு 19 கிலோ எடையிலும் கேஸ் சிலிண்டர்களை வழங்கி வருகிறது. ஒவ்வொரு மாதமும் இதன் விலையை பொதுத்துறை நிறுவனங்கள் மாற்றி அமைக்கும். இதன்படி இரண்டு நாட்களுக்கு முன்னால் கடுமையாக விலையை ஏற்றி விட்டார்கள். 19 கிலோ எடை கொண்ட வணிக சிலிண்டர் சென்னையில் இதுவரை 2,043 ரூபாய் 50 பைசாவுக்கு விற்பனையாகி வந்தது.
இப்போது 203 ரூபாய் உயர்ந்து 2,246 ரூபாய் 50 பைசாவாக உயர்த்தப்பட்டு விட்டது. இதன் காரணமாக உணவகங்களின் உணவுப் பொருட்களின் விலை கடுமையாக எகிறி விட்டது. ஏற்கனவே சிலிண்டர் தட்டுப்பாட்டால் பல உணவகங்கள் மூடப்பட்டு விட்டன. பல உணவகங்களில் ஒரு சில உணவுப் பொருட்கள் மட்டுமே தயாரிக்கிறார்கள். சிலிண்டர் விலை கூடியதால் உணவுப் பொருட்கள் விலையும் கூடிவிட்டது. இது சாதாரண சாமானிய மக்களைக் கடுமையாக பாதிக்கத் தொடங்கி இருக்கிறது.
விமான எரி பொருட்களின் விலையும் கடுமையாக உயர்ந்து விட்டது. பிப்ரவரி மாதம் இருந்த விலையை விட இப்போது 114.5 விழுக்காடு அதிகம் ஆகும். வரலாற்றின் முதல் முறையாக ஒரு கிலோ விமான எரிபொருள் விலை 2 லட்சம் ரூபாயாக உயர்ந்துவிட்டது. இதனால் விமானக் கட்டணங்கள் மிகக் கடுமையாக உயர்ந்துவிட்டன.
ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் நடத்தும் தாக்குதலும், அதற்குப் பதிலடியாக ஈரான் நடத்தும் தாக்குதலும், உலகம் முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளன. வளைகுடா நாடுகளில் இருந்து உலக நாடுகளுக்கு கச்சா எண்ணெய் கொண்டு செல்வது தடைபட்டுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளில் எண்ணெய் வயல்கள், இயற்கை எரிவாயு உற்பத்தி ஆலைகள் மூடப்பட்டுள்ளன. ஜலசந்தியில் சரக்கு கப்பல் போக்குவரத்து முடங்கி உள்ளது.போர் காரணமாக கத்தாரின் முன்னணி நிறுவனங்கள் எல்.பி.ஜி. உற்பத்தி ஆலைகளை மூடிவிட்டன. ஹார்முஸ் ஜலசந்தியில் போக்குவரத்து முடங்கியிருப்பதால் இந்திய பொதுத் துறை, தனியார் நிறுவனங்களால் எல்.பி.ஜி.யை இறக்குமதி செய்ய முடியவில்லை.

இதன் எதிர்விளைவாக நாடு முழுவதும் சமையல் மற்றும் வர்த்தக கேஸ் சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனைச் சரி செய்ய வேண்டியது ஒன்றிய பா.ஜ.க. அரசின் கடமை ஆகும். சமையல் கேஸ் தட்டுப்பாடு குறித்து பிரதமர் மோடி தலைமையில் டெல்லியில் அவசர ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆனால் உருப்படியாக எதுவும் செய்யவில்லை. கூட்டம் குறித்த செய்தியில் எந்தத் தீர்வும் சொல்லப்படவில்லை. தட்டுப்பாடு ஏற்படாமல் பார்த்துக் கொள்ளச்' சொல்லி இருக்கிறார் பிரதமர். தட்டுப்பாட்டைத் தடுக்கும் தீர்வை அவர் சொல்லவில்லை.
"வணிக எரிவாயுத் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ள உணவகங்களுக்குத் தேவையான மாற்று ஏற்பாடு செய்யப்பட வேண்டும். போரால் ஏற்பட்டுள்ள எரிவாயுத் தட்டுப்பாட்டினால் பொதுமக்களும் வணிக நிறுவனங்களும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை ஒன்றிய அரசு உறுதி செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் உள்ள சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழிற்சாலைகளும் எந்த விதத்திலும் பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்” என்று பிரதமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
அவர்கள் பல நாட்களுக்கு முன் கடிதம் அனுப்பினார்கள். ஆனாலும் ஒன்றிய அரசு எந்த நடவடிக்கையையும் முறையானதாகச் செய்யவில்லை.
சிலிண்டர் விலை உயர்வைத் தொடர்ந்து பெட்ரோல் விலை கூடும். டீசல் விலை கூடும். தனியார் நிறுவனங்கள் தங்கள் விலையை உயர்த்திவிட்டன. அடுத்து பொதுத்துறை நிறுவனங்களும் விலையைக் கூட்டி விடும். இதனடிப்படையில் பல்வேறு அவசியமான பொருட்களின் விலையும் அதிகரிக்கத் தான் போகிறது. இது ஒட்டுமொத்த மக்களையும் பாதிக்கவே செய்யும். அனைத்துத் தரப்பு மக்களையும் பாதிக்கத்தான் போகிறது.
இதை உணர்ந்துதான், 'கொரோனா காலத்தைப் போல' என்று பிரதமர் மோடி சொன்னார் போலும். 'கொரோனா காலத்தில் உங்களைக் கைவிட்டதைப்போல கைவிடுவேன்' என்றும் சொல்லிவிட்டார் பிரதமர் மோடி.

பொருளாதாரத்தை மிக மோசமாகக் கையாள்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. தொலைநோக்குப் பார்வையுடன் எந்தப் பிரச்சினை பற்றியும் சிந்திக்கவில்லை பா.ஜ.க. அரசு. மக்களுக்கு ஒரு பாதிப்பு ஏற்பட்டால் அதனைத் தீர்க்க வேண்டும் என்ற அக்கறை பா.ஜ.க. அரசுக்கு இல்லை. ‘போர் நடக்கிறது, போர் நடந்தால் இதை அனுபவிக்கத்தான் வேண்டும்' என்ற அலட்சியமே பா.ஜ.க. அரசிடம் இருக்கிறது.
இந்த பாதிப்புகள் அனைத்தையும் பட்டியலிட்ட காங்கிரஸ் தலைவர் கார்கே,‘பா.ஜ.க.வின் கொள்ளை தினம்'என்று வர்ணித்துள்ளார். அதுதான் உண்மை. மக்களைப் பற்றி ஒன்றிய பா.ஜ.க. அரசு கொஞ்சமும் கவலைப்படவில்லை. மக்கள் பிரச்சினைகளைத் தீர்க்கும் திறம் இல்லை.
இந்தியாவிலேயே இருக்காமல் உலகம் முழுக்க சுற்றும் பிரதமர், தனது உலகப் புகழை வைத்து முன்கூட்டியே இந்தப் பிரச்சினையைத் தீர்த்து வைத்திருக்க வேண்டாமா? தடுத்திருக்க வேண்டாமா? தட்டுப்பாட்டைத் தவிர்த்திருக்க வேண்டாமா? 'விஸ்வகுரு'வுக்கு இது முடியாதா? இயலாதா?








