
மிக மோசமான இருண்ட ஆட்சிக் காலத்தை நடத்தியவர் எடப்பாடி பழனிசாமி. அதை எல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து வாய் நீளம் காட்டிக் கொண்டு இருக்கிறார் பழனிசாமி.
'கொடநாடு' என்று சொன்னாலே கொலை நடுக்கம்' ஏற்படும் பழனிசாமிக்கு.
கொடநாடு பங்களாவில் கொலை, கொள்ளை நடந்தது 2017 ஏப்ரல் 23 ஆம் தேதி. அப்போது முதலமைச்சராக இருந்தவர் பழனிசாமி. அன்றைய தினமே ஓம் பகதூர் என்ற காவலாளி கொலை செய்யப்பட்டார்.
அடுத்த ஐந்தாவது நாள் - அதாவது ஏப்ரல் 23 ஆம் தேதி ஆத்தூர் அருகே உள்ள முல்லைவாடி சந்தனகிரி புறவழிச்சாலை தென்னங்குடி பாளையம் என்ற இடத்தில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இருசக்கர வாகனத்தில் சென்ற கனகராஜ் மீது கார் மோதியதாக அ.தி.மு.க. ஆட்சியில் வழக்குப் பதியப்பட்டது. 'இது விபத்து அல்ல; என் சகோதரர் மரணத்தில் மர்மம் உள்ளது' என்று கனகராஜின் சகோதரர் தனபால் அன்று முதல் சொல்லி வருகிறார்.
கனகராஜ் சொல்லி கொடநாடு சம்பவத்தைச் செய்த சயான் என்பவர் மீதும் இதேபோல் மர்மமான கார் மோதுகிறது. அதில் சம்பவ இடத்திலேயே சயானின் மனைவியும், மகளும் மரணம் அடைகிறார்கள். கொடநாடு எஸ்டேட்டின் சி.சி.டி.வியை கையாளும் தினேஷ்குமார் என்பவர் மர்மமான முறையில் தற்கொலை செய்து கொள்கிறார்.
இந்த வகையில் ஒரு கொள்ளை ஒரு கொலை மூன்று மர்ம மரணங்கள் - ஒரு தற்கொலை ஆகியவை நடந்த மர்மமான வழக்கு இது. பழனிசாமி ஆட்சி செய்த போதுதான் இது நடந்தது. அ.தி.மு.க. ஆட்சியில் சிலரை கைது செய்து கணக்குக் காட்டி முடிக்கப் பார்த்தார்கள். தி.மு.க. ஆட்சி மாறியதும், வழக்கின் விசாரணை உண்மையாக நடக்கத் தொடங்கியது.
ஜெயலலிதாவின் கார் ஓட்டுநரான கனகராஜின் அண்ணன் தனபால் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், “கொடநாடு கொலை, கொள்ளை, மர்ம மரணங்கள் தொடர்பாக எடப்பாடி பழனிசாமியிடம் விசாரணை நடத்த வேண்டும். கொடநாட்டில் இருந்து 5 பைகள் நிறைய ஆவணங்களை எனது தம்பி கனகராஜ் கொண்டு வந்தார்.
பெருந்துறையில் வைத்து அதனை என்னிடம் காண்பித்தார். அதில், 3 பைகள் சங்ககிரிக்கும், 2 பைகள் சேலத்திற்கும் எனது தம்பி எடுத்துச் சென்று கொடுத்தார். அப்போது சயானும் உடனிருந்தார். எடப்பாடி பழனிசாமி சொல்லித்தான் இதனை எனது தம்பி செய்தார். ஆனால் எனது தம்பியை பலிகடாவாக்கிவிட்டனர். தற்போது எனது உயிருக்கும் ஆபத்து ஏற்பட்டுள்ளது. எனவே போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும்” என்று சொன்னார். இதற்கெல்லாம் பழனிசாமி இதுவரை விளக்கம் அளிக்கவில்லை.

என்ன சொன்னார் தெரியுமா? 'கனகராஜ், ஜெயலலிதாவின் கார் டிரைவர் அல்ல; சசிகலாவின் டிரைவர்தான்' என்று விளக்கம் அளித்தார் பழனிசாமி கனகராஜ், யார் காரை ஒட்டினார் என்பதல்ல பிரச்சினை. அவரது மரணத்தில் இருக்கும் மர்மம்தான் பிரச்சினை.
“கனகராஜை, ஜெயலலிதாவின் கார் டிரைவர் என இனி யாரும் சொல்லக் கூடாது. அவர் சசிகலாவுக்கு கார் டிரைவராக இருந்தவர். கனகராஜை, ஜெயலலிதாவின் கார் டிரைவர் என்று இனி யாராவது சொன்னால் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்வோம். கொடநாடு பற்றி யாரும் பேசக் கூடாது. அந்த வழக்கு நீதிமன்றத்தில் இருக்கிறது" - இப்படி பேட்டி தந்தவர்தான் பழனிசாமி.
இந்த வழக்கை தி.மு.க. ஆட்சியில் மீண்டும் விசாரிக்கத் தொடங்கியதும் சட்டமன்றத்துக்கு கருப்புச் சட்டையுடன் வந்து பிரச்சினை செய்தார் பழனிசாமி. உடனே ஓடிப் போய் ஆளுநரிடம் மனுக் கொடுத்தார் பழனிசாமி. 'கொடநாடு வழக்கை மீண்டும் விசாரிக்கக் கூடாது, என்னைக் கைது செய்ய சதி நடக்கிறது' என்று பேட்டி கொடுத்தார். கொடநாடு வழக்கில் பழனிசாமியின் பதற்றம் இன்று வரை தொடர்கிறது.
ஜெயலலிதாவின் கொடநாடு வழக்குக்கே நீதி சொல்ல முடியாத பழனிசாமிதான் இன்று சட்டம் ஒழுங்கைச் சொல்லி வெட்கம் இல்லாமல் ஆர்ப்பாட்டம் நடத்திக் கொண்டு இருக்கிறார்.
கள்ளச்சாராயம் பற்றி கப்சாக்களை அடித்து விடுகிறார். 1993 ஆம் ஆண்டு ஜெயலலிதா ஆட்சியில் விழுப்புரத்தில் 9 பேரும், திருத்தணியில் 7 பேரும் கள்ளச்சாராயத்தால் இறந்தார்கள். 1996 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஜெயலலிதா ஆட்சியில் உறையூரில் 10 பேர் இறந்தார்கள். 2001 ஆம் ஆண்டு பண்ருட்டியில் கள்ளச் சாராயத்துக்கு 52 பேர் பலியானார்கள். அதே ஆண்டில் செங்குன்றம் பகுதியில் 30 பேர் இறந்தார்கள்.

செங்குன்றம் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 19 பேர் மீதான விசாரணையில் அ.தி.மு.க. ஆட்சி சரியான முறையில் செய்யாததால் 2013ஆம் ஆண்டு 19 பேரையும் வழக்கில் இருந்து விடுதலை செய்தது நீதிமன்றம். “35 பேர் கள்ளச்சாராயத்தால் பலியானது வேதனையானது என்றால் அதை நிரூபிக்க அரசு தரப்பு போதுமான ஆதாரங்களை தாக்கல் செய்யவில்லை" என நீதிபதி எம்.வி.முரளிதரன் தீர்ப்பில் குறிப்பிட்டு இருந்தார். இதுதான் அ.தி.மு.க. ஆட்சியின் லட்சணம் ஆகும்.
இதே பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது 2017 ஜூலை 9 அன்று பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் கள்ளச்சாராயம் அதிகமாக விற்பனை என நியூஸ் 7 செய்தி வெளியிட்டது.
⚫2018 மே 19- நாகை மாவட்டம் பட்டப்பகலில் கல்லூரிக்கு அருகில் 20 ரூபாய்க்கு சாராயம் விற்கும் சிறுவர்கள் என்ற வீடியோவை நியூஸ் 13 வெளியிட்டது.
⚫2019 நவம்பர் 3 - கல்வராயன் மலைப் பகுதியில் பள்ளிச் சீருடையில் கள்ளச்சாராயம் விற்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.
2019 நவம்பர் 14 - சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் விற்பனை நடந்ததாக ராஜ் டி.வி. செய்தி வெளியிட்டது.
⚫2019 ஜனவரி 11 - பண்ருட்டி அருகே கீழ்மாம்பட்டு கிராமத்தில் 750 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப் பட்டது. முடப்பள்ளி கிராமத்தைச் சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகர் சிவக்குமார் மீது வழக்குப் போடப்பட்டது.
-தொடரும்!






