முரசொலி தலையங்கம்

நீங்கள் சொல்லும் தேசியம் எது? : குடியரசுத் துணைத் தலைவருக்கு கேள்வி எழுப்பிய முரசொலி!

எதேச்சதிகார உணர்வை அவர் தேசியம் என்றால் அந்த தேசியம் தமிழ் மண்ணில் முளைக்காது.

நீங்கள் சொல்லும் தேசியம் எது? : குடியரசுத் துணைத் தலைவருக்கு கேள்வி எழுப்பிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (25-02-2026)

எது தேசியம் என்பதுதான் குழப்பம்!

“தமிழகத்தில் தேசியம் ஒருபோதும் வீழாது” என்று முழங்கி இருக்கிறார் குடியரசுத் துணைத் தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணன் அவர்கள். “யார் எத்தனை முயற்சிகள் செய்தாலும் தேசியம் தமிழ் மண்ணில் வீழாது” என்றும் பொடி வைத்துள்ளார் குடியரசுத் துணைத் தலைவர்.

தேசியம் என்பதை இந்திய நாட்டின் மீதான பற்று என்ற அடிப்படையில் குடியரசுத் துணைத்தலைவர் அவர்கள் சொல்லி இருந்தால், ‘ஆமாம்! அந்த தேசியம் வீழாது’ என்பது உண்மைதான்.

இந்தியாவின் விடுதலைப் போராட்டத்துக்கு மகத்தான பங்களிப்பைச் செலுத்திய மண் தமிழ் மண் ஆகும்.

இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளைப் போற்றிய அரசு திராவிட முன்னேற்றக் கழக அரசு.

பாஞ்சாலங்குறிச்சியில் கட்டபொம்மனுக்கு கோட்டை. பாரதியின் இல்லம் அரசு இல்லம் ஆனது. பெருந்தலைவர் காமராசர் மணிமண்டபம். மூதறிஞர் இராஜாஜி நினைவாலயம். தில்லையாடி வள்ளியம்மாள் மணிமண்டபம். வீரவாஞ்சியின் உறவினருக்கு நிதி. வ.உ.சி. இழுத்த செக்கு நினைவு சின்னம் ஆனது. பசும்பொன் தேவருக்கு மணிமண்டபம். விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு இலவச பேருந்துப் பயணம். தியாகிகள் மணிமண்டபம். சுதந்திரப் பொன்விழா நினைவுச் சின்னம். பூலித்தேவன் நினைவு மண்டபம். தியாகி விஸ்வநாததாஸ் வாழ்ந்த இல்லம் புதுப்பிப்பு. மாவீரன் சுந்தரலிங்கம் வாரிசுகளுக்கு வீடு.

நேதாஜிக்கு சிலை. சிப்பாய் கலகத்துக்கு நினைவுத்தூண்.- இப்படி நாட்டுக்காக உழைத்த தியாகிகளைப் போற்றிய இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம்.

இந்த வரிசையில் இன்றைய திராவிட மாடல் ஆட்சியிலும் தொடர்ந்துதியாகிகளைப் போற்றி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சுதந்திர தினத்தின் 75 ஆவது ஆண்டு பெருவிழா வெகுசிறப்பாகக் கொண்டாடப்பட்டது. செக்கிழுத்த செம்மல் -கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரை பெருமைப்படுத்தும் வகையில் 13 அறிவிப்புகள் வெளியிடப்பட்டது.வ.உ.சி. மறைந்த நவம்பர் 18 தியாகத் திருவுருவ நாளாகஅறிவிக்கப்பட்டுள்ளது. மகாகவி பாரதியார் மறைந்த நூற்றாண்டின் நினைவை முன்னிட்டு 14 அறிவிப்பு செய்யப்பட்டது. உத்திரப்பிரதேச மாநிலம் காசியில் பாரதியார் வாழ்ந்த வீட்டை பராமரிக்கவும் புதுப்பிக்கவும் அரசு சார்பில் 18 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டு பணிகள் முடிந்து ஒப்படைக்கப்பட்டது.

கிண்டி காந்தி மண்டபத்தில் வீரபாண்டிய கட்டபொம்மன் திருவுருவச் சிலையும், மருது சகோதரர்கள் சிலையும் அமைக்கப்பட்டுள்ளது. கடலூர் அஞ்சலை அம்மாள் சிலை வைக்கப்பட்டுள்ளது. விடுதலைப் போராட்ட வீரர்களின் நினைவிடங்களில் ஒலி, ஒளி காட்சிகள் அமைத்திட நடவடிக்கை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

எனவே தேசியத் தலைவர்களைப் போற்றுவதில் தமிழ்நாடு எப்போதும் முன்னணியில் உள்ளது. இதனை தேசியம் என்று சொன்னால் அந்த தேசிய உணர்வு தமிழ் மண்ணில் பட்டுப் போகாது. ஆனால் மதவாதத்தை, பெரும்பான்மைவாதத்தை, ஒற்றையாட்சித் தன்மையை, எதேச்சதிகார உணர்வை அவர் தேசியம் என்றால் அந்த தேசியம் தமிழ் மண்ணில் முளைக்காது.

தேசியம் என்ற பெயரால் ஒற்றை மொழியை இந்திய மொழி ஆக்க முடியாது. தேசியம் என்ற பெயரால் ஒற்றை மதத்தை இந்திய மதம் ஆக்க முடியாது. தேசியம் என்ற பெயரால் ஒற்றைப் பண்பாட்டை இந்தியப் பண்பாடு ஆக்க முடியாது. தேசியம் என்ற பெயரால் மாநிலங்களை ஒழித்து, ஒற்றையாட்சியை நிலைநிறுத்த முடியாது. ஒற்றை மொழி, ஒற்றை மதம், ஒற்றைப் பண்பாட்டை தேசியம் என்றால் அது தமிழ் மண்ணில் முளைக்காது.

நீங்கள் சொல்லும் தேசியம் எது? : குடியரசுத் துணைத் தலைவருக்கு கேள்வி எழுப்பிய முரசொலி!

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யையே இத்தனை ஆண்டுகள் கழித்துத் தான் மாண்புமிகு சி.பி.ஆர். அவர்கள் பேசத் தொடங்கி இருக்கிறார்கள். இப்போதுதான் இவர்கள் வ.உ.சி.யைப் படிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். தியாகி வ.உ.சி.யை முழுமையாகப் படியுங்கள்.

சுயமரியாதைச் சமூகநீதிக்காக 1917 ஆம் ஆண்டு குரல் கொடுத்தவர் வ.உ.சிதம்பரனார் அவர்கள். சீர்திருத்த எண்ணம் கொண்டவர்களால் தொடங்கப்பட்ட சென்னை மாகாண சங்கத்தை உருவாக்கியவர். இதில் தான் வ.உ.சி.யுடன் பெரியாரும் இயங்கினார். 1920 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடந்த 26 ஆவது சென்னை மாநில அரசியல் மாநாட்டில், வகுப்புவாரி உரிமைத் தீர்மானத்தை வ.உ.சி. அவர்கள் கொண்டு வந்தார்கள்.

‘வகுப்புவாரி உரிமையானது நாட்டில் உள்ள ஒற்றுமையின்மை யையும்பகைமையையும் குறைக்கவல்லது’ என்கிறார் வ.உ.சி.’ நமது தேசத்தில் நிலவும் பிறப்பை ஆதாரமாகக் கொண்ட அநியாயமான ஜாதி வேற்றுமைகளையும் உயர்வு தாழ்வுகளையும் கடுமையாக நான் எதிர்க்கிறேன்’ என்றார்.

1936 நவம்பர் 18 ஆம் நாள் வ.உ.சி. மறைகிறார். அதே ஆண்டு மே 3 ஆம் நாள் அன்று திருச்சியில் பார்ப்பனரல்லாதார் மாநாடு நடக்கிறது. அது தொடர்பாக அனைவர்க்கும் ஒரு வேண்டுகோள் கடிதம் அனுப்புகிறார் வ.உ.சி.

‘‘பார்ப்பனரல்லாச் சகோதரர்களே! சாதி வேற்றுமை, மத வேற்றுமை, கட்சி வேற்றுமை, கோட்பாடு வேற்றுமை முதலியவற்றையெல்லாம் விடுத்து நீங்களெல்லாம் ஒன்று சேர்ந்து பார்ப்பனரல்லாதார்கள் சமூகத்தை முன்னிலைக்கும் தன்னிலைக்கும் கொண்டு வருவீர்களாக. உங்கள் அன்புள்ள வ.உ.சிதம்பரம் பிள்ளை”என்பதுதான் வ.உ.சி. விடுத்த வெளிப்படையான குரல். இதுதான் கப்பலோட்டிய தமிழனின் இறுதிக் குரல்.

அனைவரையும் உள்ளடக்கிய, யாரையும் புறக்கணிக்காமல், யாரையும் உயர்த்தாமல், தாழ்த்தாமல் எல்லார்க்கும் எல்லாம் என்பதுதான் தமிழ் மண்ணில் தளைக்க வேண்டும் என்று விரும்பியவர் வீர சிதம்பரனார்.அதனால்தான் எதிர்மறைச் சிந்தனைகள் தமிழ் மண்ணில் முளைப்பது இல்லை.

banner

Related Stories

Related Stories