
முரசொலி தலையங்கம் (04-02-2026)
ஒரு எஞ்சின் ஊழல் எஞ்சின்!
ஊழல் குறித்தும், வாரிசு அரசியல் குறித்தும் வாய்கிழியப் பேசுகிறார்கள் பிரதமர் மோடியும், உள்துறை அமைச்சர் அமித்ஷாவும். ஆனால்இந்த இரண்டும் மகாராஷ்டிரா மாநிலத்தில் கிழிந்து தொங்குகிறது.
மிகப்பெரிய ஊழல்வாதியான அஜித் பவாரின் மனைவிக்கு துணை முதலமைச்சர் பதவியைக் கொடுத்து பா.ஜ.க. ஆட்சியில் உட்கார வைத்ததில் பா.ஜ.க. வின் அரசியல் கயமை வெளிப்பட்டு விட்டது.
அஜித் பவாருக்கு அறிமுகம் தேவையில்லை. தன்னைக் காப்பாற்றிக் கொள்ள சரத் பவாரின் கட்சியை பலிகொடுத்தவர். தன் மீதான ஊழல் வழக்குகளை பா.ஜ.க.வை ஆதரிப்பதன் மூலமாக விடுவித்துக் கொண்டவர் அஜித் பவார். விமான விபத்தில் ஜனவரி 28 ஆம் தேதியன்று மிகச் சோகமான நிலையில் அவர் மரணம் அடைந்தார். மூன்று நாட்களுக்குள் அவரது மனைவி சுனேத்ரா பவாரை துணை முதலமைச்சர் ஆக்கி அழகு பார்த்துவிட்டது பா.ஜ.க.. அஜித் பவாரின் கட்சியைக் கபளீகரம் செய்வதற்காக பா.ஜ.க. எதையும் செய்யும் என்பதற்கு இது உதாரணம்.
பிரிந்து இருந்த சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் தனது பிரிவை இணைக்க முடிவெடுத்து இருந்தார் அஜித் பவார். இணைப்புக்கான அறிவிப்பை பிப்ரவரி 12 ஆம் தேதியன்று வெளியிடப்போவதாகச் சொல்லி இருந்தார் அஜித் பவார். அதற்குள் அவரது மரணம்நடந்துவிட்டது.
பா.ஜ.க. கூட்டணியில் அங்கம் வகித்து துணை முதலமைச்சராக இருந்தாலும், சமீப காலமாக பா.ஜ.க. வுக்கும் அஜித் பவாருக்கும் மோதல் ஏற்பட்டது. உள்ளாட்சித் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு எதிராக சரத் பவாருடன் கூட்டணி வைத்து அஜித் பவார் போட்டியிட்டார். பா.ஜ.க. உள்ளாட்சிகளில் ஊழல் செய்வதாக அஜித் பவார் பேசி வந்தார். இதுவும் இப்போது அதிகமாகப் பேசப்படுகிறது.
அஜித் பவார் மரணம் அடைந்த உடன் அவர் மனைவி சுனேத்ரா பவார் அந்தக் கட்சியின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்படுகிறார். உடனடியாக அவருக்கு அஜித் பவார் வகித்த துணை முதலமைச்சர் பதவி தரப்படுகிறது. சுனேத்ரா பவார், அஜித் பவாரின் மனைவி மட்டுமல்ல; மகாராஷ்டிராவில் அமைச்சர் பதவியில் இருந்த பத்மசிங் பாட்டில் என்பவரின் சகோதரி . 2024 ஆம் ஆண்டு தான் நேரடி அரசியலில் நுழைந்தார். சரத் பவாரின் மகள் சுப்ரியா சுலேவை எதிர்த்து பாராமதி தொகுதியில் போட்டியிட்டு தோற்றார். பின்னர் மாநிலங்களவை உறுப்பினராக ஆக்கப்பட்டார். இப்போது கணவர் இறந்ததால் துணை முதல்வராகவும் ஆக்கப்பட்டுள்ளார். இதெல்லாம் பா.ஜ.க. கண்களுக்கு வாரிசு அரசியலாகத் தெரியவில்லையா? மோடி ஆசீர்வதிப்பது வாரிசு அரசியல் இல்லையா?
இவை அனைத்தையும் விட முக்கியமாக அஜித் பவாரின் ஊழல் முகம் இந்தியா அறிந்ததே!
சிவசேனா (உத்தவ் அணி) எம்.பி.யான சஞ்சய் ராவத் எக்ஸ் தளத்தில்விடுத்துள்ள செய்தியில், “அஜித் பவாருக்கு புகழஞ்சலி செலுத்த செய்தி தாள்களில் முழு பக்க விளம்பரம் செய்துள்ளது பா.ஜ.க.. இந்த விளம்பரத்தால் ஒன்றும் ஆகப்போவது இல்லை. அஜித்பவார் மீதான ரூ.70,000 கோடி மதிப்பிலான ஊழல் குற்றச்சாட்டுகளை பிரதமர் மோடியம், மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர பட்னாவிசும் திரும்பப் பெறுவதே, பா.ஜ.க. அவருக்கு செலுத்தும் உண்மை- யான புகழஞ்சலி” என்று கிண்டல் அடித்துள்ளார். இது கிண்டல் அல்ல; உண்மைதான்.

கடந்த 2021, அக்டோபர் 7ஆம் தேதி, மகாராஷ்டிரா மாநிலத்தின் துணை முதல்வராக இருந்த தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் வீட்டில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. அவரது மூன்று சகோதரிகளின் வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது. மும்பை, புனே, கோவா, ஜெய்ப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ள அஜித் பவாருக்குச்சொந்தமான, நெருக்கமானவர்களின் வீடுகள், அலுவலகங்கள் என 70 இடங்களில் வருமான வரித்துறை சோதனை நடத்தியது. சோதனையின் முடிவில், 180 கோடி ரூபாய் அளவுக்கு வருமான வரிக் கணக்கில் காட்டப்படாத கருப்புப்பணம் கண்டறியப்பட்டதாகவும், 2.13 கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகள், 4.32 கோடி ரூபாய் ரொக்கப்பணம் கைப்பற்றப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. மேலும், அஜித் பவாருக்கு, அவர் பெயரிலும் அவரதுபினாமிகள் பெயரிலுமாக மொத்தம் 1, 000 கோடி ரூபாய் அளவுக்கு சொத்துமதிப்பு உள்ளதாக வருமான வரித்துறை செய்தியை கசிய விட்டது. ‘என்னை மிரட்ட முடியாது' என்றார் அஜித் பவார். இப்போது அஜித் பவார் பயந்துவிட்டார். அவர் மீது ரெய்டு நடத்திய பா.ஜ.க. அஜித் பவாருக்கு துணை முதலமைச்சர் பதவியை வழங்கியது. பா.ஜ.க.வின் இரட்டை எஞ்சி- னில் ஒரு எஞ்சின் ஊழல் எஞ்சின் என்பதற்கு இது ஒரு உதாரணம்.
இன்றைக்கு துணை முதலமைச்சர் ஆக்கப்பட்டுள்ளாரே சுனேத்ரா பவார், அவர் மீதான வழக்குகளை 2024 ஆம் ஆண்டு ஏப்ரலில் விசாரணை இல்லாமல் முடித்து வைத்ததும் பா.ஜ.க. அரசுதான். சுனேத்ரா பவார் மீது 25 ஆயிரம் கோடி மதிப்பிலான வழக்கு மும்பை பொருளாதாரக் குற்றப்பிரிவால் பதியப்பட்டது. அந்த வழக்கை முடித்துக் கொண்டோம் என்று நீதிமன்றத்தில் பா.ஜ.க. அரசு சொல்லி விட்டது.
கடந்த 2005 முதல் 2010 வரை மகாராட்டிர மாநில கூட்டுறவு வங்கி, ரிசர்வ் வங்கியின் விதிகளை மீறி சர்க்கரை ஆலைகள் உள்ளிட்ட நிறுவனங்களுக்கு கடன் வழங்கியதாகப் புகார் எழுந்தது. இதனால், வங்கிக்கு 25 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டதாக புகார் கூறப்பட்டது. இது தொடர்பான மனுவை விசாரித்த மும்பை உயர் நீதிமன்றம் விசாரணை நடத்த உத்தரவிட்டது. அதன் பேரில், 2019ஆம் ஆண்டு அஜித்பவார், அவரது மனைவி சுனேத்ரா பவார் மற்றும் அவர்களது உறவினர் ரோகித் பவார் உள்ளிட்டோர் மீதும் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் முறைகேடு ஏதுமில்லை என்று பா.ஜ.க. அரசே சொல்லி விட்டது. சுனேத்ரா பவார் ஆளும் கூட்டணி சார்பில் அஜித்பவார் பா.ஜ.க. கூட்டணியில் இணைந்து, அவரது மனைவி பாராமதி தொகுதியில் போட்டியிடும் சூழலில், இந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.
ஊழல்வாதிகளை சுத்தம் செய்யும் பா.ஜ.வின் 'வாஷிங் மெஷின்' வேலைகள் இவை. ‘யாரும் எந்த பிராடும் செய்யலாம், பா.ஜ.க.வில் இருந்து செய்யுங்கள்' என்பதுதான் பா.ஜ.க. ஃபார்முலா!








