
அறிவுத் திருவிழா!
முரசொலி தலையங்கம் (08-11-2025)
துணை முதலமைச்சர், கழக இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி அவர்களின் முன்னெடுப்பால் தலைநகர் சென்னையில், வள்ளுவர் கோட்டத்தில் ‘அறிவுத் திருவிழா’ நடைபெற இருக்கிறது. அதனைக் கொள்கைத் திருவிழாவாக ஏற்பாடு செய்துள்ளார் துணை முதலமைச்சர்.
பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார், பாவேந்தர் பாரதிதாசன், பேரறிஞர் அண்ணா, தமிழினத் தலைவர் கலைஞர், இனமானப் பேராசிரியர் ஆகியோர் வழித்தடத்தில் இயக்கத்தையும், இயக்கத்துக்குக் கிடைத்த ஆட்சிப் பொறுப்பையும் வைத்து நல்லாட்சி நடத்தி வருகிறார் திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தலைவர் கலைஞர் அவர்கள் இருந்து நடத்தினால் எத்தகைய அளவுக்கு கழகத்தை நடத்துவாரோ அதைப் போலவே நடத்தி வருகிறார் தலைவர்.
‘நான், எனது’ என்று கருதாமல் ‘நமது’ என்று அனைவரையும் உள்ளடக்கிய ‘திராவிட மாடல்’ ஆட்சியை நடத்தி வருகிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அனைத்துத் துறைகளிலும் வளர்ச்சிமிக்க தமிழ்நாடாக உயர்த்திக் காட்டி வருகிறார். அதே வழியில் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் துணை முதலமைச்சராகப் பொறுப்பேற்று, சிறப்புத் திட்டங்கள் மூலமாக சிறப்பான தமிழ்நாட்டை உருவாக்கி வருகிறார்.
‘திரும்பத் திரும்ப கொள்கையைப் பேசுங்கள்’ என்று தலைவர் கலைஞர் கட்டளையிட்டதை நிறைவேற்றி வருகிறார் இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி. புதிய புதிய இளைஞர்களை கழகத்தில் சேர்த்து, அவர்களுக்கு கொள்கை உரம் ஊட்டி வருகிறார். கழகத்துக்கு எதிராக அவதூறுகள் முன்வைக்கப்பட்டபோது அதை முறியடிக்கும் விதத்தில் ‘பொய்ப் பெட்டி’ என்னும் நிகழ்ச்சிகளை நடத்தினார். நீட் எதிர்ப்பு கையெழுத்து இயக்கம், டெல்லியை எட்டக் காரணமாக அமைந்தார். பாசறைக்கூட்டங்கள், ‘முரசொலி’ பாசறை பக்கம், முத்தமிழறிஞர் பதிப்பகம், ‘என் உயிரினும் மேலான’ என்கிற பேச்சுப்போட்டி, கலைஞர் மாணவப் பத்திரிகையாளர் திட்டம், கலைஞர் நிதிநல்கைத் திட்டம் என்று கொள்கையை விதைத்தபடியே இருக்கிறார் மாண்புமிகு உதயநிதி.
அந்த வரிசையில்தான் ‘அறிவுத் திருவிழா’வை ஏற்பாடு செய்துள்ளார். இதில், ‘காலத்தின் நிறம் கருப்பு சிவப்பு’ என்ற நூல் மாண்புமிகு முதலமைச்சர் அவர்களால் ( இன்று, நவம்பர் 8) வெளியிடப்பட உள்ளது. அரசியல், சமூகம், பண்பாடு, பொருளாதாரம் ஆகிய நான்கு முக்கிய முனைகளில் திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றிய, ஆற்றிவரும் பங்களிப்பை மொத்தமாகத் தொகுத்துச் சொல்வதாக இந்நூலை உருவாக்கி இருக்கிறார் துணை முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டின் வளர்ச்சியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் பங்களிப்பு பெருமளவில் அமைந்துள்ளதைத் தொகுத்துச் சொல்லி மலைப்பை ஏற்படுத்துகிறது இந்தத் தொகுப்பு.
1120 பக்கங்கள் கொண்ட இந்நூலில் கழகத் தலைவரின் செறிவான பேட்டியும், முன்னணியினரின் கடந்த கால நினைவுகளும் அருமையாகப் பதிவாகி உள்ளன. அகில இந்தியத் தலைவர்கள், தங்களது பார்வையில் கழகத்தின் பணியை அளவிடுகிறார்கள். பல்வேறு துறைகளின் அறிஞர்கள், சமூகச் செயற்பாட்டாளர்கள் தி.மு.க.வின் முன்னெடுப்புகளை, சாதனைகளை, விளைவுகளை அலசிச் சொல்கிறார்கள்.
‘இருவண்ணக் கொடிக்கு வயது 75’ என்ற தலைப்பில் கண்காட்சியும் கருத்தரங்கும் நடைபெற இருக்கின்றன. பல்வேறு தலைப்புகளில் அறிஞர் பெருமக்கள் உரையாற்ற இருக்கிறார்கள்.
‘முற்போக்குப் புத்தகக் கண்காட்சி’ நவம்பர் 8 முதல் 16 வரை நடைபெறுகிறது. அரசியல் புத்தகங்களை வெளியிடும் 50 பதிப்பகங்கள் இந்தக் கண்காட்சியில் பங்கெடுக்கின்றன. அனைத்து நூல்களுக்கும் பத்து விழுக்காடு விலைத் தள்ளுபடி வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
திராவிட இயக்கம் கலை, இலக்கிய இயக்கம் என்பதால் மாலை நேரம் முழுக்கவே கலை நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்துள்ளார் துணை முதலமைச்சர். புத்தர் கலைக்குழு, கோவன் கலைக்குழு, புதுகை பூபாளம் கலைக்குழு, நிகர் கலைக்கூடம் ஆகியவை கலை நிகழ்ச்சிகளை நடத்துகின்றன. ‘மந்திரமா? தந்திரமா?’ என்ற பகுத்தறிவு மேஜிக் நிகழ்ச்சியும் நடக்க இருக்கிறது.

அரசியல், கலை, இலக்கியம், பண்பாடு ஆகியவற்றின் மேன்மைக்காகத் தொடங்கப்பட்ட இயக்கத்தை அதே வேகத்தோடு, அதே விவேகத்தோடு, அதே உணர்ச்சியோடு, அதே அக்கறையோடு கொண்டு செலுத்த வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்தோடு துணை முதலமைச்சர் மாண்புமிகு உதயநிதி அவர்களால் முன்னெடுக்கப்பட்ட இந்த ‘அறிவுத் திருவிழா’ திராவிட இயக்க வரலாற்றில் முக்கியமான நிகழ்வாக அமைய இருக்கிறது.
“போர்க்களங்கள் மாறலாம், போர் தொடர்கிறது” என்கிறார் இளைஞர் அணிச் செயலாளர். போரும், போர்க்களமும் எத்தகையது என்பதை உணர்த்தப் போகிறது இந்த அறிவுத் திருவிழா.
‘நம்பிக்கைகளுக்கு அல்ல, அறிவுக்கு முக்கியத்துவம் கொடு’ என்று சொல்லும் இயக்கம் இது. அதனால்தான் இந்த இயக்கம், அடிப்படைவாதிகளால் விமர்சிக்கப்படுகிறது. ஆத்திரம் கொள்கிறார்கள். அவதூறுகளை வீசுகிறார்கள். பொய்களைப் பரப்புகிறார்கள். புனைவுகளை வரலாறு ஆக்குகிறார்கள். இவை எல்லாம் செய்கிறார்களே தவிர, அதற்கான விளைவுகள் ஏதுமில்லை. பதர்களாகவே போய்விடுகிறார்கள்.
மக்கள் வளர்ச்சிக்கானதாக கொள்கை அமையும்போது அந்தக் கொள்கையை மக்களே காப்பாற்றுவார்கள் என்பதன் அடையாளம்தான் திராவிட இயக்கத்தின் இருப்பும், வெற்றியும். மக்களின் வேரில் திராவிடப் பூ பூக்கிறது. மலர்கிறது. காய்க்கிறது. கனியாக பலனை அந்த மக்களுக்கே தருகிறது. இந்தப் பிணைப்பை அறுக்கவே பிளவுவாதிகள் துடிக்கிறார்கள். காலம், உதயநிதிகளை உருவாக்குவதால் பிளவுவாதிகளின் எண்ணங்கள் நிறைவேறுவது இல்லை. நிறைவேறப் போவதும் இல்லை.
அறிவுத் திருவிழாவில் பங்கேற்க வாருங்கள்! கொள்கைதான் இயக்கத்தின் வலிமை என்ற வகையில் நடைபெறும் அறிவுத் திருவிழா, உணர்ச்சித் திருவிழாவாக அமையட்டும்!






