
அரசைத் திருடும் ஆபரேஷனை தேர்தல் கமிஷன் கமுக்கமாகச் செய்து கொண்டு இருக்கிறது. அவர்கள் நேர்மையான தேர்தலை நடத்தவில்லை. வாக்குகளைத் திருடிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. உண்மையாக வெல்லவில்லை. இது போன்ற திருட்டுத் தனங்கள் மூலமாகவே வெல்கிறது என முரசொலி தலையங்கத்தில் விமர்சித்துள்ளது.
‘அரசைத் திருடும் ஆபரேஷன்’ என்ற தலைப்பில் முரசொலி வெளியிட்டுள்ள தலையங்கம் பின்வருமாறு:-
பா.ஜ.க.வை விட அதிகமாக அசிங்கப்பட்டு நிற்பது இந்தியத் தேர்தல் ஆணையம்தான். அங்கொன்றும் இங்கொன்றுமாக ஏதாவது தவறு நடக்கும். தேர்தல் ஆணையத்தின் கவனத்துக்கு இதனைக் கொண்டு சென்றால் உடனடியாக அவை தடுக்கப்படும். அல்லது வழக்குகள் தாக்கல் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்படும். ஆனால் கடந்த சில ஆண்டுகளாக தவறுகளைச் செய்வதே தேர்தல் ஆணையமாக இருக்கிறது. அதனை ஆதாரங்களுடன் அம்பலப்படுத்தி வருகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அதற்கு சாதாரணமாக, ஒப்புக்குக்கூடப் பதில் அளிப்பது இல்லை தேர்தல் ஆணையம்.
பீகார் மாநிலத்தில் பல லட்சம் வாக்காளர்களின் வாக்குரிமை பறிக்கப்பட்டுள்ளது. இதற்கு முறையான பதிலை தேர்தல் ஆணையம் சொல்லவில்லை. கர்நாடக மாநிலத்தில் ஒரே ஒரு தொகுதியை மட்டும் எடுத்து வைத்து அங்கு வாக்குத் திருட்டு எப்படி நடந்துள்ளது என்பதை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி அவர்கள் அம்பலப்படுத்தினார். இதற்கு இதுவரை தலைமை தேர்தல் ஆணையர் பொறுப்பான பதிலை இன்னும் அளிக்கவில்லை. பதிலாக, ராகுல் காந்தியை மிரட்டுவதைப் போல நடந்து கொண்டார் தேர்தல் ஆணையர்.

“வாக்குத் திருட்டு குற்றச்சாட்டு தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஏழு நாட்களுக்குள் தனது கையெழுத்துடன் உறுதிமொழிப் பத்திரம் தாக்கல் செய்தார் செய்ய வேண்டும். தவறினால், அக்குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என்பது உறுதி செய்யப்படும். அதற்காக நாட்டு மக்களிடம் அவர் மன்னிப்புக் கேட்க வேண்டும்” என்று தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதிலளித்தார்.
ராகுல் காந்தி எந்தத் தொகுதியைச் சொல்கிறாரோ, அதில் முறைகேடு நடக்கவில்லை என்று ராகுலைப் போலவே செய்தியாளர் கூட்டம் நடத்தி, அவர் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் செய்து காட்டியதைப் போல தலைமைத் தேர்தல் ஆணையரும் பவர்பாய்ண்ட் பிரசண்டேஷன் நடத்தி இருக்க வேண்டாமா? அதைச் செய்யவில்லை. ராகுல் காந்தியின் குற்றச்சாட்டை, தோளில் விழுந்த தூசைப் போலத் தள்ளிவிட்டார் தேர்தல் ஆணையர்.
நேற்றைய தினம் அடுத்த ஆதாரத்தை அள்ளி வீசுகிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. அரியானா மாநிலத்தில் 25 லட்சம் வாக்குகள் திருடப்பட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அந்த மாநிலத்தில் மொத்தம் உள்ள வாக்குகளில் ஏட்டில் ஒன்று போலியானது என்றும் அவர் சொல்லி இருக்கிறார்.
அரியானா முழுவதும் 5.21 லட்சம் போலி வாக்காளர்கள் உள்ளதாகச் சொல்லி இருக்கிறார்கள். 93 ஆயிரம் வாக்குகள் போலியான முகவரிக்கு இருப்பதாகவும் சொல்கிறார். இதை வைத்து பார்க்கும் போது அங்கு நடந்த தேர்தலையே போலியான தேர்தல் என்று தான் சொல்ல வேண்டும்.
ராகுல் சொன்னதில் அதிர்ச்சியான தகவல் என்ன என்றால், பிரேசில் பெண் ஒருவரைப் பற்றிச் சொன்னது ஆகும். “பிரேசில் நாட்டைச் சேர்ந்த பெண்ணின் பெயரை இந்தியாவின் அரியானாத் தேர்தலில் வாக்களித்துள்ளார். ஹரியானா மாநில வேட்பாளர் பட்டியலில் சேர்த்தது எப்படி?” என்று கேட்கிறார் ராகுல். இதற்கு தேர்தல் ஆணையர்தான் பதில் சொல்ல வேண்டும். பிரதமரும் சொல்லலாம். உள் அமைச்சரும் சொல்லலாம்.
அரியானா மாநிலத்தில் மொத்த வாக்காளர்கள் 2 கோடி பேர். திருடப்பட்ட வாக்குகள் எண்ணிக்கை 25 லட்சம். அரியானாவில் மொத்தம் உள்ள வாக்குகளில் 12.5 சதவீதம் வாக்குகள் திருடப்பட்டுள்ளன. ஏட்டில் ஒரு வாக்கு அரியானா சட்டமன்றத் தேர்தலில் கள ஓட்டு. இரண்டுக்கு மேல் பதிவான வாக்குகளை அழிக்கும் மென்பொருள் தேர்தல் ஆணையத்திடம் உள்ளது, அதை ஏன் பயன்படுத்தவில்லை? – என்று படபடவென கேள்வி கேட்கிறார் ராகுல் காந்தி. இந்த எந்தக் கேள்விக்கும் பதில் இல்லை. வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட குடும்பத்தினரை நேரடியாக நேரலை செய்து, அவர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு உள்ளார் தெரிவித்தார்.

•அரியானாவில் ராய் சட்டமன்றத் தொகுதியில் 10 வாக்குச் சாவடிகளில் 22 முறை ஒரே நபர் வாக்களித்து உள்ளார்.
•அரியானா முழுவதும் வாக்காளர் பட்டியலில் 1,22,000 போலி புகைப்படங்கள் உள்ளன.
•இல்லாத ஒரு முகவரியில் 501 வாக்காளர்கள் உள்ளனர்.
– இவை எல்லாம் ராகுல் அம்பலப்படுத்தியதில் சில துளிகள்.
இதற்கு ராகுல் காந்தி அருமையான பெயரை வைத்துள்ளார். ‘அரசைத் திருடும் ஆபரேஷன்’ என்று பெயர் சூட்டி இருக்கிறார். அரசைத் திருடும் ஆபரேஷனை தேர்தல் கமிஷன் கமுக்கமாகச் செய்து கொண்டு இருக்கிறது. அவர்கள் நேர்மையான தேர்தலை நடத்தவில்லை. வாக்குகளைத் திருடிக் கொண்டு இருக்கிறார்கள். பா.ஜ.க. உண்மையாக வெல்லவில்லை. இது போன்ற திருட்டுத் தனங்கள் மூலமாகவே வெல்கிறது.
மகாராஷ்டிரா, அரியானா சட்டமன்றத் தேர்தல்களிலும், மக்களவைத் தேர்தல்களிலும் வாக்கை பா.ஜ.க. திருடியது, இப்போது பீகார் தேர்தலிலும் திருட விரும்புகிறது. இதைத் தான் மற்ற மாநிலங்களிலும் செய்ய நினைக்கிறார்கள். ஆனால் மக்களை விழிப்படைய வைத்துள்ளது ராகுல் காந்தியின் பேட்டிகள்.
“இளைஞர்களே, நான் சொல்வதைக் கவனமாகக் கேளுங்கள். உங்களது எதிர்காலத்தைப் பற்றித்தான் நான் தற்பொழுது பேசுகிறேன். வாக்குரிமையை நிலைநாட்டுவதற்காகத்தான் பேசுகிறேன்” என்று சொல்லி இருக்கிறார் ராகுல் காந்தி. இந்தியாவில் ஜனநாயகத்தை நிலைநாட்டுவதற்கு முன், மக்களாட்சியை நிலை நிறுத்துவதற்கு முன்னதாக, அனைவரும் தங்களது வாக்குரிமையை நிலைநாட்ட வேண்டும்.






