முரசொலி தலையங்கம் (15-07-2025)
மக்களாட்சிக்கு வைக்கும் வேட்டு!
தேர்தல் ஆணையம், சந்தேகங்களுக்கு அப்பாற்பட்டதாக இருக்க வேண்டும். பொதுவானதாக, நடுநிலை தவறாததாக, நீதியின் அடையாளமாக இருக்க வேண்டும். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பிறகு இதுவும் பா.ஜ.க.வின் கிளை அமைப்புகளைப் போல ஆகிவிட்டது. இதனை காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, பகிரங்க குற்றச்சாட்டாக வைத்துள்ளார்.
“இந்தியத் தேர்தல் ஆணையம் தனது கடமையைச் செய்யாமல், பா.ஜ.க.வின் நலன்களுக்காக மட்டுமே பாடுபடுகிறது” என்ற குற்றம் சாட்டி இருக்கிறார் ராகுல் காந்தி.“மகாராஷ்டிரா மாநிலத்தில் வாக்காளர் பட்டியலில் நடந்த முறைகேடுகளே, அந்த மாநிலச் சட்டமன்றத் தேர்தலில்பா.ஜ.க.வுக்கு வெற்றி பெற்றுத் தந்தது. இத்தேர்தலுக்கு முன் வாக்காளர்பட்டியலில் ஒரு கோடி பேர் சேர்க்கப்பட்டது எப்படி என்ற கேள்விக்கு இதுவரை தேர்தல் ஆணையம் பதில் அளிக்கவில்லை. மகாராஷ்டிரா மாநில பாணியில், பீகார் சட்டமன்றத் தேர்தலிலும் முறைகேட்டில் ஈடுபட சதி செய்கிறார் பா.ஜ.க. அத்தகைய தேர்தல் திருட்டு முயற்சிகளை முறியடிக்க ‘இந்தியா கூட்டணி’ தீர்மானித்துள்ளது”என்று ராகுல் காந்தி சொல்லி இருக்கிறார்.
பீகாரில் ‘சார்’ எனப்படும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்த நடவடிக்கையை (சிறப்பு தீவிர திருத்தம் –எஸ்ஐஆர்) பீகார் அரசு எடுத்து வருகிறது. வீடு, வீடாகச் சென்று வாக்காளர் பட்டியலை சரிபார்த்து வருகின்றனர். அப்போது வாக்காளர்களுக்கு படிவங்கள் கொடுக்கப்படுகின்றன. அவற்றை வாக்காளர்கள் பூர்த்தி செய்து கொடுக்க வேண்டும்.
2003–ஆம் ஆண்டுக்குப் பிறகு வாக்காளர் பட்டியலில் சேர்ந்தவர்கள் இந்திய குடிமகன் என்பதற்கான பிறப்புச் சான்றிதழ் அல்லது பாஸ்போர்ட் உள்ளிட்ட 11 ஆவணங்களில் ஏதாவது ஒன்றை சமர்ப்பிக்க வேண்டும். இந்த ஆவணங்கள் இல்லை என்றால், அவர்களது பெற்றோர்களின் குடியிருப்பு ஆவணங்கள் ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட வேண்டும். இதனையும் வழங்காவிட்டால் வாக்காளர் பெயரை நீக்குவது குறித்து அந்தப்பகுதி வாக்குச்சாவடி அலுவலர் முடிவு செய்வார். 2003 ஆம் ஆண்டு வரை வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாத சுமார் 2.93 கோடி வாக்காளர்கள், வாக்களிக்கத் தகுதியானவர்கள் என்பதை நிரூபிக்க, குறிப்பிடப்பட்டுள்ளது 11 ஆவணங்களில் குறைந்தது ஒன்றையாவது தர வேண்டும். ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை போன்றவற்றை ஆதாரமாகத் தர முடியாது என்றும் சொல்லி விட்டார்கள். இதுதான் சதியின் உச்சம் ஆகும்.
அனைத்து எதிர்க்கட்சிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். ‘இந்தியா’ கூட்டணிக் கட்சிகள் சார்பில் பீகாரில் ஜூலை 9 ஆம் தேதி முழு அடைப்பு போராட்டம் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினர் வழக்கு தாக்கல் செய்தனர். நீதிபதிகள் சுதான்சு துலியா, ஜாய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 10 ஆம் தேதி இதனை விசாரித்தது.
பீகாரில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் போது வாக்காளர்களின் குடியுரிமை ஆவணமாக ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை ஆகியவற்றையும் ஏற்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உறுதியாகக் கட்டளையிட்டுள்ளது. தேர்தல் ஆணையத்தின் விரிவான பதிலைத் தக்கல் செய்யவும் உச்சநீதிமன்ற நீதிபதிகள் கட்டளையிட்டுத் துள்ளார்கள். இது தேர்தல் ஆணையத்தின் சதிச் செயல்களுக்கு ‘செக்’ வைப்பதாக அமைந்துள்ளது.
“வாக்காளர் பட்டியலை தீவிரத் திருத்தம் செய்யும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளதா? மேற்கொள்வது ஏன்? குடியுரிமை தொடர்பான விவகாரம், உள்துறை அமைச்சகத்தின் கீழ் வரும் நிலையில், இதில் தேர்தல் ஆணையம் ஏன் தலையிடுகிறது?”என்பது போன்ற கேள்விகளை உச்சநீதிமன்ற நீதிபதிகள் எழுப்பினார்கள்.
“குடிமக்களுக்கான அடையாள ஆவணமாக ஆதார் அட்டையை ஏற்க முடியாது” என்று இந்திய தேர்தல் ஆணையத்தின் வழக்கறிஞர் திரிவேதி சொல்லி இருக்கிறார். இதனை ஏற்க உச்சநீதிமன்ற நீதிபதிகள் மறுத்துவிட்டனர். ஆதார் அட்டையை அடையாள ஆவணமாக ஏற்கத் தான் வேண்டும் என்று கட்டளையிட்டார்கள் நீதிபதிகள்.
இந்திய அரசாங்கம் தரும் ‘ஆதார்’ என்ற அடையாள அட்டையையே செல்லாது என்று தேர்தல் ஆணையம் சொல்கிறது சத்தியாட்டம் நடக்கிறது என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
வாக்காளர் சரிபார்ப்பை, ‘இந்தியக் குடிமகனா?’ என்ற சரிபார்ப்பாக மாறிவிட்டது தேர்தல் ஆணையம். அப்படி மாற்றிவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. குடியுரிமைச் சட்டத்தையே வேறுபாணியில் கொண்டு வருகிறார்கள். அதுதான் உண்மை. பிறப்புச் சான்றிதழைக் கேட்பதன் மூலமாக குறிப்பிட்ட பிரிவினரை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்குவதற்கான சதியையே சட்டபூர்வமாக, வெளிப்படையாகச் செய்ய நினைக்கிறார்கள்.
பீகார் மாநிலத்தின் பிரச்சினையே இன்று முடிவடையாத நிலையில் நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் திருத்த பணியை இந்தியத் தேர்தல் ஆணையம் தொடங்கியுள்ளது உள்ளது.“வாக்காளர் பட்டியல் சிறப்புத் திருத்தம் என்ற பெயரால் புறவாசல் வழியாக நாடு முழுவதும் தேசிய குடிமக்கள் பதிவேட்டை தயாரிக்கும் பணி தேர்தல் ஆணையம் மேற்கொள்கிறது”என்று எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி இருக்கிறது. பா.ஜ.க.வால் நேரடியாகச் செய்ய முடியாததை, தேர்தல் ஆணையத்தின் மூலமாக மறைமுகமாகச் செய்ய நினைக்கிறார்கள்.
பீகார் மாநிலப் பிரச்சினையே இன்னும் தீர்க்கப்படவில்லை. உச்சநீதிமன்றம் எழுப்பிய கேள்விகளுக்கு இந்தியத் தேர்தல் ஆணையம் இன்று பதில் அளிக்கவில்லை. இது தொடர்பான வழக்கு ஜூலை 28 ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.
இந்த நிலையில் தேர்தல் ஆணையத்தை தனது எதேச்சதிகார எண்ணத்துக்கு பா.ஜ.க. இழுத்துச் செல்வது இந்திய மக்களாட்சிக்கு வேட்டு வைக்கும்செயல் ஆகும்.