முரசொலி தலையங்கம் (23-06-2025)
மீண்டும் எழுந்தது கோட்டம்!
திருவள்ளுவரையும் தி.மு.க.காரராக நினைத்து வள்ளுவர் கோட்டத்தை பாழ்படுத்தி வைத்திருந்தது கடந்த கால அ.தி.மு.க அரசு. 'வான்புகழ் கொண்ட வள்ளுவர் தான் ஈராயிரமாண்டு தமிழ்நிலத்தின் அறிவின் எழுச்சி' என்பதை உணர்த்தும் வகையில் மீண்டும் வள்ளுவர் கோட்டத்தை புதுப்பித்து இருக்கிறார் திராவிட நாயகன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
தமிழ்நாடு சட்டமன்றத்தில் குறளாசான் திருவள்ளுவர் படம் இடம்பெற்றுள்ளது. இதனை வைக்கக் காரணமாக இருந்தவர் கலைஞர் அவர்கள். ஓவியர் வேணுகோபால் சர்மா தீட்டிய அந்தப் படத்தை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் வைக்க நினைக்கிறார் கலைஞர். அது பக்தவத்சலம் ஆட்சி. ‘திருவள்ளுவர் படத்தை மன்றத்தில் வைக்க கனம் முதலமைச்சர் அனுமதிக்க வேண்டும்' என்றார் கலைஞர். ‘கனம் உறுப்பினர் தனது சொந்த செலவில் கொடுத்தால் வைக்கலாம்’ என்றார் முதல்வர். 'நானே தயாரித்துத் தருகிறேன்' என்றார் கலைஞர். மறுநாள் காட்சிகள் மாறியது. 'அரசே வைக்கும்' என்றார் முதல்வர். ‘யார் வைத்தால் என்ன? வள்ளுவர் உள்ளே வர வேண்டும்' என்றார் கலைஞர்.
பொதுப்பணித் துறையோடு சேர்த்து போக்குவரத்துக்கும் அமைச்சராக ஆனார் கலைஞர். தமிழகத்தில் ஓடும் பேருந்துகளில் திருவள்ளுவர் படத்தையும், குறளையும் எழுதி வைக்க உத்தரவிட்டார். சென்னை மயிலாப்பூரில் இருக்கும் திருவள்ளுவர் கோவிலைச் சீரமைத்தார் முதலமைச்சர் கலைஞர்.
மயிலை திருவள்ளுவர் கோவிலை விரிவுபடுத்த முடியாத வருத்தத்தில் விரிவான இடம் பார்த்து அவர் கண்டுபிடித்ததுதான் நுங்கம்பாக்கம். 15 ஏக்கர் நிலத்தை ஒதுக்கி எழுப்பினார் கோட்டம். 500 சிற்பிகள், 1990 ஊழியர்கள் இரவு பகல் பாராது 14 மாதங்களில் எழுப்பிய மாபெரும் கோட்டம் அது. 1974-75 ஆம் ஆண்டில் மொத்தச் செலவு 50 இலட்சம். 101 அடி உயரமுள்ள தேர் செய்து, அதில் கொண்டு போய் வள்ளுவரை உட்கார வைத்தார்.
‘சேர,சோழ,பாண்டியர் மூவேந்தர் மூளையில் உதிக்காத சிந்தனை இது' என்று சொன்னவர் கவிஞர் சுரதா. 1976 சனவரி 23 ஆம் நாள் கட்டுமானப்பணி மொத்தமும் முடிந்தது. பிப்ரவரியில் திறப்புவிழா. சனவரி 30 கழக ஆட்சி கலைக்- கப்பட்டது. 18 யானைகள், 133 குதிரைகள், 1330 தமிழாசிரியர்கள், தமிழ்ப்பேராசிரியர்கள் நடந்து வர ஊர்வலம் நடத்த திட்டமிட்டிருந்தார் கலைஞர் . சர்வாதிகாரம் அனைத்தையும் வீழ்த்தியது. கலைஞர் இல்லாமல் திறப்புவிழா நடந்- தது. மொத்தமே ஐந்து நிமிடங்கள். பேசிய இரண்டு பேரும் ஆங்கிலத்தில் பேசினார்கள். கலைஞர் வைத்த அடிக்கல்நாட்டு கல்வெட்டும் வெளியில் வீசப்பட்டது. ‘கல்லணை கட்டிய கரிகாலன் கல்வெட்டு வைக்கவில்லை. ஆனால் கல்லணை கட்டியவன் என்றால் கரிகாலனை தான் சொல்கிறது' என்று அன்று எழுதினார் கலைஞர்!
“கோட்டம் தீட்டப்படுகிறது, குறளோவியம் தீட்டப்படுகிறது” என்ற தலைப்பில் ‘முரசொலி'யில் (15.4.1976) ஒரு கடிதம் எழுதினார் தலைவர் கலைஞர். அது கடிதமல்ல காவியம். 'முரசொலி' நாளிதழில் இரண்டரைப் பக்கத்துக்கு அது வெளியானது.
"கல்லார்க்கும் கற்றவர்க்கும் களிப்பருளுங் களிப்பாய்- காணார்க்கும் கண்டவர்க்கும் கண்ணளிக்கும் கண்ணாய் - வல்லார்க்கும் மாட்டார்க்கும் வரமளிக்கும் வரமாய் - மதியார்க்கும் மதிப்பவர்க்கும் மதி கொடுக்கும் மதியாய் - நல்லார்க்- கும் பொல்லார்க்கும் நடுநின்ற நடுவாய் - எல்லார்க்கும் பொதுவில் நடமிடுகின்ற ஏற்றமிகு குறளுக்கு ஓவியம் தீட்டப்படுகிறது. அந்தக் குறளோவியக் கோட்டம் திறக்கப்படு கிறது” என்று எழுதினார் கலைஞர்.
கோட்டம் அமைந்தது என்றால் அதற்கு நிதி ஒதுக்கியவர் மட்டுமல்ல கலைஞர். தனது மதியையும் ஒதுக்கியவர் அவர் தான். பூம்புகார் கலைக் கோட்டம் அமைத்துக் கொண்டிருந்த சிற்பி கணபதி ஸ்தபதியிடம் கோட்டம் அமைக்கும் பொறுப்பை ஒப்படைத்த கலைஞர் அவர்கள், கோட்டம் எப்படி அமைந்திட வேண்டும் என்றும், வள்ளுவர் சிலை எந்த இடத்தில் அமைந்திட வேண்டும் என்றும் கோட்டுச் சித்திரங்களை தானே வரைந்து கொடுத்தார். அதனால் தான் கலை- ஞரை ‘பூம்புகார் பெருந்தச்சன்' என்று பாராட்டினார் கணபதி ஸ்தபதி. "இப்படி ஒரு கல் தேரை உருவாக்க சமீப காலத்தில் யாரும் சொன்னது இல்லை” என்று சிற்பி எஸ்.கே.ஆச்சார் சொன்னார். (இவரும் கோட்டம் கட்ட கணபதி ஸ்தப- தியுடன் இருந்தவர். இவர் தான் குமரி விவேகானந்தர் கோட்டம் அமைத்தவர்)
"நெடுநாள் ஆசை நிறைவேற்றம்
நெஞ்சில் இன்பக் கொடியேற்றம்” - என்று எழுதினார் கலைஞர் அன்று!
அதே மனநிலையை மீண்டும் உருவாக்கிவிட்டார் முதலமைச்சர் அவர்கள் இன்று!
ரூ.80 கோடி மதிப்பீட்டில் தலைநகர் சென்னையில் தமிழ்க் கோட்டம் மீண்டு(ம்) எழுந்துள்ளது. 133 அடியில் குமரி முனையில் வள்ளுவனார் சிலை எழுப்பினார் கலைஞர். அதன் 25 ஆவது ஆண்டு வெள்ளிவிழாவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் கொண்டாடினார் முதலமைச்சர். இதோ, அடுத்ததாக சென்னை வள்ளுவர் கோட்டத்தையும் புதுப்பித்துக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
தமிழ் - தமிழன் - திராவிடம் - திருக்குறள் - சமூகநீதி எல்லாம் கலைஞரோடு போய்விடும் என்று நினைத்தவர் எண்ணத்தில் மண் விழ, மலையென அதனை எழுப்பிக் கொண்டிருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.