முரசொலி தலையங்கம் (16-06-2025)
கீழடியில் உள்ளடி
கீழடிப் பெருமையைச் சிதைக்க வழக்கம் போல் உள்ளடி வேலைகளைச் செய்கிறது பா.ஜ.க. அதனை மிக வெளிப்படையாகவே செய்கிறது.
கீழடியில் 1, 2, 3–ஆம் கட்ட அகழாய்வு பணிகளை ஒன்றிய அரசின் தொல்லியல்துறை மேற்கொண்டது. 4 முதல் 9 கட்ட அகழாய்வுகளை தமிழ்நாடு அரசின் தொல்லியல்துறை நடத்தியது. தமிழ்நாடு அரசு நடத்திய அகழாய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுவிட்ட நிலையில், முதல் மற்றும் 2–ஆம் கட்ட முடிவுகளை ஒன்றிய அரசு வெளியிடவில்லை. முதல் மற்றும் 2–ஆம் கட்ட அகழாய்வு அறிக்கையை வெளியிடக் கோரி உயர்நீதிமன்ற மதுரைக்கிளையிலும் வழக்கு தொடரப் பட்டது.
உயர்நீதிமன்றத்தில் கடந்த 2024 பிப்ரவரியில் விசாரணைக்கு வந்தபோது, 9 மாதத்தில் அறிக்கை வெளியிடப்படும் என ஒன்றிய அரசு கூறியிருந்தது. 16 மாதங்கள் ஆன பிறகும் இதுவரை வெளியிடப்படவில்லை.
இந்நிலையில், கீழடியில் நடந்த தொல்லியல் அகழாய்வு குறித்த அறிக்கையை மறுசீரமைத்து சமர்ப்பிக்குமாறு, அப்பணியில் ஈடுபட்ட தொல்லியல் ஆய்வாளர் அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு இந்திய தொல்லியல் ஆய்வுத் துறை (ASI) உத்தரவிட்டது. இது தொடர்பான திருத்தங்களை மேற்கொண்டு, அறிக்கையை “மேலும் நம்பகத்தன்மை” கொண்டதாக மாற்றும்படி கோரியது.
ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “2015, 2016–இல் நடைபெற்ற கீழடி முதல், 2–ஆம் கட்ட அகழாய்வு – அறிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களைக் கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும்” என்று கடந்த ஆண்டு அறிவித்தார். அப்போதே இதில் ஏதோ சதி செய்கிறார்கள் என்பது தெரிந்தது.
சில நாட்களுக்கு முன் சென்னை வந்த கஜேந்திர சிங் ஷெகாவத், “கீழடி குறித்த அறிக்கை அறிவியல் அடிப்படையிலும், தொழில் நுட்ப அடிப்படையிலும் நிரூபிக்கப்படவில்லை. இன்னும் கூடுதல் தகவல்களுடன், ஆய்வு முடிவுகளுடன் வரட்டும். எல்லா விதங்களிலும் ஆய்வுகள் முடியட்டும்” என்று சொல்லி இருக்கிறார். இது ஒன்றிய பா.ஜ.க. அரசின் தமிழின விரோத நடவடிக்கையாகவே அமைந்துள்ளது.
கீழடி ஆய்வையே முறையாக நடத்தாத அரசு ஒன்றிய பா.ஜ.க. அரசு. முதலில் தொடங்கினார்கள். பாதியில் விட்டார்கள். தமிழ்நாடு அரசுதான் இந்த ஆய்வைத் தொடர்ந்தது. ஒன்றிய அரசின் சார்பில் பணியாற்றிய அமர்நாத் ராமகிருஷ்ணனை அவர்கள் படுத்திய பாடு அனைவரும் அறிந்தது ஆகும். எனவே கீழடி ஆய்வுகளை அப்படியே மண்ணோடு மண்ணாகப் புதைக்க வேண்டும் என்பதுதான் பா.ஜ.க. அரசின் வெளிப்படையான திட்டம் ஆகும். இன்னும் ஆதாரம் தேவை என்று அதனால்தான் இழுக்கிறார் கஜேந்திர சிங் ஷெகாவத்.
கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட மாதிரிகளின் அறிவியல் காலக்கணிப்பு கி.மு. ஆறாம் நூற்றாண்டின் முற்பகுதியில் வைகை ஆற்றங்கரையில் நகரமயமாக்கல் இருந்ததை உறுதிப்படுத்தியது. கி.மு. ஆறாம் நூற்றாண்டில் தமிழ்ச் சமூகம் கல்வியறிவும் எழுத்தறிவும் பெற்றிருந்தனர் என்பதை அறிவியல் அடிப்படையில் நிலைநிறுத்தியுள்ளது. கீழடி அகழாய்வில் 1000–க்கும் மேற்பட்ட குறியீடுகளும், 60–க்கும் மேற்பட்ட தமிழி எழுத்துப் பொறிப்புக் கொண்ட பானை ஓடுகளும் கண்டெடுக்கப்பட்டுள்ளன. பானை ஓடுகளில் குவிரன் ஆதன், ஆதன் போன்ற தனிநபர்களின் பெயர்கள் பொறிக்கப்பட்டுள்ளது. இதன் வாயிலாக சமுதாயத்தின் பல்வேறு பிரிவினரும் கல்வியறிவு பெற்றிருந்தனர் என்பது வெளிப்படுகிறது.
கீழடி அகழாய்வு தளத்தில் கண்டெடுக்கப்பட்ட கரிம கரி (Charcoal) மாதிரிகளின் கார்பன் டேட்டிங் (Carbon dating) மூலம், அந்தப் பகுதி கி.மு. 800 ஆம் ஆண்டைச் சேர்ந்த ஒரு குடியிருப்புப் பகுதியாக இருந்திருக்கலாம் என்று உறுதிப் படுத்தியுள்ளது. பண்டைத் தமிழ்ச் சமூகம் கி.மு. ஆறாம் நூற்றாண்டில் எழுத்தறிவு பெற்றும், நகர நாகரிகத்துடனும் மேம்பட்ட தமிழ்ச் சமூகமாகவும் விளங்கியதை கீழடி அகழாய்வு முடிவுகள் வாயிலாக அறிவியல் பூர்வமாக தொல்லியல் துறை நிலை நிறுத்தியுள்ளது. இந்த அறிக்கையை ஏற்றுக் கொள்வதற்கு ஒன்றிய பா.ஜ.க. அரசுக்கு மனமில்லை. அதுதான் உண்மையாகும்.
ஒன்றிய கலாச்சாரத்துறை அமைச்சர் கஜேந்திர சிங் ஷெகாவத், “2015, 2016–இல் நடைபெற்ற கீழடி முதல், 2–ஆம் கட்ட அகழாய்வு – அறிக்கை கடந்த 2023 ஆம் ஆண்டே ஒன்றிய அரசிடம் தாக்கல் செய்யப்பட்டது. அறிக்கையை வெளியிடுவதற்கு முன் நிபுணர்களைக் கொண்டு முழுமையாக ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. முழுமையான ஆய்வுக்குப் பிறகே அரசு விதிகளின்படி அகழாய்வு அறிக்கையை வெளியிட முடியும்” என்று கடந்த ஆண்டு அறிவித்தார். அப்போதே இதில் ஏதோ சதி செய்கிறார்கள் என்பது தெரிந்தது.
கீழடி குறித்து அமர்நாத் ராமகிருஷ்ணன் கொடுத்தது 982 பக்க அறிக்கை ஆகும். இதில் அனைத்து ஆதாரங்களையும் அவர் கொடுத்திருக்கிறார். இறுதி அறிக்கையைக் கொடுத்து இரண்டரை ஆண்டுகள் ஆன பிறகு கேள்வி கேட்டுக் கொண்டு இருக்கிறார்கள். ‘ஒன்றிய அரசு இப்போது எழுப்பும் கேள்விகளுக்கான முழுமையான விடைகள் அந்த அறிக்கையில் இருக்கிறது’ என்றும் அமர்நாத் ராமகிருஷ்ணன் சொல்லி இருக்கிறார்.
கீழடி ஆய்வுகளை ஏற்றுக் கொள்ள அவர்களுக்கு நெஞ்சு அடைக்கிறது. வேதகால நாகரிகம், சரஸ்வதி நாகரிகம், சமஸ்கிருத நாகரிகம் என்று புனைவுகளைச் சொல்லிக் கொண்டிருந்தோமே அவை அனைத்தையும் கீழடி பொய்யாக்கி விடுமே என்பதுதான் இவர்களது அச்சம் ஆகும். தங்களது பொய்மையை மறைக்க, கீழடி மெய்மையை மறைக்கிறார்கள்.