முரசொலி தலையங்கம் (14-06-2025)
பெருந்துயரம் !
ஜூன் 12 என்பது பெருந்துயரமான நாளாக அமைந்துவிட்டது. உலகையே உலுக்கி விட்டது அந்தச் செய்தி. கேள்விப்பட்டதுமே உலகமே துயரத்தில் ஆழ்ந்து விட்டது. ‘அனைவரும் நலம்’ என்ற செய்தி வராதா என்று அனைவரும் ஏங்கி இருந்தார்கள். 241 பேர் மரணம் என்பதுதான் பெருந்துயரச் செய்தியாக வந்து சேர்ந்தது.
அகமதாபாத் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையம் இந்தியாவில் ஏழாவது பரபரப்பான விமான நிலையம் ஆகும். இங்கு இருந்து மதியம் 1.38 மணிக்கு லண்டன் புறப்பட்ட ‘ஏர் இந்தியா’ பயணிகள் விமானம் (போயிங் 787-8) ஒன்று, புறப்பட்ட சில நிமிடங்களில் விபத்துக்குள்ளானது. அகமதாபாத் விமான நிலையம் அருகே உள்ள குடியிருப்புப் பகுதியில் விமானம் விழுந்து நொறுங்கி தீப்பற்றியது.
தரையில் இருந்து 425 அடி உயரத்தில், புறப்பட்ட ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தில் விமானம் சிக்னலை இழந்ததாக ஃப்ளைட் ரேடார் 24 தெரிவித்துள்ளது. விமான கண்காணிப்புத் தரவின்படி, விமானம் தரையில் இருந்து 425 அடி உயரத்தில் இருந்தபோது கிடைத்ததுதான் கடைசி சிக்னல். விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அறைக்கு, விமானி ‘மேடே அழைப்பு’ (Mayday call -- அவசர அழைப்பு) விடுத்தார். அதன் பிறகு விமானியிடம் இருந்து எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.
அந்த விமானத்தில் 242 பேர் இருந்தார்கள். இருந்த பயணிகளில் 169 பேர் இந்தியர்கள். 53 பேர் இங்கிலாந்து நாட்டவர்கள். கனடாவைச் சேர்ந்தவர் ஒருவர். 7 பேர் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள். இதில் 100 பேர் பெண்கள். 14 பேர் குழந்தைகள். 2 பேர் விமானிகள். 10 பேர் ஊழியர்கள்.
அகமதாபாத் விமான விபத்தில் குஜராத் மாநில முன்னாள் முதல்வர் விஜய் ரூபானி உயிரிழந்தார். ஒரே ஒருவர் மட்டும் உயிர் பிழைத்து விட்டார். 11 ஏ என்ற இருக்கையில் பயணம் செய்தவர் அவர். விஸ்வாஷ் குமார் ரமேஷ் என்ற அவர் பிரிட்டன் குடியுரிமை பெற்றவர். “விமானம் புறப்பட்ட 30 விநாடிகளுக்குப் பிறகு, ஒரு பெரிய சத்தம் கேட்டது, பின்னர் விமானம் விபத்துக்குள்ளானது. எல்லாம் மிக விரைவாக நடந்தது” என விஸ்வாஷ் கூறினார்.
ஏர் இந்தியா நிறுவனத்தின் இந்த விபத்தில் தான் போயிங் 787 விமானம் முதல் முறையாக விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இந்த மாடல் விமானம் 14 ஆண்டுகளுக்கு முன்பு அறிமுகப்படுத்தப் பட்டது. ஆறு வாரங்களுக்கு முன்பு தான் விமானத் தயாரிப்பு நிறுவனம், ஒரு பில்லியன் பயணிகளை ஏற்றிச் சென்று ஒரு மைல் கல்லை எட்டியதாகத் தெரிவித்தது.
பொதுவாக விமானங்கள் தரையிறங்கும் போது இதுபோன்ற விபத்துகள் இதுவரை ஏற்பட்டுள்ளன. 2020 ஆம் ஆண்டு துபாயில் இருந்து வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமானம் கோழிக்கோடு விமானநிலையத்தில் தரையிறங்கும் போது ஏற்பட்ட விபத்தில் 21 பேர் உயிர் இழந்தார்கள். விமானம் விழுந்து ஓடுபாதையில் இருந்து சறுக்கி இரண்டாக உடைந்தது. அதே போல் 2010 ஆம் ஆண்டு மங்களூரில் ஓடுபாதையை விட்டு விலகி ஏற்பட்ட விபத்தில் 158 பேர் உயிர் இழந்தார்கள். 2000 ஆம் ஆண்டு பாட்னா விபத்தும் தரையிறங்கும் போது தான் ஏற்பட்டது. 60 பேர் உயிர் இழந்தார்கள். ஆனால் இப்படி பயணம் புறப்பட்டதும் நடுவானில் சிக்கலாகி தீப்பிடித்தும், உடைந்தும் நொறுங்கியதும் மிகமிக அரிதான நிகழ்வே ஆகும்.
விமானப் போக்குவரத்து மிகமிக எளிதானதாக மாறி வரும் இந்தக் காலத்தில் இது போன்ற விபத்து அனைவரையும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது. சிவில் விமானப் போக்குவரத்தில் வியத்தகு அளவில் வளர்த்துவிட்டோம் என்று பிரதமர் மோடி அரசு சொல்கிறது. 2014 ஆம் ஆண்டு 74 விமான நிலையங்கள் இருந்த நிலையில் இப்போது 160 ஆக உயர்த்தி விட்டதாகச் சொல்கிறார்கள். உலக அளவில் அதிக அளவிலான பயணிகளைக் கையாளும் விமானப் போக்குவரத்துச் சந்தைகளில் இந்தியா மூன்றாம் இடத்தைப் பிடித்துள்ளது. நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (ஜி.டி.பி.) விமானப் போக்குவரத்துத் துறையின் பங்கு 1.5 விழுக்காடாக உள்ளது. கடந்த 2023 ஆம் ஆண்டு இந்தியப் பொருளாதாரத்தில் இத்துறையின் பங்கு ரூ.4.57 லட்சம் கோடியாக இருந்தது. 2024--ஆம் ஆண்டில் 13 லட்சம் விமானச் சேவைகள் இயக்கப்பட்டன. இதில் பெரும்பாலானவை (11 லட்சம்) உள்நாட்டு விமானச் சேவை ஆகும்.
அதே நேரத்தில் விமான நிறுவனங்களைத் தனியாருக்கு விற்றதும், விமான நிலையங்களை விற்றதும் நடந்தது. இது விமானப் போக்குவரத்தில் தங்களுக்கு இருக்கும் கடமையில் இருந்து ஒன்றிய அரசு நழுவியது ஆகும்.
விமானம் விபத்துக்கு உள்ளாகி, இவ்வளவு பேர் மரணம் என்பது வருத்தம் தோய்ந்த செய்தியாகப் பரவியதே தவிர, இதற்கான காரணத்தை; யார் காரணம், யாரின் குறைபாடு என்ற விமர்சனங்களைத் தூண்டவில்லை. தனியார் விமானம், -- தனியார் விமான நிலையம், -- தனியார் ஊழியர்கள் என்ற நிலையில் யாரைக் குறை காண்பது? யாரைப் பொறுப்பு ஆக்குவது? யாரைக் கேள்வி கேட்பது? அடுத்த தவறு நடக்காது என்று யார் உத்தரவாதம் தருவது?
விமானப் போக்குவரத்துத் துறையானது நவீனமயம் ஆகி வருகிறது. ஆளில்லா விமானங்கள், மின்சார விமானங்கள் என்றெல்லாம் பேசப்படும் காலம் இது. ஆனால் இறங்கும் போது தடம் புரள்வதும், ஏறும் போது தீப்பிடிப்பதும் ஆன சாதாரணக் குறைபாடுகளை எப்படித் தடுக்கப் போகிறார்கள்? நவீன தொழில் நுட்பமானது பயணிகளின் பாதுகாப்பை எப்படி உறுதி செய்யப் போகிறது?