பகல்காம் பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பாக விளக்கம் அளிக்க, விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பிரதமர் நரேந்திரமோடிக்கு 16 எதிர்க்கட்சிகளின் தலைவர்கள் கடிதம் எழுதி இருக்கிறார்கள்.
ஜம்மு- – காஷ்மீர் மாநிலம், பஹல்காம் மாவட்டம், பைசரன் பள்ளத்தாக்கில் பயங்கர தீவிரவாதிகள் கடந்த ஏப்ரல் 22 ஆம் தேதி நடத்திய தாக்குதலில் 26 உயிர்கள் கொல்லப்பட்டன. இருபதுக்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தார்கள். இந்த கொடூரச் சம்பவம் நடக்கும் போது வெளிநாட்டில் இருந்தார் பிரதமர் மோடி. உடனடியாக நாடு திரும்பினார். ஆனால் சம்பவம் நடந்த பகல்காம் மாவட்டம் செல்லவில்லை. காயமடைந்த மக்களை மருத்துவமனைக்குச் சென்று பார்க்கவில்லை.
உயிரிழந்தோர் உடலுக்கு அஞ்சலி செலுத்தவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டத்தை ஒன்றிய அரசு நடத்தியது. அதிலும் கலந்து கொள்ளவில்லை. உடனடியாக நாடு திரும்பிய அவர், பீகாரில் நடைபெற்ற தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் கலந்து கொண்டார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை நிறுத்தியது. பாகிஸ்தானியர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தியது. இந்தியாவில் உள்ள பாகிஸ்தானியர்களை உடனடியாக வெளியேற்றச் சொன்னது. அட்டாரி – வாகா எல்லை மூடப்பட்டது. பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் எண்ணிக்கை குறைக்கப்பட்டது. பாகிஸ்தான் தூதர் அழைக்கப்பட்டு கண்டிக்கப்பட்டார். இவை அனைத்தும் பயங்கரவாதச் சம்பவம் நடந்த பிறகு நடத்தப்பட்டவை.
‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. ‘பகல்காம் பயங்கரவாதத் தாக்குதலுக்கு பதிலடி தருவது தொடர்பான முடிவுகளை மேற்கொள்ள பாதுகாப்புப் படையினருக்கு முழு சுதந்திரம் உள்ளது. தாக்குதல் இலக்குகள், நேரம், தாக்குதல் நடத்தும் முறை குறித்து பாதுகாப்புப் படையினரே முடிவுகள் எடுக்கலாம்’ என்று பிரதமர் மோடி அறிவித்தார்.
மே 7 ஆம் தேதியன்று ‘ஆபரேஷன் சிந்தூர்’ என்ற பெயரில் மிகப்பெரிய தாக்குதலை இந்திய ராணுவம் தொடுத்தது. பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்களை அழிக்க இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தத் தாக்குதலில் 100 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார். பயங்கரவாத அமைப்பு ஒன்றின் தலைவரான மசூத் அசாரின் குடும்பத்தைச் சேர்ந்த பத்துப் பேரும் கொல்லப்பட்டுள்ளார்கள்.
இதைத் தொடர்ந்து இந்திய எல்லைக்குள் பாகிஸ்தான் தாக்குதல் நடத்தியது. இந்தியாவில் உள்ள 15 நகரங்களைக் குறி வைத்தது பாகிஸ்தான். ஏவுகணைகள், டிரோன்களை அனுப்பியது. இதனை இந்திய ராணுவம் வானில் முறியடித்தது. இதைத் தொடர்ந்து பாகிஸ்தானை நோக்கி, இந்தியா தனது தாக்குதலை நடத்தியது. லாகூர் வான் பாதுகாப்பு அமைப்பு சிதைக்கப்பட்டது. பாகிஸ்தானின் 4 விமானங்களை இந்தியா வீழ்த்தியது.
திடீரென இந்தத் தாக்குதல் நிறுத்தப்பட்டது. இந்தப் போர் நிறுத்தத்தை அமெரிக்காதான் முதலில் அறிவித்தது. இதற்கு இந்தியா இதுவரை பதில் சொல்லவில்லை.
அமெரிக்க அதிபர் இதனையே திரும்பத் திரும்ப பலமுறை சொல்லிவிட்டார். சொல்லிக் கொண்டும் இருக்கிறார். “இதுதான் பா.ஜ.க. – ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் குணம். அவர்கள் அடிபணிபவர்கள் என்பதற்கு வரலாறே சாட்சி” என்று விமர்சித்த காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, 1971 ஆம் ஆண்டு பிரதமர் இந்திராகாந்தி, சிங்கம் மாதிரி நடந்து கொண்டார் என்பதையும் சுட்டிக் காட்டி இருக்கிறார்.
இத்தகைய அரசியல் விவாதங்கள் தொடங்கி நடந்து வருகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கியமான கோரிக்கை வெளியாகி இருக்கிறது.
“பயங்கரவாதத் தாக்குதல், ஜம்மு – காஷ்மீரில் உள்ள பூஞ்ச், உரி, ரஜெளரியில் பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் பொதுமக்கள் கொல்லப்பட்டது, சண்டை நிறுத்தம் ஆகியவற்றால் நமது தேசியப் பாதுகாப்பு, வெளியுறவுக் கொள்கையில் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை பற்றி நாட்டு மக்களுக்கு ஏராளமான கேள்விகள் உள்ளது. பயங்கரவாதத்துக்கு எதிரான இந்தியாவின் நிலைப்பாடு குறித்து உலக நாடுகளுக்கு எடுத்துரைப்பதற்கான அரசின் முயற்சிகளை எதிர்க்கட்சிகளான நாங்கள் ஆதரித்தோம்.
இந்த விவகாரம் தொடர்பாக வெளிநாட்டுத் தூதர்களுக்கும், ஊடகங்களுக்கும் ஒன்றிய அரசு விளக்கம் அளித்துள்ளது. ஆனால் நாடாளுமன்றத்துக்கு இதுவரை எந்த விளக்கமும் அளிக்கவில்லை. இந்திய மக்களுக்கும் அவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கும் ஒன்றிய அரசு முறையான தகவல் தெரிவிக்கவில்லை. எனவே உடனடியாக நாடாளுமன்றத்தைக் கூட்டி விளக்கம் அளிக்க வேண்டும்” என்று பிரதமருக்கு அனுப்பிய கடிதத்தில் எதிர்க்கட்சித் தலைவர்கள் வேண்டுகோள் வைத்துள்ளார்கள். இந்தக் கடிதத்தில் தி.மு.க. உள்பட 16 கட்சிகள் கையெழுத்துப் போட்டுள்ளன.
பஹல்காம் தாக்குதல் நடத்தப்பட்டதில் இருந்து நாடாளு மன்றத்தின் சிறப்புக் கூட்டத்தை நடத்துமாறு எதிர்க்கட்சிகள் கோரிக்கை வைத்துள்ளன. ஆனால் அதனைக் கேட்கவில்லை ஒன்றிய அரசு. எதிர்க்கட்சித் தலைவர்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் கூட பிரதமர் கலந்து கொள்ளவில்லை.
பயங்கரவாதத் தாக்குதலுக்குக் காரணமான தீவிரவாதிகள் இன்னும் கைது செய்யப்படவில்லை. அவர்கள் இருக்குமிடம் அடையாளம் காணப்படவில்லை. திடீரென போர் அறிவிக்கப்பட்டது, போர் நடந்தது, போர் நிறுத்தப்பட்டது. இவை குறித்து ஒன்றிய பா.ஜ.க. அரசு சரியான விளக்கத்தை இன்னும் சொல்லவில்லை. சொல்ல வேண்டிய கடமை ஒன்றிய அரசுக்கு இருக்கிறது. இது குறித்து விவாதிக்க நாடாளுமன்ற சிறப்புக் கூட்டம் உடனடியாகக் கூட்டப்பட வேண்டும்.