முரசொலி தலையங்கம்

அமெரிக்க அரசுடன் ‘துணிச்சலாக' ஒன்றிய அரசு பேச வேண்டும் : முரசொலி வலியுறுத்துவது என்ன?

அமெரிக்க அரசால் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகள், உலகம் முழுவதும் இருந்து வரும் மாணவர்களை பாதிக்கும்.

அமெரிக்க அரசுடன் ‘துணிச்சலாக'  ஒன்றிய அரசு பேச வேண்டும் : முரசொலி வலியுறுத்துவது என்ன?
ANI
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (05-06-2025)

கல்விக்காக அமெரிக்காவுடன் பேச வேண்டும்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் அதிரடிகள் அந்த நாட்டில் தொடர்ந்து வருகிறது. அது அந்த நாட்டின் பிரச்சினை ஆகும். அதே நேரத்தில் அமெரிக்காவுக்கு வந்து படிக்கும் மாணவர்களுக்கு விசா வழங்குவதில் கட்டுப்பாடுகள் கொண்டுவர அவர் உத்தரவிட்டுள்ளார். இது அனைத்து நாட்டு மக்களின் கல்வி வளர்ச்சிக்குத் தடை ஏற்படுத்துவது ஆகும்.இந்தியாவில் இருந்து கல்விக்காக அமெரிக்கா செல்பவர்கள் அதிகம். தமிழ்நாட்டில் இருந்து செல்பவர்களும் அதிகம்.

மாணவர்களுக்கு விசா வழங்குவதை நிறுத்தி வைக்கச் சொல்லி இருக்கிறார் அமெரிக்க அதிபர் டிரம்ப். அதன்படி மாணவர் விசா வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. விசா கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கும்படி அந்த நாட்டு வெளியுறவுத் துறை உத்தரவு போட்டுள்ளது.

அமெரிக்காவில் உள்ள ஹார்வர்டு பல்கலைக் கழகமும், யேல் பல்கலைக் கழகமும் உலகப் புகழ் பெற்றது ஆகும். ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில்தான் முதலில் தடை போட்டார்கள். ‘வெளிநாட்டு மாணவர்களை அனுமதிக்கக் கூடாது’ என்று அந்தப் பல்கலைக் கழகத்துக்கு முதல் தடை விழுந்தது. அதன்பிறகு வெளிநாட்டு மாணவர்கள் அனைவருக்குமான விசா கட்டுப்பாடுகள் அதிகரிக்கப்பட்டன.

ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் மட்டும் 800 இந்திய மாணவர்கள் படிக்கிறார்கள். அமெரிக்கா முழுமைக்கும் உள்ள பல்கலைக் கழகங்களில் 3 லட்சம் இந்திய மாணவர்கள் படித்து வருகிறார்கள். 2023 ஆம் ஆண்டு மட்டும் 1.40 லட்சம் இந்திய மாணவர்கள் கல்விக்கான விசா பெற்றுள்ளார்கள்.

கொலம்பியா பல்கலைக்கழகம், பிரவுன் பல்கலைக்கழகம், கார்னெல் பல்கலைக்கழகம், பிரின்ஸ்டன் பல்கலைக்கழகம், பெனிசில்வேனியா பல்கலைக்கழகம், டார்ட்மவுத் பல்கலைக்கழகம் ஆகியவை தலை சிறந்த பல்கலைக்கழகங்கள் ஆகும். உலகம் முழுவதும் இருந்து இந்தப் பல்கலைக் கழகங்களில் படிப்பதற்காக லட்சக்கணக்கான மாணவர்கள் ஆண்டு தோறும் வருகிறார்கள். இப்போது அமெரிக்க அரசால் கொண்டுவரப்படும் கட்டுப்பாடுகள், உலகம் முழுவதும் இருந்து வரும் மாணவர்களை பாதிக்கும். இது அமெரிக்காவுக்குப் பெருமை சேர்க்காது.

உலகம் முழுவதும் இருந்து மாணவர்கள் கல்விக்காக அமெரிக்காவுக்கு வருகிறார்கள் என்பது அமெரிக்காவுக்கு பெருமைதான். அதை அந்த நாடே ஏன் சிறுமைப்படுத்திக் கொள்ள வேண்டும்?

மாணவர்களின் புதிய விசா விண்ணப்பங்களைப் பரிசீலிக்கும் போது அவர்களது சமூக வலைதளக் கணக்குகளில் செய்துள்ள பதிவு களை சரிபார்க்க வேண்டும் என்று கட்டுப்பாடுகளை விதித்துள்ளார் களாம். 'அமெரிக்காவுக்குப் படிக்க வரும் மாணவர்களின் சமூக ஊடகக் கணக்குகளைத் தணிக்கை செய்து முடிக்கும் வரை விசா வழங்க நேரம் ஒதுக்கக் கூடாது'என்று உத்தரவிட்டுள்ளார்கள்.

தனது நாட்டின் அரசியல் கொள்கைகளுக்கு விரோதமான எண்ணம் கொண்டவர்களாக அந்த மாணவர்கள் இருக்கிறார்களா என்பது இதன் நோக்கம் ஆகும். இப்படி ஒரு எண்ணம் கொண்டவராக அமெரிக்காவைச் சேர்ந்த மாணவரே இருந்தால் என்ன செய்வார்கள்? அவரைப் படிக்கவே கூடாது என்று தடை செய்து விடுவார்களா?

அமெரிக்க அரசுடன் ‘துணிச்சலாக'  ஒன்றிய அரசு பேச வேண்டும் : முரசொலி வலியுறுத்துவது என்ன?

அமெரிக்காவில் கல்விக்காக விசா விண்ணப்பிக்கும் மாணவர்கள் அமெரிக்க, இஸ்ரேல் நாடுகளின் நட்பை விமர்சிக்கிறார்களா என்பது இவர்களது சோதனையின் மையக் கருவாக இருக்கிறது. இவை எல்லாம் காலத்துக்கு ஏற்ப, ஆட்சிகளுக்கு ஏற்ப மாறும் கொள்கைகள் ஆகும். அதிபர் டிரம்ப் கொள்கைக்கு மாறான ஆட்சி பின்னர் வந்துவிட்டால், இந்த வரையறைகள் கூட மாறிவிடும். அரசியல் நோக்கங்களை கல்வியில் மாணவர் எதிர்காலத்தோடு ஏன் சேர்க்க வேண்டும்?

இந்த பிரச்சினையை மிகத் தீவிரமானதாகப் பார்த்து இந்திய அரசு தனது நடவடிக்கையைத் தொடங்க வேண்டும். இந்திய மாணவர்களின் எதிர்காலத்தை மனதில் வைத்து செயல்பட வேண்டும். அமெரிக்காவுக்குப் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு எந்தத் தடையும் இல்லாமல் ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டிய கடமை இந்திய அரசுக்கு உண்டு.

ஏற்கனவே இந்தியா ‘வரி நெருக்கடி'யை எதிர்கொண்டுள்ளது. இந்தியா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் மீதான வர்த்தக வரிகளை அதிகமாக ஆக்கியது அமெரிக்கா. அமெரிக்கா மீது வரிகளையும் பிற தடைகளையும் விதித்துள்ள ‘மோசமான நாடுகளில்' ஒன்றாக இந்தியாவை பட்டியலிட்டுள்ளது அமெரிக்கா. இதன் காரணமாக இந்தியா மீது 27 விழுக்காடு வரி விதித்துள்ளது அமெரிக்கா. இதுவரை 2 விழுக்காடு வரி மட்டுமே விதிக்கப்பட்டு வந்த நிலையில், இந்தியா மீது தற்போது 27 விழுக்காடு வரி விதிக்கப்பட்டுள்ளது.

அமெரிக்க சரக்குகளுக்கு இந்தியா 52 விழுக்காடு வரி விதிப்பதாக, அமெரிக்க அதிபர் டிரம்ப் குறிப்பிட்டார். இந்தியா மிகவும் கடினமான அணுகுமுறையை கொண்டுள்ளது என்றும் அவர் தெரிவித்தார். மற்ற பல நாடுகள் இதனைக் கண்டித்தன. நியூயார்க் நகரிலுள்ள சர்வதேச வர்த்தக நீதிமன்றத்தில் அமெரிக்க எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த 12 மாகாணங்களின் சார்பில் வழக்குப் போடப்பட்டுள்ளது. சில அமெரிக்க நிறுவனங்களும் இதற்கு எதிராக வழக்குப் போட்டுள்ளன. அதிபர் டிரம்பின் உத்தரவுக்கு இந்த நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

வரி நடவடிக்கையில் அமெரிக்க அதிபர் டிரம்பின் நடவடிக்கைகளுக்கு ஒன்றிய பா.ஜ.க. அரசு கடும் எதிர்வினையை ஆற்றவில்லை. மென்மையான போக்கையே கடைப்பிடித்தது. அதுபோல மாணவர்களின் விசா விவகாரத்தில் நடந்து விடக் கூடாது.

கல்வி பொதுச்சொத்து ஆகும். அதனை தடையின்றி பெற, ஒன்றிய அரசு அமெரிக்க அரசுடன் ‘துணிச்சலாக' பேசி அனுமதிகளைப் பெற வேண்டும்.

banner

Related Stories

Related Stories