முரசொலி தலையங்கம் (27-05-2025)
டெல்லியில் ஒலித்த உரிமைக்குரல்!
பிரதமர் நரேந்திர மோடி, ஒன்றிய அமைச்சர்கள், அனைத்து மாநில முதலமைச்சர்கள் பங்கெடுத்த கூட்டத்தில் அவர்கள் முன்னிலையில் தமிழ்நாட்டின் உரிமைக் குரலை ஓங்கி ஒலித்திருக்கிறார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
நிதி ஆயோக் கூட்டத்துக்கு முதலமைச்சர் செல்கிறார் என்றதும், கொத்தடிமை பழனிசாமிக்கு முதுகு வேர்த்துவிட்டது. ‘தான் திருடி பிறரை நம்பாள்’ என்பதைப் போல அதற்கு பல்வேறு கற்பனையான காரணங்களை பழனிசாமி அவிழ்த்துவிட்டார். பிரதமர் முன்னிலையில் நடைபெறும் கூட்டத்துக்கு ஒரு மாநில முதலமைச்சர் செல்வதற்கு அரசியல் நோக்கம் தேவையில்லை. நிர்வாக நோக்கம் இருந்தால் போதும். வழக்கமாக நடைபெறும் கூட்டத்துக்குச் செல்வது வழக்கமான நடைமுறைதான். அதன் அடிப்படையில்தான் முதலமைச்சர் அவர்கள் சென்றார்கள்.
இக்கூட்டம் நடப்பதற்கு முன்னதாக காங்கிரஸ் கட்சியின் அகில இந்தியத் தலைவர்களான சோனியா, ராகுல் ஆகிய இருவரையும் சென்று சந்தித்தார் முதலமைச்சர் அவர்கள். பழனிசாமி சொல்வது பச்சைப் பொய் என்பதை இதுவே காட்டியது. பிரதமருடன் சமாதானம் பேசப் போயிருந்தால் அவருக்கு கோபம் வரவழைக்கும் வகையில் சோனியா, ராகுல் ஆகியோரை முதலமைச்சர் சந்திப்பாரா? இந்த அடிப்படை அறிவு கூட இல்லாத தற்குறிதான் பழனிசாமி என்பதை தமிழ்நாடு மீண்டும் உறுதி செய்தது.
நிதி ஆயோக் கூட்டத்திலும் தமிழ்நாட்டுக்கான கோரிக்கைகள் சிலவற்றை மட்டும் வைத்து விட்டு அமைதியாக வில்லை முதலமைச்சர் அவர்கள். ஒன்றிய அரசுக்கு பாராட்டுப் பத்திரம் வாசிக்கவில்லை முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டுக்கான உரிமைக்குரலை, பா.ஜ.க. தலைமைக்கு புரியும் வகையில் எடுத்துரைத்து விட்டு வந்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். இந்தியாவின் எந்த மாநில முதலமைச்சராவது இத்தகைய உரிமைக் குரலை எழுப்பி இருப்பார்களா என்பது சந்தேகமே!
தமிழ்நாடு எந்தெந்த வகையில் எல்லாம் கடந்த நான்காண்டு காலத்தில் முன்னேறி இருக்கிறது என்பதை பட்டியலிட்ட முதலமைச்சர் அவர்கள், இதற்குக் காரணம் சமூக நீதிதான் என்பதையும் எடுத்துக்காட்டி இருக்கிறார்.“சமத்துவம் மற்றும் சமூகநீதி அடிப்படையில், அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் நீடித்த பொருளாதார வளர்ச்சிதான் எங்களுடைய தொலைநோக்குப்பார்வை! “எல்லோர்க்கும் எல்லாம்” என்ற அந்தக் குறிக்கோளுக்குப் பெயர்தான்திராவிட மாடல்! இதுதான் தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குக் காரணம்”என்பதை தொடக்கத்திலேயே எடுத்துரைத்திருக் கிறார் முதலமைச்சர் அவர்கள்.
“இந்தியாவின் இலக்கான 30 டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தில், எங்களது பங்களிப்பு வலுவாக இருக்கும்” என்றும் உறுதி அளித்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். தமிழ்நாட்டுக்கு என்னென்ன திட்டங்கள் வேண்டும் என்பதை தெளிவுபடுத்தி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.
1. ஒரு புதிய நகர்ப்புற மறுமலர்ச்சித் திட்டத்தை உருவாக்க வேண்டும்.
2. கங்கையைச் சுத்தப்படுத்தும் திட்டத்தை போல காவிரி, வைகை, தாமிரபரணிக்கும் புதிய திட்டம் தேவை.
3. இதுபோன்ற நதி நீர் திட்டங்களுக்கு தொடர்பு மொழியான ஆங்கிலத்தில் பெயர் சூட்ட வேண்டும்.
4. பள்ளிக் கல்வித் துறைக்காக தர வேண்டிய 2200 கோடியைஉடனடியாக விடுவிக்க வேண்டும். ஒரு தலைப்பட்சமான நிபந்தனைகளைவலியுறுத்தாமல் நிதியை விடுவிக்க வேண்டும். – ஆகிய முக்கியமான கோரிக்கைகளை பிரதமர் முன்னிலையில் முதலமைச்சர் அவர்கள் வைத்து விட்டு, இன்றைய நிலைமையைச் சொல்லி இருக்கிறார்கள்.
*மாநிலத்துக்கு கிடைக்க வேண்டிய, தரப்பட வேண்டிய நிதியானதுஎப்போதும் போராடி – வாதாடி – வழக்குப் போட்டு பெற வேண்டிய நிலைமையில் இருப்பது கூட்டாட்சி இந்தியாவுக்கு அழகல்ல. இது மாநிலத்தின் வளர்ச்சியையும் பாதிக்கும்; இந்தியாவின் வளர்ச்சியையும் பாதிக்கும்.
*15–ஆவது நிதிக்குழுவின் பரிந்துரைகளின்படி மாநிலங்களுக்கு 41 விழுக்காடு நிதி பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். ஆனால் கடந்த 4 ஆண்டு களில் ஒன்றிய அரசின் மொத்த வரி வருவாயில் 33.16 விழுக்காடு மட்டுமே மாநிலங்களுக்குப் பகிர்ந்து அளிக்கப்பட்டிருக்கிறது.
*ஒன்றிய அரசும் – மாநில அரசுகளும் இணைந்து செயல்படுத்திடும் திட்டங்களுக்கான மாநில அரசின் பங்குத்தொகை, தொடர்ந்து உயர்ந்துவருகிறது. இது மாநில அரசுகளுக்குப் பெரும் சுமையை ஏற்படுத்துகின்றன.
*ஒன்றிய வருவாயில் மாநிலங்களுக்கான வரிப் பகிர்வின் பங்கு 50 விழுக்காடு உயர்த்தப் படுவதுதான் முறையானதாக இருக்கும்.
– இதுதான் முதலமைச்சர் அவர்கள் எழுப்பிய உரிமைக்குரல் ஆகும்.
“தற்சார்புடனும், தனித்துவமான அடையாளங்களுடனும் ஒவ்வொரு மாநிலமும் செழித்து வளரும்போதுதான் ஒன்றுபட்ட வலிமையான இந்தியத் திருநாடு உலக அரங்கில் உயர்ந்து நிற்கும்! அதற்கு தமிழ்நாடு எப்போதும் துணை நிற்கும் என்று உறுதியளிக்கிறேன்.” என்பதுதான் ஒன்றிய அரசுக்கு மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எடுத்த மகத்தான பாடம் ஆகும்.
கடந்த நிர்வாகக் குழுக் கூட்டத்தில், “மாநிலங்கள் மக்களுடன் நேரடியாக இணைந்திருப்பதால், இந்தத் தொலைநோக்குப் பார்வையை அடைவதில் மாநிலங்கள் தீவிர பங்கு வகிக்கின்றன” என்று பிரதமர் பேசியிருந்தார். இதனை நினைவூட்டியே பேசினார் முதலமைச்சர் அவர்கள்.“பிரதமரின் தொலைநோக்குப் பார்வையை அடைவதற்கு, கூட்டுறவு கூட்டாட்சி என்பது அவசியமான அடித்தளமாகும். எனவே, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்கள் தங்கள் வளர்ச்சி இலக்குகளை அடைவதற்கு, ஒன்றிய அரசு பாகுபாடின்றி ஒத்துழைப்பு தர வேண்டும்”என்று உரிமைக்குரலை ஓங்கி ஒலித்துள்ளார் முதலமைச்சர்.
இதில் ஒரு சொல்லைக் கூடச் சொல்லும் முதுகெலும்பு பழனிசாமிக்குக் கிடையாது. ‘வெள்ளைக் கொடியோடு செல்கிறார்’ என்று பழனிசாமி சொன்னார்.‘வெள்ளைக் கொடியுடனும் வரவில்லை, காவிக் கொடியுடனும் வரவில்லை’என்று கிண்டலாகச் சொல்லிவிட்டார் முதலமைச்சர். உண்மையில் உரிமைக்கொடியை நாட்டினார் முதலமைச்சர்.