முரசொலி தலையங்கம் (26-05-2025)
எத்தனை முறை கண்டனங்கள்?
அமலாக்கத்துறை மீது கடுமையான கண்டனங்களைப் பதிவு செய்துள்ளது உச்சநீதிமன்றம்!
தன்னிடம் இருக்கும் புலனாய்வு அமைப்புகள் மூலமாக தனது எதிரிகளை மிரட்டுவதும், பணிய வைப்பதும்தான் பா.ஜ.க.வின் பாணியாகும். அதனை பல்வேறு மாநிலங்களில் பயன்படுத்திய பா.ஜ.க. அரசு, இப்போது தமிழ்நாட்டில் தி.மு.க. அரசு மீது பயன்படுத்தி வருகிறது.
டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை என்ற பெயரால் தி.மு.க. ஆட்சிக்கு களங்கம் ஏற்படுத்தும் செயலைச் செய்து வருகிறார்கள். இதற்கு அமலாக்கத்துறையைப் பயன்படுத்துகிறார்கள். டாஸ்மாக் நிறுவனம் மீதான வழக்கை விசாரிக்க அமலாக்கத்துறைக்கு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. அப்போது, அமலாக்கத்துறையை கடுமையாகக் கண்டித்துள்ளார்கள் உச்சநீதிமன்ற நீதிபதிகள்.
உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய், அகஸ்டின் ஜார்ஜ் மசிஹ் அமர்வு முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்துள்ளது."அமலாக்கத்துறை அனைத்து வரம்புகளையும் மீறிச் செயல்படுகிறது. அமலாக்கத்துறை இயக்குநரகம் கூட்டாட்சிக் கோட்பாட்டை மொத்தமாக மீறிக் கொண்டிருக்கிறது. மாநில அரசு நடத்தும் டாஸ்மாக் நிறுவனத்தை அமலாக்கத்துறை எப்படி சோதனை செய்ய முடியும்? பண முறைகேடு மூலமாக வருவாய் ஈட்டினார்கள் என்றால் அதற்கான ஆதாரம் என்ன? நிதி சார்ந்த முறைகேடு எங்கு நடந்துள்ளது என்பதைக் கூற முடியுமா? டாஸ்மாக் ஊழியர்களின் செல்போன்களை குளோன் செய்துள்ளது அமலாக்கத்துறை. தனிநபர் தவறு செய்திருந்தால் அதற்காக ஒரு நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்க முடியுமா?” என்று சரமாரியாகக் கேள்வி எழுப்பிய நீதிபதிகள், அமலாக்கத்துறை விசாரணைக்கே தடை விதித்து இருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை இத்தகைய கண்டனத்தை எதிர்கொள்வது இது முதல் முறையல்ல. மணல் குவாரிகள் தொடர்பாகவும் இதே போல் ஒரு ரெய்டை நடத்தி மிரட்டினார்கள். மாவட்ட ஆட்சியர்களுக்கே சம்மன் செய்தார்கள். விசாரணைக்காக சென்றவர்களை காக்க வைத்தும், விசாரணை நடைபெறும் இடத்தை மாற்றியும் அலைக்கழித்தது அமலாக்கத்துறை. இது தொடர்பான வழக்கு விசாரணையின் போதும் அமலாக்கத்துறை அதிகாரிகள் உச்சநீதிமன்றத்தால் கண்டிக்கப் பட்டார்கள்.
“மணல் குவாரி வழக்கில் மாவட்ட கலெக்டர்களிடம், அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளலாம். ஆனால், தேவையில்லாமல் மாவட்ட கலெக்டர்களை காக்க வைத்து துன்புறுத்தக் கூடாது. கலெக்டர்களுக்கு பல்வேறு பணிகள் உள்ளன” என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் கண்டித்தார்கள்.
“விசாரணையின்றி நீண்ட காலம் ஒருவரை அமலாக்கத்துறை சிறையில் வைக்கக் கூடாது. சட்டபூர்வமான ஜாமீன் உரிமையை மறுக்கக் கூடாது. விசாரணையின்றி நீண்ட காலம் ஒருவரை அமலாக்கத்துறை சிறையில் வைக்க முடியாது. குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் ஒருவரை நீண்ட காலம் சிறையில் வைக்க முடியாது. ஜாமீனை தடுப்பதற்காக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்யாமல் இருக்கக் கூடாது”- என்றும் உச்சநீதிமன்றம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. ஆனாலும் அமலாக்கத்துறை அடங்கவில்லை.
டெல்லியில் ஆம் ஆத்மி கட்சித் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால், மணீஷ் சிசோடியா ஆகியோர் கைது செய்யப்பட்டார்கள். அவர்களுக்கு இடைக்கால பிணை கூடத் தரப்படவில்லை. உச்சநீதிமன்ற நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, எஸ்.வி.பாட்டியா அமர்வில் இவர்கள் வழக்கு விசாரணைக்கு வந்த போது,'இந்த வழக்குக்கு ஆதாரம் என்ன?' என்று நீதிபதிகள் கேட்டார்கள்.
“டெல்லி மதுபானக் கொள்கை விவகாரத்தில் லஞ்சம் கைமாறியதாகச் சொல்கிறீர்கள். யார் அதை வழங்கினார்கள்? சிசோடியா மீதான புகாருக்கு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? இவர் மீது எந்த அடிப்படையில் குற்றம் சாட்டுகிறீர்கள்? தினேஷ் அரோரா என்பவரின் வாக்குமூலத்தை மட்டும் ஆதாரமாகக் காட்டுகிறீர்கள். வேறு என்ன ஆதாரம் வைத்திருக்கிறீர்கள்? சிலர் பேசிக் கொண்டதற்கு என்ன ஆதாரம் வைத்துள்ளீர்கள்? வாட்ஸ் அப் செய்திகளை ஆதாரமாகக் கொள்ள முடியுமா? ஒரு அப்ரூவர் அனுமானமாகச் சொல்வதை ஏற்றுக் கொள்ள முடியுமா? குறுக்கு விசாரணை நடக்கும் போது இந்த புகார்கள் எல்லாம் இரண்டு நிமிடம் கூட நிற்காது” என்று நீதிபதிகள் சொன்னார்கள். அதன்பிறகும் அமலாக்கத்துறை தனது நடத்தையை மாற்றிக் கொள்ளவில்லை.
2023 ஆம் ஆண்டு ஒரு ரியல் எஸ்டேட் அதிபர் தொடர்புடைய வழக்கில் - அவரை எதற்காகக் கைது செய்துள்ளோம் என்பதையே சொல்லவில்லை. அவர் மீதான குற்றத்தை ஒரு தாளில் எழுதி வாசித்திருக்கிறார்கள். அவர் உச்சநீதிமன்றம் சென்று பிணை வாங்கினார். அப்போதும் அமலாக்கத் துறையை உச்சநீதிமன்றம் கண்டித்தது.
“பொருளாதாரக் குற்றங்களைத் தடுக்கும் கடுமையான பொறுப்பைக் கொண்ட முதன்மை விசாரணை நிறுவனமாக இருப்பதால் - அமலாக்கத்துறையின் ஒவ்வொரு நடவடிக்கையும் வெளிப்படையாகவும் - நியாயமாகவும் இருக்க வேண்டும்” என்று நீதிபதிகள் சொன்னார்கள். ஆனால் அமலாக்கத்துறை அப்படி நடந்து கொள்ளவில்லை.
Don't Create Atmosphere of Fear - என்பது அமலாக்கத் துறைக்கு முன்பு உச்சநீதிமன்றம் சொன்ன அறிவுரை ஆகும். அதாவது‘அச்சம் நிறைந்த சூழ்நிலையை உருவாக்க வேண்டாம்'என்பது ஆகும். ஆனால் அச்சத்தை உருவாக்கவே இதுபோன்ற அமைப்புகளை வைத்திருக்கிறார்கள்.
அமலாக்கத்துறை, வருமானவரித்துறை ஆகிய அமைப்புகள் மூலமாக பா.ஜ.க. தனது அரசியல் எதிரிகளைப் பழிவாங்குவதற்கு நிரந்தர முற்றுப்புள்ளியை உச்சநீதிமன்றம் வைக்க வேண்டும்.
•