முரசொலி தலையங்கம் (28-2-2025)
முதலமைச்சர் சொல்வதில் என்ன தவறு?
தொகுதி மறுசீரமைப்பை மக்கள் தொகை அடிப்படையில் செய்தால் தமிழ்நாட்டுக்கான நாடாளுமன்றத் தொகுதிகள் 39 லிருந்து 31 ஆகக் குறையும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கூறினார்கள். இதற்காக மார்ச் 5 ஆம் தேதியன்று தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை முதலமைச்சர் அவர்கள் கூட்டி இருக்கிறார்கள்.
உடனே, யார் இப்படிச் சொன்னது என்று கேட்கிறார் பா.ஜ.க. அண்ணாமலை. ஒரு மாநிலத்தின் முதலமைச்சர் கேட்டால் பதில் சொல்லக் கடமைப்பட்டவர்கள் பதில் சொல்ல வேண்டுமே தவிர, அண்ணாமலைக்கு என்ன வந்தது? அவர் பா.ஜ.க. மாநிலத் தலைவராக எத்தனை மாதங்களுக்கு இருக்கப் போகிறாரோ? இந்தப் பதவி பறிக்கப்பட்டால் லண்டனிலோ அல்லது வேறு ஏதாவது ஒரு ‘தீவிலோ' அவர் போய் செட்டில் ஆகி விடுவார்? தொகுதிகள் குறைவதால் அவருக்கு என்ன இழப்பு? எத்தனை தொகுதிகள் இருந்தாலும் அவர் ஜெயிக்கப் போகிறவரும் இல்லை. அவருக்கு என்ன கவலை?
“சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்துங்கள்!” என்று காங்கிரசுக் கட்சித் தலைவர் ராகுல் காந்தி சொன்னபோது, அதற்கு பிரதமர் நரேந்திர மோடி சொன்ன பதில் என்ன? 2023 ஆம் ஆண்டு தெலுங்கானா மாநிலத்தில் பரப்புரை செய்ய வந்த பிரதமர் சொன்னது என்ன?
"சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தி மக்கள் தொகை அடிப்படையில் சமூகங்களுக்குப் பிரதிநிதித்துவம் வழங்க வேண்டும் என காங்கிரசுக் கட்சி சொல்கிறது. அடுத்ததாக தொகுதி மறுவரையறை நடக்க உள்ளது. காங்கிரசுக் கட்சி சொல்வதைப் போல மக்கள் தொகையின் அடிப்படையில் மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை செய்யப்பட்டால், தென் மாநிலங்கள் 100 தொகுதிகளை இழக்க நேரிடும். தென்னிந்திய மக்கள் இதனை ஏற்பார்களா?” என்று கேட்டவர் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள்.
சாதிவாரிக் கணக்கெடுப்பை ‘இந்தியா' கூட்டணி வலியுறுத்துவதால் அதற்கு பதிலடி கொடுப்பதாக நினைத்துக்கொண்டு; 2023ஆம் ஆண்டு தெலுங்கானா சட்டப்பேரவைத் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் மோடி பேசிய பேச்சுக்கள், தொகுதி மறுவரையறை செய்யப்போகும் அநீதியை அவரது வாயாலேயே ஒப்புக் கொள்ள வைத்து விட்டது.
2023 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் நிசாமாபாத்தில் பேசிய பிரதமர் மோடி, 'மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டால், தென் இந்தியா 100 தொகுதிகள் வரை இழக்க நேரிடும்' என்றுதெரிவித்தார். ‘தென் இந்தியா இதனை ஏற்குமா? தென் இந்தியா காங்கிரசை மன்னிக்குமா?” என்றெல்லாம் ஆவேசமாகக் கேள்வி எழுப்பினார் பிரதமர் மோடி.
தொகுதி மறுசீரமைப்பு என்பது நடந்தால் தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களின் தொகுதிகள் குறையும் என்பது பிரதமரே ஒப்புக் கொண்ட உண்மையாகும். அதனடிப்படையில் முதலமைச்சர் கோரிக்கை வைப்பதில் என்ன தவறு இருக்க முடியும்?
மகளிருக்கு 33 விழுக்காடு இடஒதுக்கீடு சட்டத்தை நிறைவேற்றி விட்ட தாக பா.ஜ.க. சொல்லிக் கொள்கிறது. அந்தச் சட்டத்தில் என்ன இருக்கிறது என்றால், மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்த பிறகு - அதை வைத்து தொகுதி மறுவரையறைகள் முடிந்த பிறகு - அதனடிப்படையில் 33 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்குவோம் என்று சொல்லப்பட்டுள்ளது. அப்படியானால் மக்கள் தொகைக் கணக்கெடுப்பையும், அதனடிப்படையில் தொகுதி மறுவரையறையையும் இவர்கள் செய்யப் போகிறார்கள் என்பது தெளிவாகி விட்டது. அப்படிச் செய்தால் தொகுதி எண்ணிக்கை குறையும்என்று முதலமைச்சர் சந்தேகப்படுவதில் நியாயம் இருக்கத்தானே செய்கிறது?
அரசியல் சாசன சட்டப்பிரிவு 82 இன்படி ஒவ்வொரு முறை மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தி முடிக்கப்பட்டவுடன் ஒவ்வொரு மாநிலங்களுக்கும் ஒதுக்கப்படும் மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கை மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று சொல்கிறது.
நாடாளுமன்றத்தில் இயற்றப்படுகிற சட்டத்தின் மூலம் அமைக்கப்படும் தொகுதி மறுவரையறை ஆணையம், நாடாளுமன்றத்தில் இயற்றப்படும் சட்டத்தின் அடிப்படையில் தொகுதி மறுவரையறையை மேற்கொள்ள வேண்டும் என அரசியல் சாசனச் சட்டம் 82 இல் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை மனதில் வைத்துத்தான் முதலமைச்சர் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள். இதில் தவறு என்ன இருக்க முடியும்?
2026ஆம் ஆண்டுக்குப் பின்னர் வரும் மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும் என்று 84வது சட்டத் திருத்தம் கூறுகிறது. அதன்படிதான் முதலமைச்சர் அவர்கள் கேள்வி எழுப்புகிறார்கள்.
இதுவரை இந்திய நாடாளுமன்றத் தொகுதிகள் 494 என்றும், பின்னர் 522 என்றும், பின்னர் 543 என்றும் மாற்றப்பட்டது எல்லாம் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்துத்தான். எனவே அடுத்து நடக்கப் போவதும் மக்கள் தொகையை அடிப்படையாக வைத்துத்தான் இருக்க முடியும் என்பதால்தான் முதலமைச்சர் அவர்கள் இந்தக் கேள்வியைக் கேட்கிறார்கள். இதில் என்ன தவறு இருக்க முடியும்?
மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்ட பின்னர்தான் தொகுதி மறுவரையறை செய்யப்பட்டு மக்களவையின் எண்ணிக்கையும் ஒவ்வொரு மாநிலத்திற்கும் அதில் உள்ள பிரதிநிதித்துவமும் தீர்மானிக்கப்பட வேண்டும் எனச் சட்டம் சொல்கிறது.
அதன்படி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படவில்லை, தொகுதி மறுவரையறை செய்யப்படவில்லை ஆனால் 888 இருக்கைகளுடன் கூடிய புதிய நாடாளுமன்றக் கட்டிடத்தை ஏற்கனவே திறந்து விட்டார் பிரதமர் மோடி.
தொகுதி மறுவரையறையை நடத்தி முடித்து மக்களவையில் வடமாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை அதிகரித்து தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவத்தை ஒழித்துக் கட்ட வேண்டும் என்பதுதான் ஒன்றிய பா.ஜ.க. அரசின் திட்டம் என்பது தெளிவாகிறது.
மக்கள் தொகை அடிப்படையிலான தொகுதி மறுவரையறை என்பது‘தென் இந்தியாவின் தலைக்குக் கீழ் தொங்கும் கத்தி' என்று சொல்வதில் என்னதவறு இருக்க முடியும்?.