முரசொலி தலையங்கம்

சிந்துவெளி புதிருக்கு விடை கண்டுபிடித்தால் ரூ.8.5 கோடி - முதலமைச்சரின் உலகப் பரிசு : முரசொலி தலையங்கம்!

“முதலமைச்சரின் உலகப் பரிசு” என தலைப்பிட்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் அறிவிப்பை பாராட்டிய முரசொலி தலையங்கம்!

சிந்துவெளி புதிருக்கு விடை கண்டுபிடித்தால் ரூ.8.5 கோடி - முதலமைச்சரின் உலகப் பரிசு : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Chennamani
Updated on

ஒரு மாநிலத்தின் முதலமைச்சர், உலகளாவிய பரிசு ஒன்றை அறிவித்திருப்பது உலக வரலாற்றில் இதுவே முதல் முறையாக இருக்கும். இதுவே, இந்த திராவிடவியல் கோட்பாட்டு ஆட்சியின் மாபெரும் சாதனையாகும். இதன் மூலமாக மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் புகழ் உலகம் சுற்றும் புகழாக அமைந்துவிட்டது.

சிந்துவெளி எழுத்துகளில் 100 ஆண்டுகளாகப் புதைந்திருக்கும் புதிருக்கு விடை கண்டுபிடித்தால் எட்டரை கோடி ரூபாய் பரிசு என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறை சார்பில் சிந்துவெளி பண்பாட்டு கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு பன்னாட்டு கருத்தரங்கத்தைத் தொடங்கி வைத்து உரையாற்றிய மாண்புமிகு முதலமைச்சர் மூன்று முக்கியமான அறிவிப்புகளைச் செய்துள்ளார்கள்.

இதில் முதலாவது அறிவிப்பானது உலக ஆய்வாளர்கள் அனைவக்குமானது. “செழித்து வளர்ந்த சிந்துவெளிப் பண்பாட்டின் எழுத்து முறையை இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள இயலவில்லை. நூறு ஆண்டுகளைக் கடந்தும் தீர்க்கப்படாத இந்த சிந்துவெளி புதிர் குறித்து உலகெங்கும் உள்ள தொல்லியல் ஆய்வாளர்கள், மொழியில் அறிஞர்கள் மற்றும் கணினி வல்லுநர்கள் உட்பட பலரும் இன்றளவும் பெரும் முயற்சி செய்து வருகின்றனர்.

அம்முயற்சிகளை ஊக்கப்படுத்தும் வகையில் சிந்துவெளிப் புதிருக்கான உரிய விடையினை கண்டுபிடித்து, சிந்துவெளி எழுத்து முறையினைத் தெளிவாக புரிந்து கொள்ள உதவும் வழி வகையினை தொல்லியல் அறிஞர்கள் ஏற்கும்படி வெளிக்கொணரும் நபர்கள் அல்லது அமைப்பிற்கு ஒரு மில்லியன் அமெரிக்க டாலர் (8 கோடியே 57 லட்சத்து 70 ஆயிரம்) பரிசாக வழங்கப்படும்” என்று சொல்லி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

சிந்துவெளி நாகரிகம் முதன்முதலில் 1924ஆம் ஆண்டு செப்டம்பர் 20 ஆம் நாளன்று உலகிற்கு அறிவிக்கப்பட்டது. அதனை 'தி இல்லஸ்டி ரேட் லண்டன் நியூஸ்' என்ற இதழில் சர் ஜான் மார்ஷல் அறிவித்தார். இந்த அறிவிப்பு இந்தியத் துணைக்கண்டத்தின் வரலாற்றில் ஒரு திருப்பு முனையை உண்டாக்கியது. இதனைத்தான் தமிழ்நாடு அரசு கொண்டாடிக் கொண்டு இருக்கிறது.

ஜான் மார்ஷலுக்கு சிலை வைப்பதற்கான அடிக்கல்லை நாட்டி இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள். இந்தியாவில் வேறு எந்த மாநிலத்திலும் இத்தகைய ஒரு மாநாடு நடத்தப்பட்டது இல்லை. சிந்துச் சமவெளி ஆய்வு நூற்றாண்டு விழாவும் கொண்டாடப்பட்டு இருக்காது. சிந்துவெளி நாகரிகத்துக்கும் தமிழர் நாகரிகத்துக்குமான தொடர்பும், ஒற்றுமையும் மெய்ப்பிக்கப்பட்டு விட்டது.

சிந்துவெளி புதிருக்கு விடை கண்டுபிடித்தால் ரூ.8.5 கோடி - முதலமைச்சரின் உலகப் பரிசு : முரசொலி தலையங்கம்!

கீழடி காளைகள்தான், சிந்துவெளியிலும் இருக்கிறது. நமது தாய்த்தெய்வ வழிபாடு அங்கும் இருக்கிறது. கீழடி கட்டடக் கலையும் மண்பாண்டங்களும் சிந்துவெளியிலும் இருக்கின்றன. இந்த வரிசையில் ஆர்.பாலகிருஷ்ணனின் ஆய்வு அடுத்த கட்டத்துக்கு நகர்த்தியது.

ஆர்.பாலகிருஷ்ணன் எழுதிய 'சிந்து முதல் வைகை வரை நூலானது நாம் பயன்படுத்தும் முக்கியமான தமிழ்ச் சொற்களில் பெரும்பாலானவை சிந்துவெளிப் பகுதியாக முன்பு இருந்த பகுதிகளில் இப்போதும் பயன்படுத்தப்படும் சொற்களாக இருக்கின்றன என்பதை மெய்ப்பித்தார்.

கொற்கை, வஞ்சி, தொண்டி, ஊர், பட்டி, பள்ளி, பாரி, பேகன், கரிகாலன், சோழன், சேரல், உதியன், மாறன், சாத்தனார், கபிலர், நக்கீர, கோட்டை, வேல் ஆகிய சொற்கள் மருவிய சொற்களாக இன்னமும் பாகிஸ்தான், ஆப்கன் ஆகிய நாடுகளிலும் இந்தியாவில் குஜராத், மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களிலும் பயன்பாட்டில் இருப்பதாக அவர் சொல்லி இருக்கிறார்.

கண்ணகி தெய்வமாக தமிழ் மரபில் இருப்பதைப் போல குஜராத்தில் கண்கை கோவிலும், கண்கேஸ்வரி கோவிலும் உள்ளதாகச் சொல்கிறார். மொகஞ்சதாரோ பெண்கள் சிலம்பு அணிந்துள்ளார்கள். தமிழ்நாடு வாக்காளர் பட்டியலில் இப்போது கண்ணகி என்ற பெயரில் 24 ஆயிரத்து 710 பெண்கள் இருக்கிறார்கள் என்கிறார். பாகிஸ்தான், ஆப்கனில் 'கண்ணகி' என்ற பெயர் மருவி இன்னமும் இருக்கிறது என்கிறார்.

இந்த வரிசையில் சிந்துவெளி எழுத்து முறை குறித்து ஆராய வேண்டி உள்ளது. நூறாண்டு காலமாக விடுவிக்கப்படாமல் உள்ள சிந்துவெளி எழுத்து முறை குறித்த புதிர்களை விடுவிப்பதில் உள்ள சிக்கல்கள், சவால்கள், வழிமுறைகளை ஆராயவே இந்த கருத்தரங்கை நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசும், நிதித் துறை செயலாளர் மற்றும் தொல்லியல் துறை ஆணையர் உதயச்சந்திரனும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள்.

'சிந்துவெளி வரிவடிவங்களும் தமிழ்நாட்டுக் குறியீடுகளும்' என்ற தலைப்பில் ஆய்வாளர்கள் கா.ராஜன், இரா.சிவானந்தம் ஆகிய இருவரும்இணைந்து எழுதிய கட்டுரையில், "சிந்துவெளி மக்கள் நன்கு வளர்ச்சி எழுத்துமுறையைப் பெற்றிருந்தனர். இத்தகைய வரி வடிவங்களாக இதுவரை 4 ஆயிரம் சான்றுகள் கிடைத்துள்ளன.

நீளமான சொற்றொடராக26 வரி வடிவங்கள் காணப்படுகின்றன. பல்வேறு ஆய்வாளர்கள் சிந்துவெளி எழுத்து மொழி, மூல திராவிட மொழி என்று கருதினார்கள். சிலர் இந்தோ ஐரோப்பிய மொழி எனக் கருதினார்கள். சிலர் இவை குறியீடுகள் மட்டுமே என்றும் சொல்கிறார்கள். தமிழ்நாட்டில் காணப்படும் பல குறியீடுகள் சிந்துவெளி எழுத்துக்களின் இணையாக விளங்குகின்றன.

சில குறியீடுகளும் ஒரே மாதிரியாக உள்ளன. ஏறத்தாழ 60 விழுக்காடு குறியீடுகள் சிந்துவெளி எழுத்துக்களில் இணையாகக் காணப்படுகின்றன" என்று குறிப் பிட்டுள்ளார்கள். இவை அனைத்தையும் கொண்டு சிந்துவெளி மக்கள் பயன்படுத்திய மொழி எது என்பதைக் கண்டறிய முதலமைச்சர் அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

இந்தியாவிலேயே முதன்முறையாகத் தொல்லியல் ஆழ்கடல் கள ஆய்வை விரிவாக மேற்கொள்ள பெருமுயற்சி எடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர். இன்றைய முதலமைச்சர் அவர்கள் சிந்துவெளி எழுத்துகளின் புதிர்களை விடுவிக்க முயற்சிகள் எடுத்துள்ளார்கள். முதலமைச்சரின் அறிவிப்பானது அவரது பெயரை உலகமே உன்னிப்பாக கவனிக்க வைத்திருக்கிறது.

banner

Related Stories

Related Stories