முரசொலி தலையங்கம்

’பொள்ளாச்சி’ பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? : முரசொலி சரமாரி கேள்வி!

பொள்ளாச்சி சம்பவத்தில் அதிமுக நிர்வாகிகளை காப்பாற்ற முந்தைய அதிமுக அரசு எப்படியெல்லாம் நாடகமாடியது என்பதை மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பழனிசாமி பேசி வருவதாக முரசொலி தலையங்கம் தீட்டியுள்ளது.

’பொள்ளாச்சி’ பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? : முரசொலி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (30-12-2024)

'பொள்ளாச்சி' பழனிசாமிக்கு...

எடப்பாடி பழனிசாமி, தான் ஒரு 'பொள்ளாச்சி' பழனிசாமி என்பதை மறந்து அறிக்கைகள் விடுவதும், போராட்டம் நடத்துவதும், பேட்டிகளில் கனைப்பதுமாக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கப்பட்டார். ஒரே நாளில் இதன் உண்மைக் குற்றவாளி ஞானசேகரன் என்பவர் கைது செய்யப்பட்டார். இதில் என்ன குறை கண்டார் பழனிசாமி?

குற்றத்தை மறைத்திருந்தாலும், குற்றவாளியைக் கைது செய்யாமல் விட்டிருந்தாலும் பழனிசாமி குறை சொல்லலாம். உடனடியாக குற்றவாளி கைது செய்யப்படுகிறார். குற்றச் சம்பவத்தை மறைக்கும் செயல் எங்குமே நடக்கவில்லையே!

பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்ததும், உடனடியாக எப்.ஐ.ஆர். எனப்படும் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. அவருக்கும் அந்த அறிக்கை தரப்பட்டது. நான்கு தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. ஞானசேகரன் என்பவருக்கு இதில் தொடர்பு இருப்பதற்கான தடயங்கள் இருப்பதைக் கண்டுபிடித்ததும் அந்த நபர் கைது செய்யப்பட்டார். இவை அனைத்தும் 24 மணிநேரத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் ஆகும்.

அண்ணா பல்கலைக்கழகத்தில் 70 கேமராக்கள் உள்ளது. அதில் 56 கேமராக்கள் இயங்குகிறது. அதில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை நடத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு வீடியோ காலில் ஞானசேகரனை காவல்துறை காட்டி உறுதி செய்து விட்டது. அதன்பிறகும் பழனிசாமி, 'கிரிமினல் சைட்' லாயர் போல கேள்விகளைக் கேட்டுக் கொண்டு இருக்கிறார்.

"யாரோ ஒருவரை சார் என்று சொல்லி இருக்கிறார் குற்றவாளி. யார் அந்த சார்?" என்று கேட்கிறார் பழனிசாமி. அதற்கும் சென்னை மாநகர ஆணையர் பதில் அளித்து விட்டார். "இதுவரை நடைபெற்ற புலனாய்வின் படி ஞானசேகரன் ஒருவர்தான் குற்றவாளி. சம்பவம் நடந்தபோது ஞானசேகரன் ஒருவருடன் கைப்பேசி மூலமாக பேசியதாக தகவல் பரவுகிறது. ஆனால் அது உண்மை அல்ல. சம்பவம் நடந்தபோது கைப்பேசியை 'ஏரோபிளேன் மோடில்' ஞானசேகரன் வைத்துள்ளார். அவர் மாணவியை மிரட்டுவதற்கும், பயமுறுத்துவதற்கும் பொய்யாக கைப்பேசி மூலம் ஒருவரிடம் பேசுவதுபோல் நாடகமாடியுள்ளார்" என்று விளக்கம் அளித்துள்ளார் ஆணையர்.

முதல் தகவல் அறிக்கை தவறுதலாக வெளியாகி விட்டது. இது தொடர்பாக தனியாக ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்படி ஒவ்வொரு செய்தியையும் நுணுக்கமாக ஆராய்ந்து நடவடிக்கைகளை எடுத்து வருகிறது தமிழ்நாடு காவல் துறை. ஆனால் பழனிசாமி இதில் அரசியல் லாபம் தேடுவதற்காக போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்.

இந்த 'யோக்கிய சிகாமணி' ஆட்சியில் நடைபெற்ற பொள்ளாச்சி சம்பவத்தில் என்ன செய்தார்? எப்படி நடந்து கொண்டார்?

பொள்ளாச்சியில் பாதிக்கப்பட்ட ஒரு பெண், இந்த சம்பவம் குறித்து தனது அண்ணனிடம் சொல்கிறார். அவர் பிரச்சினைக்குரிய நபர்கள் நான்கு பேரை அடையாளம் கண்டு அடித்துவிடுகிறார். இந்த நான்கு பேரையும் அவரே பிடித்துக் கொண்டு வந்து பொள்ளாச்சி டவுன் காவல் நிலையத்திலும் ஒப்படைக்கிறார். வீடியோக்கள், செல்போன்களையும் தருகிறார். இதனைப் பெற்றுக்கொண்ட பழனிசாமி ஆட்சி போலீசார், வழக்கு பதியவில்லை. அனைவரையும் விடுவித்து விட்டனர். இந்தப் புகாரை அப்படியே 'குற்ற' தரப்புக்கு கொடுத்து விடுகிறார்கள். இந்த இடத்தில் அ.தி.மு.க. பிரமுகர் பார் நாகராஜன் என்பவர் வருகிறார். அவர், பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணனை தாக்குகிறார்.

இதன்பிறகு தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டார்கள். தி.மு.க. மகளிரணிச் செயலாளர் கனிமொழி தலைமையில் பொள்ளாச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. மூன்று பேரைக் கைது செய்து கணக்குக் காட்டி முடிக்கப் பார்த்தார் பழனிசாமி. முக்கியமான குற்றவாளியான திருநாவுக்கரசுவைக் கைது செய்யவில்லை. இதனை சுட்டிக்காட்டி தி.மு.க. தலைவர் அறிக்கை வெளியிட்டார்கள். இது பற்றி முதலமைச்சர் பழனிசாமியிடம் கேட்டபோது, 'அ.தி.மு.க.வினருக்கு இதில் தொடர்பு இருக்கிறது என்பதற்கு ஆதாரம் இருந்தால் கொடுங்கள்' என்று கேட்டார்.

இந்த குற்றத்தில் தொடர்புடையவர்களுக்கும் அ.தி.மு.க. பிரமுகர்களுக்குமான தொடர்பை 'நக்கீரன்' இதழ் வெளியிட்டது. நக்கீரன் நிருபரை, எடப்பாடி பழனிசாமி பேரைச் சொல்லியும், அன்றைய அமைச்சர் வேலுமணி பேரைச் சொல்லியும்தான் மிரட்டினார்கள். இதனை அப்போதே நக்கீரன் இதழ் வெளியிட்டுள்ளது. விசாரணை என்ற பெயரால் தடயங்களை மறைத்தது பழனிசாமி அரசு. பின்னர் வழக்கு சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது.

’பொள்ளாச்சி’ பழனிசாமிக்கு வெட்கமாக இல்லையா? : முரசொலி சரமாரி கேள்வி!

பொள்ளாச்சி சம்பவமே அ.தி.மு.க. பிரமுகர்களால் தான் நடந்தப்பட்டது என்பதை சி.பி.ஐ. உறுதி செய்தது. அருளானந்தம், பாபு, கரோன்பால் ஆகிய மூவர் கைது செய்யப்பட்டார்கள். இந்த மூவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள். அருளானந்தம் என்பவர் அ.தி.மு.க. மாணவரணி செயலாளராக இருக்கிறார். அன்றைய அமைச்சர் வேலுமணியின் கைத்தடியாக வலம் வந்துள்ளார். வேலுமணியுடன் பல்வேறு விழாக்களில் பங்கெடுத்துள்ளார். அதேபோல், பொள்ளாச்சி ஜெயராமனுடன் இருக்கிறார். பல்வேறு நிகழ்ச்சிகளில் ஜெயராமனுடன் இருந்துள்ளார். ஜெயராமன் பேட்டி கொடுக்கும் போதெல்லாம் அவரோடு அருளானந்தம் உள்ளார். அ.தி.மு.க.வின் சுவரொட்டிகளில் அருளானந்தம் படம் இடம்பெற்றுள்ளது. அதேபோல் பாபு, கரோன்பால் ஆகிய இருவரும் பொள்ளாச்சி ஆச்சிடிபட்டி ஊராட்சித் தலைவரும் அ.தி.மு.க. பிரமுகருமான ரெங்கநாதனுடன் நெருக்கமாக இருந்துள்ளார்கள். இவர்கள் படங்களும் சமூக வலைத்தளங்களில் பரவியது. இப்படி கைதான மூவரும் அ.தி.மு.க.வைச் சேர்ந்தவர்கள்.

இவர்களைக் காப்பாற்றுவதற்காகத்தான் இப்படி ஒரு சம்பவமே நடக்காதது போல நாடகம் ஆடியது அன்றைய அ.தி.மு.க. அரசு. சம்பவம் வெளியே தெரிந்ததும், பார் நாகராஜனை கட்சியை விட்டு நீக்கினார் பழனிசாமி. கட்சியை விட்டு நீக்கிய மறுநாளே மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்குச் சென்று துணிச்சலாக பேட்டி கொடுத்தார் பார் நாகராஜன்.

இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து பேட்டி கொடுத்துக் கொண்டிருக்கிறார் பழனிசாமி. வெட்கமாக இல்லையா?

banner

Related Stories

Related Stories