முரசொலி தலையங்கம்

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!

மேடாகக் கிடந்த இடத்தை மேடாக மாற்றுவது சாதனை அல்ல, பள்ளமாகக் கிடந்ததை தரை மட்டத்துக்கு உயர்த்தி, அதனை மேடாக மாற்றுவதுதான் சாதனை.

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (17-05-2024)

கவனம் பெறும் தமிழ்நாடு

தமிழ்நாடு அனைத்து வகையிலும் கவனம் பெறத் தொடங்கி இருக்கிறது. எனவே அது பொருளாதார வளர்ச்சியாக வளரத் தொடங்கி இருக்கிறது.

“தமிழ்நாடு அரசின் பொருளாதாரம் நடப்பு நிதியாண்டில் 8.08 சதவிகிதம் முதல் 10.69 சதவிகிதம் வரை உயரும். இந்திய சராசரி பொருளாதார வளர்ச்சியை விட தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி வேகமாக நிகழ்ந்து வருகிறது. இரட்டை இலக்கை அடைவதற்கான திறன் தமிழ்நாட்டுக்கு உள்ளது. 2021 முதல் 23 வரை மாநிலத்தின் சராசரி பொருளாதார வளர்ச்சி 8 சதவிகிதமாக இருந்தது. இது அடுத்தடுத்து வரும் காலங்களில் 10 சதவிகிதத்தை அடையும். தமிழ்நாடு அரசின் பல்வேறு செயல்பாடுகள்தான் இதற்குக் காரணம். தமிழ்நாடு அரசு மேற்கொண்ட முயற்சிகள் வளர்ச்சியின் வேகத்தையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்துள்ளது.” என்று சி.ரங்கராஜன், கே.ஆர்.சண்முகம் ஆகியோர் அடங்கிய குழுவானது தனது ஆய்வறிக்கையை வெளியிட்டுள்ளது. இது சாதாரணமான செய்தி அல்ல, சாதாரணமான தகவல் அல்ல.

இந்திய ரிசர்வ் வங்கியின் முன்னாள் கவர்னர் சி.ரங்கராஜன். மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்கனாமிக்ஸ் தலைவர் மற்றும் இயக்குநராக இருப்பவர் கே.ஆர். சண்முகம். எனவேதான் இவர்கள் ஆய்வறிக்கை முக்கியமானதாக கவனிக்கப்படுகிறது. இவர்களால் தமிழ்நாடு அரசு கவனம் பெறுகிறது.

ஒரு மாநிலத்தில் தொழில் முதலீடுகள் மேற்கொள்ளப்பட வேண்டுமென்றால் அம்மாநிலத்தின் ஆட்சி மீது நல்லெண்ணம் இருக்க வேண்டும். அங்கு சட்டம் ஒழுங்கு நல்ல முறையில் பேணப்பட்டு, அமைதியான சூழல் நிலவவேண்டும். ஆட்சியாளர்கள் மீது உயர்மதிப்பு இருக்க வேண்டும். அம்மாநிலத்தின் உள்கட்டமைப்பு வசதிகள் சிறப்பாக இருக்க வேண்டும். இவை அனைத்தும் சிறப்பாக இருந்ததால் தான் நிறுவனங்கள் தமிழ்நாட்டை நோக்கி வருகின்றன.

இந்த இலக்கை அடைவதற்காக கடந்த மூன்று ஆண்டுகளாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எடுத்த முயற்சிகள்தான் மிக முக்கியமானவை ஆகும். முதலில் தொழில் துறை அமைச்சராக இருந்த தங்கம் தென்னரசும், இப்போது தொழில் துறை அமைச்சராகச் செயல்பட்டு வரும் டி.ஆர்.பி.ராஜாவும் எடுத்த முயற்சிகள் இதனுள் அடங்கி இருக்கின்றன.

கடந்த இரண்டரை ஆண்டுகளாகவே, ‘முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடுதான்’ என்று தமிழ்நாடு அங்கீகாரம் பெற்றுள்ளது. மாநிலத்தின் முதலீடு ஈர்ப்புத் திறனை உலகிற்கு வெளிப்படுத்தவும், உலக முதலீட்டாளர்கள் மாநாட்டினை முதலமைச்சர் தொடர்ந்து நடத்தி வந்தார்கள். நிறுவனங்கள் அதில் ஆர்வமுடன் பங்கெடுத்தன. தொழில்களைத் தொடங்குவதிலும் ஆர்வமாக முன்வந்தன.

“இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைப்பதில் தமிழ்நாடு முக்கியப் பங்காற்றிட வேண்டும் என்ற குறிக்கோளுடன்தான், 2030ஆம் ஆண்டிற்குள், தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு உயர்த்த வேண்டும் என்று ஒரு இலட்சிய இலக்கை நான் நிர்ணயித்திருக்கிறேன். உயர் தொழில் நுட்பம் சார்ந்த தொழில் முதலீடுகளை ஈர்ப்பது, மற்றும் வேலைவாய்ப்பு மிகுந்த முதலீடுகளை ஈர்ப்பது என்ற இருமுனை அணுகுமுறையை நாங்கள் மேற்கொண்டு வருகின்றோம்” என்று முதலமைச்சர் இலக்கு நிர்ணயித்ததுதான் இந்த வெற்றிக்குக் காரணம் ஆகும்.

முதலீட்டாளர்கள் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்பதை தமிழ்நாடு அரசு முதலில் கணித்தது. வர்த்தகத்தை எளிதாக்கியது. திறமையான பணியாளர்களை உருவாக்கினார்கள். எதிர்காலத்துக்கான தொழில்களைக் கணித்து அதற்கான வழிகளை ஏற்பாடு செய்து தந்தார்கள். தொழிற்சாலை களுக்கும் கல்வி நிறுவனங்களுக்கும் இணைப்புப் பாலம் ஏற்படுத்தினார்கள். அனைத்து மாவட்டங்களிலும் தொழிற்சாலைகளை உருவாக்க முயற்சிகள் எடுத்தார்கள். இது சீரான வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்தது.

மிகப்பெரிய நிறுவனங்களும் தமிழ்நாட்டை நோக்கி வந்தன. சிறுகுறு நடுத்தர நிறுவனங்களும் அதிகமாக உருவாகின. கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஆட்சிக்கு வந்தது தி.மு.க. அரசு. அனைத்துத் தொழில்களும் முடங்கிய காலமாக அது அமைந்திருந்தது. அப்போது பொதுமுடக்கம் மட்டுமே தீர்வாகாது எனத் திட்டமிட்டார் முதலமைச்சர். அனைத்துத் தொழில்கள் மீதும் சிறப்பு கவனம் செலுத்தி வளர்த்தெடுக்க முயற்சித்தார். அதைத்தான் இன்று கண்ணால் பார்க்கிறோம்.

”முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் அனைத்து வகையிலும் கவனம் பெறும் தமிழ்நாடு” : முரசொலி!

தமிழ்நாட்டில் ஏற்கனவே தங்கள் தொழில்திட்டங்களை அமைத்துள்ள பல நிறுவனங்கள், தங்கள் திட்டங்களை நன்கு விரிவுபடுத்திக் கொண்டுள்ளனர். மிகப் பெரும் தொழில் நிறுவனங்கள் தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. புத்தாக்கத் தொழில் நிறுவனங்கள் தங்கள் தொழிலை தமிழ்நாட்டில் தொடங்கி உள்ளன. அந்த வகையில் முதலீடுகளை ஈர்க்கும் மாநிலங்களில், அகில இந்திய அளவில் தமிழ்நாடு முன்னணி நிலை வகிக்கிறது தமிழ்நாடு. உலக அளவிலான முதலீட்டாளர்களை நன்கு வரவேற்கும் மாநிலமாக தமிழ்நாடு உள்ளது.

மூலதனம் நிறைந்த மின்னணுப் பொருட்கள் உற்பத்தி, மின்சார வாகனங்கள், சோலார் PV செல்கள் உற்பத்தி, பசுமை ஹைட்ரஜன், பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உள்ளிட்ட துறைகளிலும், ஜவுளி மற்றும் ஆடைகள், காலணிகள் மற்றும் தோல் பொருட்கள், உணவு பதப்படுத்துதல் போன்ற வேலைவாய்ப்பு நிறைந்த துறைகள் ஆகிய பல்வேறு வகையான தொழில்கள் தமிழ்நாட்டில் குவியத் தொடங்கி உள்ளன. கடந்த சனவரி மாதம் நடத்தப்பட்ட முதலீட்டாளர்கள் மாநாட்டில் ரூ. 6 லட்சம் கோடி மதிப்பிலான தொழில் முதலீடுகள் ஈர்க்கப்பட்டது. இதன் மூலமாக நேரடியாகவும் மறைமுகமாகவும் 26 லட்சம் புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்க இருக்கிறது.

மிக மோசமான வகையில் 2011- 2021 ஆகிய பத்தாண்டு காலத்தைப் பாழ்படுத்தி வைத்திருந்தது அ.தி.மு.க. அரசு. நிர்வாகம் சீரழிந்து, நிதி நெருக்கடியும் அதிகமாகி ஒட்டுமொத்த மாநிலத்தையும் தனது தற்குறித்தனத்தால் பாழ்படுத்தி வைத்திருந்தார் பழனிசாமி. அவரை தலையாட்டிப் பொம்மையாக வைத்திருந்து தமிழ்நாட்டைச் சுரண்டி வந்தது ஒன்றிய பா.ஜ.க. அரசு. உரிமைகளையும் பறித்தது. தமிழ்நாட்டின் உழைப்பையும் சுரண்டிக் கொழுத்தது. வசதியையும் ஏற்படுத்தித் தரவில்லை, வளத்தையும் சுரண்டிப் போனது பா.ஜ.க. அரசு. இத்தகைய மிகமிக மோசமான சூழலில் தான் மாநிலத்தின் முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதை நினைவு கூர்ந்துள்ளது.

மேடாகக் கிடந்த இடத்தை மேடாக மாற்றுவது சாதனை அல்ல, பள்ளமாகக் கிடந்ததை தரை மட்டத்துக்கு உயர்த்தி, அதனை மேடாக மாற்றுவதுதான் சாதனை. அதைத்தான் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செய்து காட்டி இருப்பதாக பாராட்டு தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அடுத்தடுத்த ஆண்டுகளில் இந்த சாதனைச் சரித்திரம் இன்னும் அதிகம் ஆகப் போவதை நாம் பார்க்கப் போகிறோம்.

banner

Related Stories

Related Stories