முரசொலி தலையங்கம்

இந்துக்களுக்காக கண்ணீர் விடும் பாஜக 10 ஆண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? : முரசொலி கேள்வி!

குடும்பக் கட்டுப்பாட்டு முறையை கடைப்பிடித்த காரணத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொகுதி இழப்பு முதல் நிதி இழப்பு வரை சந்திக்கப் போகிறதே? இதற்கு பாஜகவின் பதில் என்ன?

இந்துக்களுக்காக கண்ணீர் விடும் பாஜக 10 ஆண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? : முரசொலி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (16-05-2024)

விஷமத்தனமான அறிக்கை

இறுதியாக மதத்தை கையில் எடுத்துக் கொண்டு மாநிலம் மாநிலமாக சுற்றிக் கொண்டு இருக்கிறார் பிரதமர் மோடி. அவரைக் காப்பாற்ற விஷமத்தனமான அறிக்கை ஒன்றையும் வெளியிட்டு இருக்கிறார்கள். இந்து மதப் பிரிவு மக்கள் பிறப்பு சதவிகிதம் சரிந்துவிட்டதாம். இஸ்லாமியர்களின் எண்ணிக்கை உயர்ந்து விட்டதாம். இதன் மூலமாக என்ன சொல்ல வருகிறார்கள். பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்றா?!

இந்தியாவில் கடந்த 1950 முதல் 2015 வரையிலான 65 ஆண்டுகளில் இந்துக்களின் எண்ணிக்கை 7.8 சதவிகிதம் சரிந்துவிட்டது. இஸ்லாமியர்களின் எண்ணிக்கை 43.15 சதவிகிதமாக உயர்ந்துவிட்டது என்று பிரதமரின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் ஆய்வு அறிக்கை சொல்கிறதாம். அதனை பா.ஜ.க.வின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு இருக்கிறார்.

‘மக்கள் தொகையில் மதச் சிறுபான்மையினரின் பங்கு : நாடு தழுவிய பகுப்பாய்வு ( 1950 – 2015) என்று இந்த அறிக்கைக்குப் பெயர். பொருளாதார ஆலோசனைக் குழு உறுப்பினரான ஷாமிகா ரவி என்பவர் இந்த அறிக்கையை தயாரித்துள்ளார். இதனை பா.ஜ.க. செய்தி தொடர்பாளர் சுதான்ஷூ திரிவேதி வெளியிட்டு விட்டு என்ன சொல்கிறார் தெரியுமா?

“இஸ்லாமியர்களின் எண்ணிக்கை வேகமாக அதிகரிப்பது கவலை அளிக்கும் வகையில் உள்ளது. காங்கிரசின் மதச்சார்பின்மை என்ற மறைப்பைப் பயன்படுத்தி ஊடுருவல் மற்றும் மதமாற்றத்தின் மூலம் அவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்று சொல்லி இருக்கிறார் அவர்.

ஒன்றிய அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர், “நாட்டில் ஒரு குறிப்பிட்ட மதத்தினரின் எண்ணிக்கை மட்டும் அதிகரித்து வரும் விதத்தில் சட்டவிரோத ஊடுருவல் மற்றும் மதமாற்றத்தால் ஏற்பட்ட அதிகரிப்பு எவ்வளவு?”என்று கேட்டிருக்கிறார். பிரதமரின் பொருளாதார ஆய்வுக்குழுவின் ஆய்வறிக்கையையும், இவர்கள் இருவரது பேட்டிகளையும் ஊடகங்களில் பெரிய அளவில் வர வைத்துள்ளார்கள். இதன் நோக்கம் என்ன?

“இந்துக்கள் தொகை குறைந்து விட்டது, இசுலாமியர்கள் தொகை அதிகமாகி விட்டது, அதனால் பா.ஜ.க.வுக்கு வாக்களியுங்கள் என்று கதறுகிறது பா.ஜ.க. தோல்வியின் முகட்டில் இருப்பவர்கள் அதில் இருந்து தப்பிக்க ஏதாவது கிடைக்குமா என்று பார்க்கிறார்கள். அதற்காக இது போன்ற போலித்தனமான புள்ளிவிபரங்களை எடுத்து வருகிறார்கள்.

மதரீதியாக நாட்டையும் நாட்டு மக்களையும் பிளவுபடுத்துவதற்கான முயற்சிதான் இது போன்ற செய்திகள் ஆகும். நாம் நேரடியாகக் கேட்கும் கேள்வி என்பது, ‘இந்துக்களுக்காக கண்ணீர் விடும் நீங்கள் இந்த பத்தாண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? என்பதுதான்.

இந்துக்களுக்காக கண்ணீர் விடும் பாஜக 10 ஆண்டு காலத்தில் இந்துக்களுக்காகச் செய்தது என்ன? : முரசொலி கேள்வி!

இந்துக்களுக்காக விலைவாசி குறைக்கப்பட்டதா? இந்துக்களுக்கு பெட்ரோல் விலையை குறைத்தீர்களா? இந்துக்களுக்கு டீசல் விலையை குறைத்தீர்களா? இந்து விவசாயிகளின் வருமானம் இரண்டு மடங்கு ஆனதா? பத்தாண்டு காலத்தில் 20 கோடி இந்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை கொடுத்தீர்களா? இந்து மாணவர்களின் கல்விக் கடன் அனைத்தும் ரத்து செய்யப்பட்டதா? கோடிக்கணக்கான இந்துக்களுக்கு இலவசமாக வீடு கட்டிக் கொடுத்தீர்களா? என்ன நன்மையை இந்துக்களுக்குச் செய்தீர்கள்?

பா.ஜ.க. ஆட்சி அதானிக்கும், அம்பானிக்கும் குறிப்பிட்ட 50 தொழிலதிபர்களுக்கும் மட்டுமே நன்மை செய்த ஆட்சி என்பதை இன்று இந்திய நாட்டு மக்கள் அனைவரும் உணர்ந்து விட்டார்கள். இது இன்று படித்தவர்கள் மத்தியில் மட்டுமல்ல, கிராமப்புற மக்கள் மத்தியிலும் போய்ச் சேர்ந்த தகவலாக மாறிவிட்டது. இதற்கு பா.ஜ.க. தலைமையால் பதில் சொல்ல முடியவில்லை. உடனே, இந்து - இஸ்லாமியர் என்று பேசத் தொடங்கி விட்டார்கள்.

பட்டியலின - பழங்குடியின – பிற்படுத்தப்பட்ட மக்களது இடஒதுக்கீட்டை எடுத்து சிறுபான்மையினருக்கு கொடுத்து விடப் போகிறார்கள் என்று பொய்ப் பிரச்சாரம் செய்து வருகிறார் பிரதமர் மோடி. அதற்குத்தான் இப்போது இந்த புள்ளிவிபரத்தை வெளியிட வைத்துள்ளார்கள்.

சிறுபான்மையினருக்கு இடஒதுக்கீட்டை தூக்கி கொடுத்து விடுவார்கள் என்று சொல்லும் மோடி, தனது பத்தாண்டு காலத்தில் பட்டியலின இடஒதுக்கீட்டை முழுமையாக கொடுத்துவிட்டாரா? பழங்குடியினருக்கான இடஒதுக்கீட்டை முழுமையாகக் கொடுத்து விட்டாரா? இதரப் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூக நீதியை முழுமையாக கொடுத்து விட்டாரா? இது எதையும் ஒழுங்காகச் செய்யாதவர் தான் இப்போது தேர்தல் நேரத்தில் கண்ணீர் விடுகிறார்.

இசுலாமியர் எண்ணிக்கை அதிகமாகி விடும் என்பதுதான் சங்பரிவார் அமைப்புகள் காலம் காலமாக கிளப்பி வரும் பீதி ஆகும். அதைத்தான் பா.ஜ.க. இப்போது இந்த தேர்தலில் பயன்படுத்துகிறது. இந்தியாவின் குடும்பக் கட்டுப்பாட்டு முறையை இசுலாமியர்கள் கடைப்பிடிப்பது இல்லை என்பது இவர்களது குற்றச்சாட்டு. குடும்பக் கட்டுப்பாட்டு முறையை கடைப்பிடித்த காரணத்தால் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்கள் தொகுதி இழப்பு முதல் நிதி இழப்பு வரை சந்திக்கப் போகிறதே? இதற்கு பா.ஜ.க.வின் பதில் என்ன? இது இரட்டை அளவுகோல் அல்லவா?.

‘இசுலாமியர்கள் அதிகக் குழந்தை பெற்றுக் கொள்கிறார்கள் என்பதையும் புள்ளிவிபரங்களுடன் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயற்குழு உறுப்பினர் கனகராஜ் மறுத்து எழுதி இருக்கிறார். ஆண்டுக்கு ஆண்டு இஸ்லாமிய குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்து வருவதை 1998க்கும் 2021 ஆம் ஆண்டுக்கும் இடையிலான புள்ளிவிபரங்களை வைத்து அவர் தீக்கதிர் நாளேட்டில் கடந்த 11-ஆம் தேதி எழுதி இருக்கிறார். ஆனால் பா.ஜ.க.வுக்கு தேவை ஆதாரங்கள் அல்ல, அவதூறு அரசியல்தான் தேவை. தாலியைப் பறித்து விடுவார்கள், எருமையைப் பறித்துவிடுவார்கள் என்பதைப் போலத்தான் இதுவும்.

banner

Related Stories

Related Stories