முரசொலி தலையங்கம்

‘நீட்’ தேர்வு - தொடரும் மரணமும் மோசடிகளும் : முரசொலி தலையங்கம்!

மாணவர்களின் தற்கொலை மற்றும் தேர்வு மோசடிகளை தடுப்பதற்கு நீட் தேர்வை ரத்து செய்வதுதான், ஒரே தீர்வு!

‘நீட்’ தேர்வு -  தொடரும் மரணமும் மோசடிகளும் : முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (15-05-2024)

தொடரும் மரணமும் மோசடிகளும்

‘நீட்’ தேர்வு என்பது மிகப்பெரிய பலிபீடம் என்பதை நாம் தொடர்ந்து சொல்லி வருகிறோம். இதுவரை தமிழ்நாட்டில் 26 பேர் மரணம் அடைந்துள்ளார்கள்.

நீட் தேர்வுக்காக பயிற்சி எடுத்துவந்த மாணவர்கள் – கடந்த எட்டு ஆண்டுகளில் இதுவரை 119 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். கடந்த ஆண்டு மட்டும் 24 மாணவர்கள் தற்கொலை செய்துள்ளார்கள் என்ற அதிர்ச்சியான தகவலை ராஜஸ்தான் மாநில அரசே வெளியிட்டு இருந்தது.

ராஜஸ்தான் மாநிலம் கோட்டா நகரில் ஐ.ஐ.டி. – ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு, நீட் நுழைவுத் தேர்வு போன்ற போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன. இங்கு இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் வந்து தங்கி பயிற்சி பெறுகிறார்கள். இவர்களில்

2015 ஆம் ஆண்டு 18 மாணவர்கள் –

2016 ஆம் ஆண்டில் 17 மாணவர்கள் –

2017 ஆம் ஆண்டில் 7 மாணவர்கள் –

2018 ஆம் ஆண்டு 20 மாணவர்கள் –

2019 – ஆம் ஆண்டு 15 மாணவர்கள் –

2022 ஆம் ஆண்டில் 15 மாணவர்கள் – தற்கொலை செய்து கொண்டுள்ளார்கள். இவர்கள் அனைவரும் இந்த பயிற்சி மையங்களில் படித்து வந்தவர்கள்.

இதன் தொடர்ச்சியாக கடந்த 4 ஆம் தேதியன்று ஒரு மாணவன் தற்கொலை செய்து கொண்டுள்ளார். பீகார் மாநிலத்தில் நாளந்தாவைச் சேர்ந்த பிரியான்சு குமார் என்பவர் தனது பெற்றோருக்கு கடிதம் எழுதி வைத்துவிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இப்படி நீட் தற்கொலைகள் தொடர்ந்து கொண்டே இருக்கிறது.

இதற்கு மத்தியில் நீட் தேர்வு முறைகேடுகளும் தொடர்கிறது. கடந்த 5 ஆம் தேதி நீட் தேர்வு நடைபெற்றது. 571 நகரங்களில் 4 ஆயிரத்து 751 மையங்களில் நடைபெற்ற நீட் தேர்வில் 24 லட்சம் மாணவர்கள் எழுதி உள்ளார்கள். இதில் பல்வேறு மாநிலங்களில் முறைகேடுகள் நடந்துள்ளன.

* குஜராத் மாநிலம் கோத்ராவில் உள்ள தேர்வு மையத்தில் பள்ளி ஆசிரியர் துஷார் பட், துணை கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டிருந் தார். இவரை அணுகிய இரண்டு பேர், பேரம் பேசியுள்ளனர். அதன்படி, நீட் தேர்வு எழுதும் 16 மாணவர்களின் பெயரை ஆசிரியரின் வாட்ஸ் அப் எண்ணுக்கு அந்த இரண்டு பேரும் அனுப்பியுள்ளனர். மாணவர்கள் தங்களுக்கு தெரிந்த விடைகளை எழுதி தெரியாதவற்றை விட்டு விடுவார்கள். தேர்வு முடிந்ததும் மோசடி கும்பலைச் சேர்ந்தவர்களை வைத்து விடுபட்ட கேள்விகளை நிரப்பிக்கொள்ளலாம் என அவர்களுக்குள் ஒப்பந்தம் செய்துள்ளனர். இது தொடர்பாக மாவட்ட ஆட்சியருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அவர் விசாரணை நடத்தினார். ஆசிரியர் துஷார் பட்டின் காரிலிருந்து 7 லட்சம் ரூபாய், செல்போன் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டன. இந்த விவகாரம் தொடர்பாக துஷார் பட் உள்ளிட்ட 3 பேர் மீது கிரிமினல் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

‘நீட்’ தேர்வு -  தொடரும் மரணமும் மோசடிகளும் : முரசொலி தலையங்கம்!

* நீட் தேர்வுக்கு முதல் நாள் பாட்னாவில் தேர்வு எழுதும் 20 பேர் ராமகிருஷ்ணா நகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு அவர்களுக்கு கேள்வித்தாளும், அதற்கான விடைகளும் வழங்கப்பட்டுள்ளன. சிக்கந்தர் யாதவ் என்பவர் பாட்னா புறநகர் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த 20 மாணவர்களையும் மே 4 ஆம் தேதி தங்க வைத்துள்ளார். மறுநாள் அங்கிருந்து நேராக மாணவர்கள் தேர்வு மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். இந்த வீட்டில் சோதனை நடத்தியதில் சில லேப்டாப், எரிந்த நிலையில் கேள்வித்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

இந்த மோசடியில் மேலும் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கசிந்த கேள்வித்தாள் வாட்ஸ் அப் மூலம் மேலும் 100 மாணவர்களுக்கு சென்றிருக்கலாம் என்றும் போலீசார் சந்தேகிக்கின்றனர்.

* ராஜஸ்தான் மாநிலம் சவாய் மதோபூர் என்ற இடத்தில் உள்ள பெண்கள் மேல்நிலைப் பள்ளி தேர்வு மையத்தில், தேர்வு முடிவதற்கு சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு முன்னதாகவே மாணவர்கள் சிலர் வினாத்தாளுடன் வெளியேறினர். தேர்வு எழுதிக்கொண்டிருக்கும் சிலருக்கு உதவுவதற்காகவே இந்த மாணவர்கள், வினாத்தாளுடன் பாதியில் வெளியேறியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தேர்வு மையத்திலிருந்து மாணவர்கள் வெளியேறிய சில நிமிடங்களில், அதாவது சுமார் 4 மணி அளவில் சமூக ஊடகங்களில் வினாத்தாள் வெளியானது.

* தேர்வு முடியும் முன்னரே வினாத்தாளுடன் மாணவர்கள் வெளியேறியதை தேசிய தேர்வு முகமை ஒப்புக்கொண்டுள்ளது. இந்த விவகாரத்தை கவனத்தில் கொண்டுள்ளதாகவும், புகாருக்குள்ளான தேர்வு மையத்தில் 120 மாணவர்கள் முன்கூட்டியே வெளியே சென்றதாகவும் தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.

* மகாராஷ்டிராவில் நீட் தேர்வில் 2ஆம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., மாணவி ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதியது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. பிலாஸ்பூரில் உள்ள மையத்தில் தேர்வு எழுதிய மாணவியின் பயோமெட்ரிக் ஆவணங்களை சோதித்தபோது ஆள்மாறாட்டம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

* நீட் நுழைவுத் தேர்வில் வினாத்தாளை கசியவிட்ட மோசடி தொடர்பாக இந்த வாரத்தில் மட்டும் 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பாட்னா, டெல்லி, ராஜஸ்தான், ஜார்கண்ட் ஆகிய இடங்களில் 11 மாணவர்கள் உட்பட 24 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். நீட் தேர்வு மைய ஆசிரியர்கள், மாணவர்களின் பெற்றோர் என 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதை விட மோசடியான தேர்வு இருக்க முடியாது என்பதைக் காட்டு கிறது இந்த தேர்வு. இவை 24 லட்சம் மாணவர்களுக்குச் செய்யும் துரோகம் அல்லவா? மாணவர்களின் தற்கொலை மற்றும் தேர்வு மோசடிகளை தடுப்பதற்கு நீட் தேர்வை ரத்து செய்வதுதான், ஒரே தீர்வு!

banner

Related Stories

Related Stories