முரசொலி தலையங்கம்

‘டாக்டர்’ சங்கரய்யா புகழ் வாழ்க: புரட்சியாளர்கள் எப்போதும் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டே செல்கிறார்கள்!

புரட்சியாளர்கள், எப்போதும் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டே மரணம் அடைகிறார்கள்!

‘டாக்டர்’ சங்கரய்யா புகழ் வாழ்க: புரட்சியாளர்கள் எப்போதும் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டே செல்கிறார்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (17-11-2023)

‘டாக்டர்’ சங்கரய்யா புகழ் வாழ்க!

புரட்சியாளர்களின் மரணம் - புரட்சியாளர்களின் வீரத்தை மட்டும் அடையாளப்படுத்துவது இல்லை. அத்தோடு துரோகிகளின் துரோகத்தன்மையையும் அடையாளம் காட்டுவதாக அமைந்திருக்கும்.

‘சாதாரண’ சங்கரய்யாவாக இருந்தவர் – மரணிக்கும் தருவாயில் - ‘டாக்டர்’ சங்கரய்யாவாக மறைந்திருக்கிறார். ஆளுநர் ஆர்.என்.ரவி கொடுக்க மறுத்ததால் கிடைக்காமல் போய்விடவில்லை அந்தப் பட்டம். சங்கரய்யாவை நினைப்பவர்கள் அனைவருக்கும், அந்த டாக்டர் பட்டமும் நினைவில் இல்லாமல் போகாது. அப்படியானால் அவர் ‘டாக்டர்’ சங்கரய்யாதானே!

சங்கரய்யாவைப் பற்றிப் பேசும் போது, அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் கொடுக்க மறுத்தவர்களும் நினைவுக்கு வரத்தானே செய்கிறார்கள். அதனால்தான் புரட்சியாளர்கள் எப்போதும் துரோகிகளையும் அடையாளம் காட்டிவிட்டே மரணம் அடைகிறார்கள் என்கிறோம்!

அடிமை இந்தியாவில் நான்கு ஆண்டுகள் சிறையிலிருந்தவர் மட்டுமல்ல, ‘சுதந்திர’ இந்தியாவிலும் நான்கு ஆண்டுகள் சிறையில் இருந்தவர். மூன்றாண்டு காலம் தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்தவர்.

தங்கள் இயக்கத்தின் தியாக வரலாற்றை ஒருமுறை தோழர் சங்கரய்யா சுருக்கமாக இப்படி எழுதினார்.

‘டாக்டர்’ சங்கரய்யா புகழ் வாழ்க: புரட்சியாளர்கள் எப்போதும் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டே செல்கிறார்கள்!

“இந்திய விடுதலைக்காக கம்யூனிஸ்ட்கள் ஏற்றுக் கொண்ட தியாகங்கள் இணையற்றவையாகும். கப்பற் படை எழுச்சி, தெலுங்கானா போராட்டம், நாடு தழுவிய பொது வேலைநிறுத்தங்கள் என சக்திமிக்க பல போராட்டங்களில் கம்யூனிஸ்ட் இயக்கம் முன்நின்றது. தமிழ்நாட்டிலும் இப் போராட்டங்களுக்கு ஆதரவாக வலுவான இயக்கங்கள் கம்யூனிஸ்ட் கட்சி தலைமையில் நடந்தன. இந்தியாவில் கம்யூனிஸ்ட் இயக்கம் சந்தித்த சதி வழக்குகள் ஏராளம். ஆங்கிலேய ஏகாதிபத்தியம் தொடுத்த பெஷாவர், மீரட், கான்பூர் சதி வழக்குகள் மட்டுமல்ல. திண்டுக்கல் அக்னீஸ்மேரி மதுரை சிறையில் மாண்டார். 1946ஆம் ஆண்டில் கோவை மாவட்டம் சின்னியம்பாளையத்தில் வர்க்கப் போராட்டத்தில் முன்நின்ற ராமய்யன். சின்னையன். ரங்கண்ணன், வெங்கடாசலம் ஆகிய நான்கு தோழர்கள் தூக்கிலிடப் பட்டனர்.

1948 முதல் 1951 வரை கம்யூனிஸ்ட் கட்சி, ஆட்சியாளர்களால் தடை செய்யப்பட்டது. சிறைச் சாலைக்குள்ளும் அடக்குமுறை தொடர்ந்தது. இக்காலகட்டத்தில் அரசின் அடக்குமுறைகளுக்கும், ஆளும் வர்க்கத்தின் தாக்குதலுக்கும் பல கம்யூனிஸ்ட்கள் பலியாயினர். களப்பால் குப்பு. தஞ்சை சிவராமன். வாட்டாக்குடி இரணியன், மதுரை மாரி, மணவாளன், தூக்குமேடை பாலு, தில்லைவனம், பொதும்பு பொன்னையா என பலரும் தம் இன்னுயிரை ஈந்தனர். சேலம் சிறை துப்பாக்கிச் சூட்டில் 22 கம்யூனிஸ்ட்கள் படுகொலை செய்யப்பட்டதும் இக்காலத்தில்தான். சிறைச்சாலைக் கொடுமைகளை எதிர்த்து அன்னை லட்சுமி உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்ததும் இக்காலம்தான். கடலூர் சிறையில் இதே காலத்தில் ராகவய்யா, உத்திராபதி, சீதாராமய்யா ஜோகய்யா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்டனர்....” என்று எழுதினார் சங்கரய்யா. இத்தகைய தியாக வாழ்க்கையோடு தியாக வாழ்க்கையாக வாழ்ந்தவர் அவர்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் மாணவர்களை ஈடுபடுத்தியவர் என்.சங்கரய்யா. அமெரிக்கன் கல்லூரி மாணவராக அவர் அப்போது இருந்தார். அவர் அன்று உருவாக்கியதுதான் மதுரை மாணவர் சங்கம் ஆகும். தேச விடுதலைப் போராட்டத்தை ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டமாக அன்றே அடையாளப்படுத்தியவர் அவர். ‘இந்தியாவை இந்தியர்கள் ஆளவேண்டும்’ என்பதைவிட முக்கியமாக அது எத்தகைய இந்தியாவாக அமைய வேண்டும் என்பதை அடையாளப்படுத்துபவராகவும் அவர் இருந்தார். அத்தகைய மாணவர்களை உருவாக்கினார். நெல்லை ஆட்சியர் அலுவலகத்துக்கு முன்னால் நடைபெற்ற போராட்டத்தில் சங்கரய்யாவை போலீசார் தாக்கி மண்டையை உடைத்தார்கள். கைது செய்யப்பட்டார். மாணவர் இயக்கத் தலைவராக சிறைக்குள் சென்ற சங்கரய்யா, வெளியில் வந்ததும் மதுரை மாவட்டச் செயலாளராக ஆனார். 1945 முதல் 2023 வரை போராட்ட வாழ்க்கை அவருடையது. மதவாதத்துக்கு எதிராக கடுமையாக இறுதிவரை பேசி வந்தார்.

அதனால்தான் அவருக்கு ‘டாக்டர்’ பட்டம் வழங்க மறுத்தது கிண்டி. மதுரை மக்களால் மூன்று முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டு, தமிழ்நாட்டு மக்களால் வாழ்நாள் முழுக்க 'தோழர்' என்று அழைக்கப்பட்ட அவருக்கு டாக்டர் பட்டம் வழங்க மறுத்ததால் அவர்கள் தங்களைத் தாங்களே கீழ்மைப்படுத்திக் கொண்டார்கள். தங்களது தகுதியை தாங்களே அடையாளப்படுத்திக் கொண்டார்கள்.

‘டாக்டர்’ சங்கரய்யா புகழ் வாழ்க: புரட்சியாளர்கள் எப்போதும் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டே செல்கிறார்கள்!

‘தகைசால் தமிழர்’ விருதை தோழருக்கு வழங்கி பெருமைப்படுத்தினார் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள். அதற்காகத் தரப்பட்ட பத்து லட்சம் நிதியையும் முதலமைச்சரின் கோவிட் நிவாரண நிதிக்கு அளித்தார். 1972 ஆம் ஆண்டு சுதந்திரப் போராட்டத் தியாகிகளுக்கான நிதி வழங்கப்பட்டபோது அதனையும் மறுத்தார். ‘நாங்கள் சுதந்திரத்துக்காகத்தான் போராடினோம், பென்ஷனுக்காக அல்ல’ என்றார். கல்லூரிப் படிப்பை முடிக்காமலேயே தேச விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டவர் அவர். ‘நீங்கள் படித்து முடித்துவிட்டு வேலைக்கு ஏன் போகவில்லை?’ என்று கேட்கப்பட்ட போது, “நாங்கள் வேலைக்காகப் போராடுபவர்கள் அல்ல, விடுதலைக்காகப் போராடுபவர்கள்” என்று சொன்னவர் அவர்.

மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தின் மூலமாக ‘மதிப்புறு முனைவர்’ பட்டம் வழங்க ஆவன செய்யப்படும் என்பதையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். அதை வழக்கம் போல ஆளுநர் ரவி தடுத்துவிட்டார். அதனை உயர் கல்வித் துறை அமைச்சர் மாண்புமிகு பொன்முடி அவர்கள் அறிக்கையாகவும், பேட்டிகள் மூலமாகவும் கண்டித்தார். அதன்பிறகும் ஆளுநர் மனம் மாறவில்லை. பட்டமளிப்பு விழாவையே புறக்கணித்தார் அமைச்சர். பல்கலைக் கழக செனட், சிண்டிகேட் உறுப்பினர்களும் புறக்கணித்தார்கள். பட்டமளிப்பு உரையே நிகழ்த்தாமல் தப்பித்து ஓடினார் ஆளுநர்.

“அதிகாரப்பூர்வமாய் ‘இந்திய’ தேசியக் கொடி உச்சி ஏறும் நிமிடம் வரை சிறையிலிருந்த விடுதலைப் போராட்ட வீரர் தியாகச் செம்மல் சங்கரய்யா மறைந்தார். முனைவர் பட்டம் வழங்க முட்டுக்கட்டையிட்ட மூடர்களுக்கும் சேர்த்து அரைக்கம்பத்தில் பறக்கட்டும் அந்தக் கொடி” -– என்று தனது இரங்கல் செய்தியில் குறிப்பிட்டு இருந்தார் தி.மு.க. துணைப்பொதுச்செயலாளர் ஆ.இராசா.

புரட்சியாளர்கள், எப்போதும் துரோகிகளை அடையாளம் காட்டிவிட்டே மரணம் அடைகிறார்கள்!

banner

Related Stories

Related Stories