முரசொலி தலையங்கம்

பாஜக அரசின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்ட நிதி.. அம்பலப்படுத்திய CAG.. முரசொலி !

பாஜக அரசின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்ட நிதி.. அம்பலப்படுத்திய CAG.. முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Praveen
Updated on

முரசொலி தலையங்கம் (1.9.2023)

பாஜக முகத்திரையைக் கிழிக்கும் சி.ஏ.ஜி. - 2

* இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் முறைகேடு:

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் உருவாக்கிய விமான எஞ்சினில் வடிவ குளறுபடிகள் இருந்ததால் 159 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாக சி.ஏ.ஜி. அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், ஒன்றிய அரசின் பொதுத்துறை நிறுவனமாகும். இந்நிறுவனத்தின் செயல்பாடுகள் குறித்து சி.ஏ.ஜி. ஆய்வு செய்து அறிக்கை தாக்கல் செய்துள்ளது. அதில், இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம், விமான எஞ்சின்களுக்கான வடிவமைப்பு மற்றும் மேம்பாடு நடவடிக்கைகளை சரியாக திட்டமிடவில்லை, அல்லது அதனுடன் தொடர்புடைய அபாயங்கள் குறித்து அது சிந்திக்கவில்லை என்றும், இதனால், 159 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோர் என்ஜின்களின் வடிவமைப்புக்குத் தேவையான பொருட்களை கொள்முதல் செய்வதில் தாமதம் ஏற்படும் என்பதை முன்கூட்டியே உணரத் தவறிய காரணத்தால், தரம் குறைந்த பொருட்கள் கொள்முதல் செய்யப்பட்டு, எஞ்சின்கள் உற்பத்தி செய்யப்பட்டதாகவும், பின்னர் இந்தத் தவறை உணர்ந்து கொண்ட இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிர்வாகம், ஆரம்பத்தில் திட்டமிட்ட பொருட்களை கொள்முதல் செய்ய அனுமதி அளித்ததாகவும், இதுவே 159 கோடி ரூபாய் இழப்பு ஏற்படக் காரணம் என்றும் சி.ஏ.ஜி குறிப்பிட்டுள்ளது.

மேலும் இரண்டு வகையான என்ஜின்கள் உருவாக்குவதற்கு இடையில் உள்ள தொழில்நுட்ப இடைவெளி பகுப்பாய்வு செய்யப்படவில்லை என்றும் சி.ஏ.ஜி. அறிக்கை குற்றஞ் சாட்டியுள்ளது.

பாஜக அரசின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்ட நிதி.. அம்பலப்படுத்திய CAG.. முரசொலி !

* ரயில்வே துறை:

ரயில்வே துறையிலும் பல்வேறு குளறுபடிகள் நடந்திருப்பதாகக் குற்றஞ்சாட்டியுள்ளது சி.ஏ.ஜி அறிக்கை.

2021-–22 ஆம் ஆண்டில் ரயில்வே துறை, 100 ரூபாய் வருவாய் ஈட்டுவதற்காக 107 ரூபாய் செலவழித்துள்ளதாகவும், இதன் காரணமாக இந்திய ரயில்வேயின் நிதிநிலை கவலைக்குரியதாக மாறிவிட்டதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.

* ஓய்வூதியத் திட்டங்கள்:

ஒன்றிய அரசின் பல்வேறு ஓய்வூதியத் திட்டங்களில் 2017 முதல் 2021-ஆம் ஆண்டு வரை ஆய்வு செய்ததில், பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக சி.ஏ.ஜி. அறிக்கை குற்றஞ்சாட்டியுள்ளது. குறிப்பாக ஓய்வூதியத் திட்டத்திற்கு ஒதுக்கப்பட்ட நிதி, ஒன்றிய அரசின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்டு முறைகேடு நடந்திருப்பதை அம்பலப் படுத்தியுள்ளது.

ஒன்றிய ஊரக வளர்ச்சி அமைச்சகம், முதியோர் ஓய்வூதியத் திட்டங்களை உள்ளடக்கிய தேசிய சமூக உதவித் திட்ட நிதி, வேறு சில திட்டங்களை விளம்பரப்படுத்துவதற்காக பயன்படுத்தப்பட்டுள்ளதாகவும் சி.ஏ.ஜி. அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சமூக உதவித் திட்டம் என்பது வறுமைக் கோட்டிற்குக் கீழே உள்ள குடும்பங்களுக்கு முதியோர், மாற்றுத்திறனாளிகள், கைம்பெண் மற்றும் குடும்பத்தில் வருவாய் ஈட்டுவோரின் இறப்பு போன்றவற்றில் சமூக உதவிப் பலன்களை வழங்குவதாகும். ஆனால், இத்திட்டத்திற்காக ஒதுக்கப்படும் நிதி, ஒன்றிய அரசின் விளம்பரங்களுக்கு பயன்படுத்தப்படுவது முறையற்றது என்று விமர்சித்துள்ளது சி.ஏ.ஜி.

பாஜக அரசின் விளம்பரங்களுக்குப் பயன்படுத்தப்பட்ட ஓய்வூதியத் திட்ட நிதி.. அம்பலப்படுத்திய CAG.. முரசொலி !

* சுங்கச்சாவடி முறைகேடுகள்:

நாடுமுழுவதும் சுமார் 600 சுங்கச்சாவடிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மட்டும் 55 சுங்கச்சாவடிகள் உள்ளன. சுங்கச்சாவடிகளில் காலவரம்பை மீறி சுங்கக்கட்டணம் வசூலித்து, கட்டணக்கொள்ளை நடைபெறுவதாக ஏற்கனவே குற்றஞ்சாட்டு உள்ள நிலையில், இந்தக் குற்றச்சாட்டை சி.ஏ.ஜி. அறிக்கை உறுதிப்படுத்தியுள்ளது.

சுங்கக்கட்டணம், நெடுஞ்சாலைகள் பராமரிப்பு, நெடுஞ்சாலைகளில் உள்ள வசதிகள் குறித்து தமிழ்நாடு, தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய 5 தென் மாநிலங்களில் உள்ள 5 சுங்கச்சாவடிகளை மட்டும் மத்திய தணிக்கைக் குழு ஆய்வு செய்தது. 5 சுங்கச்சாவடிகளை மட்டும் தணிக்கை செய்ததில், விதிகளுக்குப் புறம்பாக வாகன ஓட்டிகளிடம் இருந்து 132 கோடியே 5 லட்சம் ரூபாயை தேசிய நெடுஞ்சாலை ஆணையம் வசூலித்திருப்பதாக குற்றஞ்சாட்டியுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை.

சி.ஏ.ஜி. தணிக்கை செய்த சுங்கச்சாவடிகளில் ஒன்று தமிழ்நாட்டில் உள்ள பரனூர் சுங்கச்சாவடி. பரனூர் சுங்கச்சாவடி அமைந்துள்ள தாம்பரம் முதல் திண்டிவனம் வரையிலான 4 வழிச்சாலையை 8 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யும் பணிகளிலும், இரும்புலியூர் -– வண்டலூர் மற்றும் வண்டலூர் –- கூடுவாஞ்சேரி ஆகிய சாலைகளின் இரண்டாம் கட்டப் பணிகளிலும் அதிகபட்ச தாமதம் ஏற்பட்டிருக்கிறது. நெடுஞ்சாலைத் திட்டங்களில், தாமதமாகும் காலங்களில் சுங்கக்கட்டணத்தில் 75சதவீதம் மட்டுமே வசூலிக்க வேண்டும் என்பது தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தின் விதிமுறை. ஆனால், இந்த விதிமுறைகளைப் புறக்கணித்து 2018 ஆகஸ்ட் முதல் 2021 மார்ச் வரை பரனூர் சுங்கச்சாவடியில் 6 கோடியே 54 லட்சம் ரூபாய், பொதுமக்களிடமிருந்து முறைகேடாக வசூலிக்கப்பட்டுள்ளது. ஒரே ஒரு சுங்கச்சாவடியில் மட்டும் ஆறரை கோடி ரூபாய் என்றால், நாடுமுழுவதும் ஆய்வு செய்தால் பல ஆயிரம் கோடி ரூபாய் முறைகேடு வெளிச்சத்திற்கு வரும்.

இதேபோல், தேசிய நெடுஞ்சாலைகளில் 1956 செப்டம்பர் மாதத்துக்கு முன்னதாகக் கட்டப்பட்ட பாலங்களுக்கு சுங்கக்கட்டணம் வசூலிக்கக்கூடாது என்பது விதி. ஆனால், திண்டிவனம் அருகே பாலாற்றின் குறுக்கே 1954–-ல் கட்டப்பட்ட பாலத்தைக் கடக்க கட்டணம் வசூலித்துள்ளனர். 2017 முதல் 2021–-ஆம் ஆண்டு வரை பாலாற்றுப் பாலத்தில் விதிமுறைகளை மீறி, வாகன ஓட்டிகளிடம் 28 கோடி ரூபாய் முறைகேடாக வசூலிக்கப் பட்டுள்ளது. மேலும், தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் இரண்டு பிரிவுகளில் சலுகை ஒப்பந்தங்களில் வருவாய்ப் பகிர்வுக்கான ஒதுக்கீடு இல்லாததால், தேசிய நெடுஞ்சாலை ஆணையம் 133 கோடியே 36 லட்சம் ரூபாய் வருவாயை இழந்துள்ளது. இந்த இழப்பானது, குறிப்பிட்ட சிலருக்கு லாபத்தைக் கொடுத்துள்ளது. இந்தத் தணிக்கையை நாடுமுழுவதும் விரிவுபடுத்தினால் தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு பல லட்சம் கோடி ரூபாய் இழப்புகள் ஏற்பட்டிருப்பதைக் கண்டறிய முடியும் என குற்றஞ்சாட்டியுள்ளது சி.ஏ.ஜி. அறிக்கை.

– தொடரும்

banner

Related Stories

Related Stories