முரசொலி தலையங்கம்

‘இந்தித் திணிப்பில் பா.ஜ.க. எல்லை மீறுகிறது': எச்சரித்த முதலமைச்சர்... பின்வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!

திருச்சி ரயில்வே நிலைய நுழைவாயிலுக்கு இந்தியில் பெயர் வைத்த ‘கர்தவ்ய த்வார்' என இந்தியில் பெயர் வைத்து இந்தித் திணிப்பு முயற்சியில் ஈடுபட்ட நிலையில் கடும் எதிர்ப்புக்கு பிறகு பின்வாங்கியது.

‘இந்தித் திணிப்பில் பா.ஜ.க. எல்லை மீறுகிறது': எச்சரித்த முதலமைச்சர்... பின்வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Manoj
Updated on

தமிழுக்கு நடிப்பும் இந்தித் திணிப்பும்!

முரசொலி தலையங்கம் (06.03.2026)

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் சூட்டி இருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ‘கர்தவ்ய த்வார்' என்பது இதன் பெயராம். கேட்டால், 'கடமையின் நுழைவாயில்' என்று பொருள் சொல்கிறார்கள். இந்தியைத் திணிப்பது ஒன்றுதான் பா.ஜ.க.வின் கடமை ஆகும். எளிதில் எந்த இடம் கிடைத்தாலும் அங்கு இந்தியைத் திணித்து விடுவதுதான் பா.ஜ.க.வின் வழக்கமான பழக்கம்.

திருச்சி ரயில்வே கோட்ட மேலாளர் அலுவலக நுழைவு வாயிலுக்கு இந்தியில் பெயர் வைத்துவிட்டார்கள் என்று தெரிய வந்ததும் திராவிட முன்னேற்றக் கழகத் தீரர்கள் திரண்டார்கள். கருப்பு மை கொண்டு இந்தி எழுத்தை அழித்துள்ளார்கள். "ரயில்வே நிர்வாகம் இதனை அகற்ற வேண்டும், இல்லாவிட்டால் போராட்டம் கடுமையாக இருக்கும்” என்று எச்சரித்தார்கள்.

‘இந்தித் திணிப்பில் பா.ஜ.க. எல்லை மீறுகிறது' என்று எச்சரித்தார் மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள். ”வருங்கால வைப்பு நிதி அலுவலகங்களின் பெயரை ‘பவிஷ்ய நிதிபவன்' ஆக்கிவிட்டார்கள். குற்றவியல் சட்டங்களுக்கு சமஸ்கிருதத்தில் பெயரை வைத்து அதனை ஆங்கிலத்தில் எழுதுகிறார்கள். ஒன்றிய நீர்வளத் துறை அமைச்சகம் ‘ஜல்சக்தி’த் துறை ஆக்கப்பட்டு விட்டது. மகாத்மா காந்தி நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை இந்தியில் ஆக்கிவிட்டார்கள்” என்று பெரிய பட்டியலே போட்டுள்ளார் முதலமைச்சர் அவர்கள்.

உள்துறை அமைச்சர் அமித்ஷா, இந்தி வளத்துறை அமைச்சராகவே எப்போதும் செயல்பட்டு வருகிறார். 2019 ஆம் ஆண்டு இந்திக்கு ஆதரவாக உள்துறை அமைச்சர் அமித்ஷா கருத்துக் கூறிய போது, "மீண்டும் 1965 கிளம்பும்” என்று தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அறிவித்தார்கள். 'அந்த அர்த்தத்தில் சொல்லவில்லை' என்று உள்துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். 2012 ஆம் ஆண்டு என்.சி.இ.ஆர்.டி. வெளியிட்ட பாடப்புத்தகத்தில் 1965 மொழிப் போராட்டத்தைக் கொச்சைப்படுத்தும் கருத்துப்படம் இடம்பெற்றிருந்தது. அதனை தி.மு.க. உள்ளிட்ட கட்சிகள் கடுமையாக எதிர்த்தன. அதன் பிறகு அந்தக் கருத்துப்படம் நீக்கப்பட்டது. 

‘இந்தித் திணிப்பில் பா.ஜ.க. எல்லை மீறுகிறது': எச்சரித்த முதலமைச்சர்... பின்வாங்கிய ஒன்றிய அரசு - முரசொலி!

இப்படித் தொடர்ந்து திணிப்பதும், எதிர்ப்பு வந்ததும் பின் வாங்குவதும் பா.ஜ.க.வின் நிலையாக உள்ளது. அவர்கள் திணித்துக் கொண்டே இருக்கிறார்கள். நாம் அழித்துக் கொண்டே இருக்கிறோம்.

1950 ஆம் ஆண்டு முதல் திராவிடர் கழகமும், திராவிட முன்னேற்றக் கழகமும் இந்தி எழுத்துகளை அழிக்கத் தொடங்கின. அதன் பிறகுதான் புகைவண்டி நிலையங்களிலும், அஞ்சல் நிலையங்களிலும் தமிழில் எழுதியது ஒன்றிய அரசு.

1950 ஆம் ஆண்டு திருச்சியில் இந்தி எழுத்து அழிப்புப் போராட்டமானது தந்தை பெரியாராலும் தலைவர் கலைஞராலும் நடத்தப்பட்டது. அது முதல் ஆண்டுதோறும் ஆகஸ்ட் 1ஆம் நாளை “இந்தி எழுத்து அழிப்பு நாளாக” இரண்டு இயக்கங்களும் பல ஆண்டுகளாக நடத்தி வந்தன. அதே திருச்சியில்தான் மீண்டும் இந்தி அழிப்பு நடந்து, அதனைப் பின்வாங்க வைத்துள்ளார்கள் திராவிட முன்னேற்றக் கழக உடன்பிறப்புகள்.

எத்தனை சாகசங்கள் செய்தாலும் இந்தி மேலாண்மையை தமிழ்நாடு ஏற்காது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை தெளிவானது.

1965 மார்ச் 4ஆம் தேதியன்று மாநிலங்களவையில் உரையாற்றிய அண்ணா தனது மொழிக்கொள்கையை முழுமையாகத் தெளிவுபடுத்தினார்.

1. இந்தியாவின் ஒருபகுதி மக்களால் பேசப்படும் இந்தி, இந்தியாவின் ஆட்சிமொழியாக ஆக முடியாது.

2. இந்தியாவில் உள்ள முக்கிய மொழிகளான 14 மொழிகளும் இந்திய அரசின் ஆட்சி மொழிகளாக ஆக வேண்டும்.

3. அந்தப் பதினான்கு மொழிகளும் ஆட்சிமொழி ஆகும் வரை ஆங்கிலம் ஆட்சிமொழியாக ஆக வேண்டும்.

4. ஆங்கிலத்தை தொடர்பு மொழியாக வைத்துக் கொள்ளலாம்.

5. எங்கள் தமிழ்மொழி மற்ற எதற்கும் தாழாத வகையில், ஆட்சிமொழி என்ற தகுதி தரப்படும் வரை, நான் அமைதி பெற மாட்டேன். மனநிறைவு கொள்ள மாட்டேன்.

இதுதான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் மொழிக் கொள்கை ஆகும். தமிழ்நாட்டின் மொழிக் கொள்கை ஆகும்.

இதே நிலையில் உறுதியாக இருக்கிறார் இன்றைய முதலமைச்சர். “இந்தியைத் திணிக்கும் புதிய தேசியக் கல்வித் திட்டத்தை நாம் ஏற்க மாட்டோம் என்று சொன்னதற்காக பள்ளிக் கல்வித் திட்டத்துக்குத் தர வேண்டிய ரூ.3 ஆயிரம் கோடி நிதியை நிறுத்தி வைத்திருக்கிறது ஒன்றிய பா.ஜ.க. அரசு. ரூ.5 ஆயிரம் கோடி என்ன, பத்தாயிரம் கோடி ரூபாய் கொடுத்தாலும் மும்மொழித் திட்டத்தை ஏற்க மாட்டோம். என்னுள் ஓடுவது தலைவர் கலைஞரின் ரத்தம். நடராசன் – தாளமுத்து - ராசேந்திரன் போன்றவர்களின் கொள்கை உணர்ச்சியால் உந்தப்பட்டவன் என்பதால் தான் நான் அப்படிச் சொன்னேன்.” என்று முழங்கி வருகிறார் முதலமைச்சர் அவர்கள்.

இந்தித் திணிப்புக்கு எதிராக 1965ஆம் ஆண்டு மாபெரும் மொழிப்போர் நடைபெற்றது. சனவரி 25ஆம் நாளை இதுவரை மொழிப்போர் தியாகிகள் நாளாக திராவிட முன்னேற்றக் கழகம் அறிவித்து நினைவு கூர்ந்தது. அதனைப் பல்வேறு அரசியல் இயக்கங்களும் பின்பற்றி வருகின்றன. அந்த சனவரி 25ஆம் நாளை தமிழ்மொழித் தியாகிகள் நாளாக கடைப்பிடிக்க அரசாணை வெளியிட்ட அரசு 'திராவிட மாடல்' அரசு ஆகும். தமிழ் மொழித் தியாகிகள் எந்த நோக்கத்துக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்தார்களோ, அந்த நோக்கத்தோடு நாம் செயல்படுவதுதான் அந்தத் தியாகிகளுக்குச் செய்யும் உண்மையான அஞ்சலி ஆகும்.

banner

Related Stories

Related Stories