தமிழ்நாடு

5 ஆண்டில் 21 லட்சம் பட்டாக்களை வழங்கிய திராவிட மாடல் அரசு : பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!

18,830 பயனாளிகளுக்கு 109.01 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.

5 ஆண்டில் 21 லட்சம் பட்டாக்களை வழங்கிய திராவிட மாடல் அரசு : பெருமையுடன் சொன்ன துணை முதலமைச்சர் உதயநிதி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று, திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி, மருத்துமனை மைதானத்தில் நடைபெற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் 3.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் முடிவுற்ற 4 திட்டப்பணிகளை திறந்து வைத்து, 57.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய 3 திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, 18,830 பயனாளிகளுக்கு 109.01 கோடி ரூபாய் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இந்த விழாவில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-

இந்த சிறப்புக்குரிய நலத்திட்ட உதவிகள் வழங்குகின்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உங்களையெல்லாம் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகின்றேன். உங்களுடைய மகிழ்ச்சி, இந்த 5 ஆண்டு கால திராவிட மாடல் ஆட்சியினுடைய சாதனைக்கு ஒரு சாட்சியாக இன்றைக்கு விளங்கி கொண்டிருக்கிறது.

திருநெல்வேலிக்கு எப்போது வந்தாலும் ஒரு தனி உணர்வு, ஒரு தனி உற்சாகம் பிறக்கும். இன்றைக்கு இந்த அரங்கத்திலும் ஆண்களைவிட மகளிர் அதிக அளவில் வந்திருக்கின்றீர்கள். தமிழ்நாடா அல்லது மகளிர் நாடா என்று கேட்கும் அளவிற்கு நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், இன்றைக்கு மகளிருக்கு என்று ஏராளமான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றார்.

அதில் குறிப்பிட்டு முக்கியமாக சொல்லவேண்டும் என்றால், 2021-இல் ஆட்சி பொறுப்பு ஏற்றவுடன் நம்முடைய முதலமைச்சர் அவர்கள், போட்ட முதல் கையெழுத்து மகளிருக்கான அந்த விடியல் பயணம் திட்டத்திற்காக கையெழுத்து தான்.

அதற்கு அடுத்து, தேர்தல் அறிக்கையில் சொல்லாத ஒரு வாக்குறுதி. மகளிர் காலையில் எழுந்து பிள்ளைகளுக்கு சமைத்து கொடுப்பதற்கு சிரமப்படக்கூடாது என்று ஒவ்வொரு நாளும், அரசுப்பள்ளியில் படிக்கக்கூடிய 32 இலட்சம் பிள்ளைகள் பயன்பெறுகின்ற வகையில் முதலமைச்சருடைய காலை உணவுத்திட்டத்தை முதலமைச்சர் அவர்கள் செயல்படுத்தினார்கள்.

அதற்கு அடுத்து அரசு பள்ளியில் படித்து உயர்கல்வி சேருகின்ற மாணவிகளுக்கு மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகையாக புதுமைப்பெண் திட்டம் மூலமாக வழங்கியுள்ளார். இப்போது கல்லூரி மாணவ – மாணவிகளுக்கு 10 லட்சம் லேப்டாப்களையும் நம்முடைய முதலமைச்சர் அவர்கள் வழங்கி இருக்கின்றார்.

இது எல்லாவற்றிற்கும் ஒரு மகுடம் வைத்தது போல ஒரு திட்டம். அது தான், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம். கடந்த 3 ஆண்டுகளாக ஒரு கோடியே 31 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் உரிமைத் தொகை திட்டத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் வழங்கி வருகின்றார்கள். வருகின்ற சட்டமன்ற தேர்தலை காரணம் காட்டி இந்த திட்டத்தை எப்படியாவது நிறுத்த வேண்டும் என்று சிலர் சூழ்ச்சி செய்தார்கள். ஆனால், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், 3 மாதத்திற்கும் சேர்த்து, கோடைகால சிறப்பு நிதியாக 1 கோடியே 31 இலட்சம் மகளிருக்கு 5,000 ரூபாயை வழங்கி இருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல, நேற்று முன்தினம் கோடை கால சிறப்பு நிதி என்று 38 லட்சம் விளிம்பு நிலை மக்களுக்கு ரூபாய் 2 ஆயிரத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கொடுத்து இருக்கின்றார்கள்.

இன்றைக்கு இந்த நெல்லை மாவட்டத்திலும் இந்த 5 வருடத்தில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு இருக்கின்றது. திருநெல்வேலியில் 85.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இருக்கிறது. 606 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இராதாபுரம், வள்ளியூர், களக்காடு, நாங்குநேரி, பாளையங்கோட்டை, சேரன்மாதேவி ஒன்றியங்களுக்கு கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. 424 கோடி ரூபாய் மதிப்பீட்டில் களக்காடு நகராட்சி மற்றும் 7 பேரூராட்சிகளில் கூட்டுக்குடிநீர் திட்டம் செயல்படுத்தப்பட்டு இருக்கிறது. 180 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கு புறவழிச்சாலை அமைக்கப்பட்டு வருகிறது.

98.00 கோடி மதிப்பீட்டில் கண்ணியமிகு காயிதே மில்லத் நூலகம் கட்டுகின்ற பணிகள் தொடங்கப்பட்டு இருக்கிறது. நெல்லை அரசு மருத்துவக் கல்லூரியில் 72.00 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்பட்டு இருக்கிறது. நெல்லையில் Para Sports Complex, ராதாபுரத்தில் Multipurpose Sports Complex, District Sports Complex-ல் Gym வசதிகள் இப்படி பல்வேறு பணிகள். இந்த மாவட்டம் முழுவதும் சுமார் 20.00 கோடி மதிப்பீட்டில் விளையாட்டுத்துறைக் கட்டமைப்புகளை நம்முடைய அரசு உருவாக்கி இருக்கிறது.

அதே போல மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், தமிழர் நாகரிகத்தை உலகிற்குச் சொல்கின்ற வகையில் 56.00 கோடி மதிப்பீட்டில் பொருநை அருங்காட்சியகத்தை அமைத்து இருக்கிறார்கள். இப்படி நெல்லைக்கு ஏராளமான திட்டங்களை நம்முடைய திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கின்றது.

இது மாதிரியான திட்டங்களால் தான் இன்றைக்கு இந்தியாவிலேயே நம்முடைய தமிழ்நாடு 11.19 சதவீத வளர்ச்சியோடு நம்பர் 1 மாநிலமாக நம்முடைய மாநிலம் முன்னேறிக் கொண்டிருக்கிறது. இந்த வளர்ச்சி தொடரவேண்டும். உங்களுடைய அன்பும், ஆதரவு முக்கியம்.

இங்கே நம்முடைய சுய உதவிக்குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள் வந்திருக்கின்றீர்கள். குழு சகோதரிகள் எந்த நேரத்தில் என்ன கோரிக்கை வைத்தாலும், என்ன கேட்டாலும் அதை உடனே நிறைவேற்றி தரவேண்டும் என்ற கட்டளையை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் எங்களுக்கு சொல்லி இருக்கின்றார்.

சென்ற வருடம் திருவாரூர் சென்றபோது, அங்கு இருக்கக்கூடிய குழுக்களைச் சேர்ந்த சகோதரிகள், அவர்களுக்கு அவர்கள் பெயர் பொறிக்கப்பட்ட, புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்கள். உடனே மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் கவனத்திற்கு எடுத்துச் சென்றோம்.

சென்ற வருடம் மகளிர் தினத்தில் குழு சகோதரிகளுக்கு அடையாள அட்டை வழங்குகின்ற திட்டத்தை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்கள். இதன் மூலமாக குழு சகோதரிகள் உங்களுக்கு பல்வேறு பயன்கள் கிடைத்துக் கொண்டிருக்கிறது. உங்களுடைய தயாரிப்புகளை, 25 கிலோ வரை 100 கிலோமீட்டர் தூரத்துக்கு கட்டணம் இல்லாமல் நீங்கள் எடுத்துச் செல்லலாம்.

ஆவின், கோ-ஆப்டெக்ஸ் மாதிரியான இடங்களில் கட்டணச் சலுகைகள் உங்களுடைய அடையாள அட்டைக்கு இருக்கின்றது. இந்த 5 வருடத்தில் சுய உதவிக்குழுக்களுக்கு மட்டும் சுமார் ஒரு லட்சத்து 20 ஆயிரம் கோடி அளவிற்கு வங்கிக்கடன் இணைப்புகளை நம்முடைய அரசு வழங்கி இருக்கின்றது.

இதை எல்லாம் நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள், உங்களுக்கு வழங்கி இருக்கக்கூடிய கடன் தொகையாக பார்க்கவில்லை, குழு சகோதரிகள் உங்களுடைய உழைப்பின் மீது வைத்திருக்கக்கூடிய நம்பிக்கையின் தொகையாக நம்முடைய அரசும், நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும் இதை பார்க்கின்றார்கள். ஆகவே, உங்களுடைய வளர்ச்சிக்கு, நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்களும், நானும், நம்முடைய அரசும் என்றைக்கும் உங்களுக்கு துணை நிற்போம்.

அதே மாதிரி இங்கு வந்திருக்கக்கூடிய ஆயிரக்கணக்கான மக்களுக்கு பட்டாக்களையும் நாம் இன்றைக்கு கொடுத்து இருக்கின்றோம். பட்டா வேண்டும் என்று அரசு அலுவலகங்களுக்கு நீங்கள் சென்ற காலம் மாறி, இன்றைக்கு, அரசே உங்களிடம் வந்து உங்களுக்கான பட்டாவை நம்முடைய அரசு கொடுத்து கொண்டிருக்கிறது.

இந்த 5 வருடங்களில் மட்டும் சுமார் 21 லட்சம் பட்டாக்களை நம்முடைய திராவிட மாடல் அரசு வழங்கி இருக்கின்றது. பட்டா என்பது ஏதோ சலுகை கிடையாது. அது உங்களுடைய சட்டப்பூர்வ உரிமை. அந்த உரிமையை நம்முடைய அரசு இன்றைக்கு நம்முடைய நிலை நாட்டி இருக்கின்றது.

இனி உங்கள் வீட்டில், நீங்கள் உரிமையோடு, மகிழ்ச்சியாக, நிம்மதியாக தூங்கலாம். ஆகவே, உங்கள் அத்தனைபேருக்கும் என்னுடைய வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கின்றேன். இப்படி நம்முடைய அரசினுடைய திட்டங்களால் சமுதாயத்தில் இருக்கக்கூடிய எல்லா தரப்பு மக்களுக்கும் பயன்கள் ஒவ்வொரு நாளும் சென்று சேர்ந்து கொண்டிருக்கிறது.

திராவிட மாடல் 2.o ல உங்களுக்கு இன்னும் நிறைய திட்டங்களை நம்முடைய மாண்புமிகு முதலமைச்சர் அவர்கள் நிச்சயம் வழங்குவார். ஆகவே இன்னும் அதிகமாக உங்களுக்காக உழைக்க, நீங்கள் நம்முடைய முதலமைச்சர் அவர்களுக்கு வாய்ப்பைத் தரவேண்டும் என்று கேட்டுக் கொண்டு, நலத்திட்டங்களை எல்லாம் பெற்ற அத்தனைப் பேருக்கும் மீண்டும் என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்து விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம் என்று தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தெரிவித்தார்.

banner

Related Stories

Related Stories