
கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், இன்று (05-03-2026) தஞ்சாவூரில் நடைபெற்ற மாண்புமிகு பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள் இல்லத் திருமண நிகழ்வில் பங்கேற்று ஆற்றிய உரையின் விவரம்:
நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்புக்குரிய அன்பில் அவர்களுடைய இல்லத்தில், அன்பில் பொய்யாமொழி - மாலதி அவர்களுடைய பேத்தியும், சுரேஷ் - எழிலரசி (எ) சுகி அவர்களுடைய மகளுமான ஓவியா அவர்களுக்கும், வரதையா - சுலோச்சனா அவர்களுடைய பேரனும், ஹேமச்சந்தர் - மோகனா அவர்களுடைய மகனுமான மனோஜ் அவர்களுக்கும் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்று, மணவிழா நிகழ்ச்சிக்குத் தலைமையேற்று, அதே நேரத்தில் மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்களுக்கு மணவிழாவை நடத்தி வைத்து வாழ்த்தும் ஒரு சிறப்பான வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கிறது.
வரவேற்புரை ஆற்றியிருக்கும் தம்பி உதயநிதி குறிப்பிட்டதைப் போன்று, இது எங்கள் குடும்பம் என்று சொல்வதா! கழகக் குடும்பம் என்று சொல்வதா! ஒட்டுமொத்தமாகச் சொன்னால், நமது குடும்பம் என்ற நிலையில்தான், இந்த மணவிழா நிகழ்ச்சி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
நம்முடைய நெஞ்சமெல்லாம் நிறைந்திருக்கும் அன்பில் அவர்களுடைய கழகப் பணியை இந்த மாவட்டத்தில் இருக்கும் உங்களுக்கு நான் அதிகம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. தலைவர் கலைஞரிடத்தில் எந்த அளவிற்கு நட்பு கொண்டிருந்தார்; தலைவர் கலைஞருக்கு எந்த அளவிற்குத் துணையாக இருந்தார்.
இந்த திருச்சி மாவட்டத்தைப் பொறுத்தவரையில், கழகத்தை உருவாக்குவதற்கு; கழகம் இன்றைக்கு கம்பீரமாக ஓங்கி நிற்பதற்கு காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்த அன்பில் அவர்கள், இறுதி வரையில், கழகத்திற்கு - தலைவர் கலைஞருக்குப் பக்கபலமாக இருந்தவர். அதைத் தொடர்ந்து, அவருடைய திருமகன் - என்னுடைய ஆருயிர் நண்பன் அன்பில் பொய்யாமொழி அவர்கள், அவர் எனக்கு எந்த அளவிற்குப் பக்கபலமாக இருந்தார் என்பதும் உங்களுக்கு தெரியும். எனவே, ஒரு உற்ற நண்பனாக மட்டுமல்ல;
என்னுடைய வாழ்வில் ஏற்பட்டிருக்கும் பல்வேறு வளர்ச்சிக்குக் காரணகர்த்தாக்களில் ஒருவராக இருந்தவர் நம்முடைய அன்பில் பொய்யாமொழி அவர்கள். அப்படி தொடர்ந்தது அந்த உறவு.
அதற்குப் பின்னால், இங்கே வரவேற்புரை ஆற்றிய தம்பி உதயநிதி குறிப்பிட்டதைப் போன்று, இன்றைக்கு அமைச்சராகப் பொறுப்பேற்று இருக்கும் மகேஸ் பொய்யாமொழி அவர்கள், இன்றைக்கு எங்களுடைய குடும்பத்தில் – குறிப்பாக, உதயநிதியிடத்தில் எவ்வளவு நட்பாகப் பழகி, அவர் இன்றைக்கு வளர்ந்து, சட்டமன்ற உறுப்பினராகப் பொறுப்பேற்று, பள்ளிக் கல்வித்துறை அமைச்சராகவும் பொறுப்பேற்று, ஒரு பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் எவ்வாறு பணியாற்ற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருப்பவர்தான், நம்முடைய அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள்.

சட்டமன்றத்தில் உரையாற்றினாலும் சரி; பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றினாலும் சரி, எந்தப் புள்ளி விவரமும் கையில் வைத்துக் கொள்ளாமல், எதையும் படபடவென்று கம்ப்யூட்டரைப் போன்று பேசும் ஆற்றலைப் பெற்றவர், நம்முடைய அன்பில் மகேஸ் பொய்யாமொழி அவர்கள். அவரைப் பார்த்து அனைவரும் பாராட்டுகிறபோது, அவருடைய தந்தை – என்னுடைய அருமை நண்பர் பொய்யாமொழி எந்த அளவிற்கு சந்தோஷப்படுவாரோ, அதைவிட அதிகமாக நான் சந்தோஷப்பட்டிருக்கிறேன். இப்போதும் சந்தோஷப்பட்டு கொண்டிருக்கிறேன்.
இந்த மணவிழா நிகழ்ச்சி எந்தச் சூழ்நிலையில் நடந்திருக்கிறது என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். நேற்று இரவு வரை, கூட்டணிக் கட்சியோடு பேசி, ஒரு ஒப்பந்தத்தை முடித்து விட்டுத்தான், அதுவும் வெற்றிகரமாக முடித்து விட்டுத்தான், அனைவரும் பாராட்டும் வகையில் முடித்து விட்டுத்தான், இன்றைக்கு நீங்கள் எல்லாம் வாட்ஸ்-அப்பில், சோசியல் மீடியாவில் பார்த்திருக்கலாம்.
அந்த ஒப்பந்தத்தை முடித்துவிட்டு, காரில் ஏறுகிறபோது, கையை எடுத்து, “ஓவர்” என்ற அந்த ஆக்சனோடு காரில் ஏறிய காட்சியைப் பார்த்திருப்பீர்கள். அது நான் திட்டமிட்டு செய்ததல்ல. காரில் ஏற வருகிறபோது, அங்கே எதிரில் நின்று கொண்டிருந்த பத்திரிகை நண்பர்கள் எல்லாம் என்னைப் பார்த்து, “முடிந்துவிட்டதா? முடிந்துவிட்டதா?” என்று கேட்டார்கள். “முடிந்துவிட்டது” என்று சொன்னேன், அவ்வளவுதான்.
அது இன்றைக்கு பெரிய வைரலாகி, ‘அனைத்தும் முடிந்துவிட்டது - ஆல் ஃபினிஷ்’ என்று போட்ட மாதிரி, இன்றைக்கு அந்தக் காட்சிகள் எல்லாம் வெளியாகிக் கொண்டிருக்கிறது. அதையெல்லாம் நீங்கள் பார்த்திருப்பீர்கள். எனவே அந்த மகிழ்ச்சியோடுதான் வந்திருக்கிறேன். அதுமட்டுமல்ல, இந்தத் திருமணத்தை முடித்துவிட்டு, மாநிலங்களவை வேட்பாளராக நாம் இருவரை நாம் அறிவித்திருக்கிறோம்.
கூட்டணிக் கட்சிகளுக்கு இரண்டு இடங்களைக் கொடுத்திருக்கிறோம். அந்த நான்கு பேரும் சரியாக 12 மணியளவில் சென்னையில் வேட்பு மனுத் தாக்கல் செய்ய இருக்கிறார்கள். இன்றுதான் கடைசி நாள். நான் வந்தே தீர வேண்டும் என்று கட்டளையிட்டிருக்கிறார்கள். நான் வழக்கமாகச் செல்வதுண்டு.
எனவே, இதை முடித்துவிட்டு உடனடியாக செல்ல வேண்டிய சூழல் இருக்கிற காரணத்தினால்தான், வேகவேகமாக வந்து, வேகவேகமாகத் திருமணத்தை முடித்து வைத்துவிட்டு, நான் செல்ல இருக்கிறேன். இன்றைக்கு அந்த இல்லத்தில் நடைபெறும் இந்த மணவிழா நிகழ்ச்சியில் பங்கேற்ற நேரத்தில், உள்ளபடியே நான் பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன்.
பொய்யாமொழி இருந்து இந்த விழாவை நடத்துகிறபோது, எந்த அளவிற்கு மகிழ்ச்சி அடைவாரோ, அதைவிடப் பன்மடங்கு மகிழ்ச்சியை நான் அடைந்து கொண்டிருக்கிறேன் என்பதை மாத்திரம் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்லி, மணக்கோலம் பூண்டிருக்கும் மணமக்கள் பல்லாண்டு காலம் எல்லா நன்மையும் பெற்று சிறப்போடு வாழ வேண்டும். புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் எடுத்துச் சொல்லி இருக்கும், “வீட்டிற்கு விளக்காய்... நாட்டிற்குத் தொண்டர்களாய்…” இருந்து வாழுங்கள்... வாழுங்கள்... வாழுங்கள் என்று வாழ்த்தி விடைபெறுகிறேன்.






