முரசொலி தலையங்கம்

”போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க அரசுதான்” : அமித்ஷாவுக்கு நினைவூட்டிய முரசொலி!

அதானி குழுமத்துக்கு இலங்கை அரசாங்கம் வர்த்தகச் சலுகைகளைத் தருவதால் அந்த அரசாங்கத்தை பா.ஜ.க. அரசாங்கம் ஆதரிக்கும் என்று இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்கள் அப்போது எழுதினார்கள்.

”போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க அரசுதான்” : அமித்ஷாவுக்கு நினைவூட்டிய முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (03-08-2023)

ராஜபக்சேவும் பா.ஜ.க.வும் - 2

இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் - போர்க்குற்றங்கள் தொடர்பாக ஐ.நா.மனித உரிமைகள் ஆணையத்தில் பா.ஜ.க. அரசு எடுத்த நிலைப்பாடு என்ன? 2021 ஆம் ஆண்டு நடந்ததை மக்கள் மறந்திருப்பார்கள் என்று அமித்ஷா நினைக்கலாம்.

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் 46 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நடந்தது. இலங்கை அரசு குறித்தான தீர்மானம் 2021 மார்ச் 23 அன்று வாக்கெடுப்பிற்கு வைக்கப்பட்டது. இந்திய பா.ஜ.க. அரசு தீர்மானத்தினை ஆதரிக்காமல் வாக்கெடுப்பில் பங்கேற்காமல் தவிர்த்தது. போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க. அரசு. இங்கிலாந்து, கனடா, ஜெர்மனி, வடக்கு மாசிடோனியா, மலாவி மற்றும் மாண்டிநீக்ரோ ஆகிய நாடுகள் இணைந்து இலங்கை அரசு குறித்தான தீர்மானத்தினை முன்வைத்தன.

இந்தியா தீர்மானத்தை ஆதரிக்காமல் வாக்கெடுப்பிலிருந்து வெளியேறியதற்கு இலங்கையின் வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்தனே நன்றி தெரிவித்தார். இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஜெனீவாவில் காட்டிய ஆதரவை இலங்கை பாராட்டுகிறது என்று தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டார். இந்தியாவின் நிலைப்பாடு இப்படித்தான் இருக்கும் என்று இலங்கையின் வெளியுறவுத் துறை செயலர் ஜெயநாத் கொலம்பாகே முன்கூட்டியே சொன்னார். 'ஜெனீவாவில் இலங்கைக்கு ஆதரவாக இந்தியா நிற்கும்' என்று உறுதியளித்திருப்பதாக தெரிவித்திருந்தார். இந்நிலையில் தீர்மானத்தினை ஆதரிக்காமல் இந்தியா புறக்கணித்தது, இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாடாகவே அமைந்திருந்தது.

”போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க அரசுதான்” : அமித்ஷாவுக்கு நினைவூட்டிய முரசொலி!

இலங்கையில் தமிழர்களுக்கு நடைபெற்று வருவது இனப்படுகொலை என்று அங்கீகரிக்கப்பட வேண்டும் என்பதும், இனப்படுகொலைக்கான சர்வதேச விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்பதுமே தமிழர்களின் கோரிக்கையாக இருந்தது. இதனை ஒன்றிய பா.ஜ.க. அரசு ஆதரிக்கவில்லை. தீர்மானத்தை ஆதரித்து 22 நாடுகள் வாக்களித்தன. பா.ஜ.க. அரசு, இலங்கைத் தமிழர்க்கு ஆதரவான நிலைப்பாட்டை அப்போது எடுக்கவில்லை.

அப்போதே தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இதனைக் கண்டித்தார்கள். ''இலங்கைக்கு ஆதரவாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தில் இந்தியா வெளிநடப்பு செய்தது உலகத் தமிழர்களுக்கு செய்த பச்சைத் துரோகம் . தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நடப்பதால்தான் வெளிநடப்பு செய்திருக்கிறார்கள். இல்லையென்றால் இலங்கைக்கு ஆதரவாகவே வாக்களித்திருப்பார்கள். இதனை தமிழர்கள் மறக்கவோ, மன்னிக்கவோ மாட்டார்கள்" என்றும் அறிக்கை வெளியிட்டார் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள். தமிழ்நாட்டின் அனைத்து அரசியல் கட்சிகளும் பா.ஜ.க. அரசின் நிலைப்பாட்டை கடுமையாக எதிர்த்து அறிக்கை வெளியிட்டார்கள். இவை எல்லாம் மறந்து போயிருக்கும் என்று நினைக்கிறார் அமைச்சர் அமித்ஷா.

அதானி குழுமத்துக்கு இலங்கை அரசாங்கம் வர்த்தகச் சலுகைகளைத் தருவதால் அந்த அரசாங்கத்தை பா.ஜ.க. அரசாங்கம் ஆதரிக்கும் என்று இலங்கைத் தமிழ் பத்திரிகையாளர்கள் அப்போது எழுதினார்கள். அதுதான் இறுதியாக நடந்தது. ''தற்போது வேகமெடுக்கும் இலங்கை மீதான ஐ.நா. மனித உரிமை ஆணைய விசாரணையைப் பயன்படுத்தி இலங்கை மீதான தங்களது அரசியல் நலனை அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிறைவேற்றிக் கொள்கின்றன. அதனது சிறு வெளிப்பாடே அதானி குழுமத்திற்கு கொழும்பு மேற்கு கடற்கரை முனையத் திட்டம் கையளிக்கப்பட்டிருப்பதாகும்" என்று இலங்கை பத்திரிகைகள் (தினக்குரல்) எழுதின. இந்தியாவிலும் எக்கனாமிக் டைம்ஸ், இந்துஸ்தான் டைம்ஸ் இதழ்கள் எழுதின. ( 24.2.2023)

அதானி குழுமத்தின் எரிசக்தி திட்டங்கள் அடுத்த ஆண்டு டிசம்பருக்குள் முடியும் என்று இலங்கை அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார். வீழ்ச்சியடைந்து வரும் இலங்கைப் பொருளாதாரத்தை மீட்க இப்போது கொழும்பு கவனம் செலுத்தி வருவதாகவும், அதற்கு இந்தியாவின் ஆதரவு முக்கியமானது என்றும், அதானி முதலீடுகள் முக்கியமானது என்றும் இலங்கை உயர்ஸ்தானிகர் மிலிந்த மொரகொட கூறினார். ( ஏ.பி.பி. - 16.5.2023)

”போர்க்குற்றம் செய்த இலங்கை அரசைக் காப்பாற்றியது பா.ஜ.க அரசுதான்” : அமித்ஷாவுக்கு நினைவூட்டிய முரசொலி!

– இவை அனைத்தும் இலங்கைக்கு சார்பாக பா.ஜ.க. அரசு ஏன் நடந்து கொள்கிறது என்பதைக் காட்டும் செய்திகள். இதற்கு விளக்கம் தேவையில்லை. இது தொடர்பாக பேசிய இலங்கை மின் வாரிய தலைவர் ஃபெர்டினாண்டோ, "என்னை அழைத்த இலங்கை அதிபர், மின் திட்டங்களை அதானிக்கு ஒதுக்குங்கள் என இந்திய பிரதமர் மோடி அழுத்தம் கொடுப்பதால் திட்டத்தை அதானி குழுமத்துக்கு ஒதுக்குங்கள் எனக் கூறினார். இதனால் நான் இது தொடர்பாக நிதி அமைச்சகத்துக்கு கடிதம் எழுதினேன்" எனக் கூறினார். இதனால் அதானிக்கு எதிராகவே இலங்கைத் தமிழர்கள் போராட்டம் நடத்தினார்கள். உடனே, 'நான் அப்படிச் சொல்லவில்லை' என்று இலங்கை மின் வாரியத் தலைவர் மறுத்தார். ஆனாலும் கடந்த வாரம் - – அதாவது சூலை 21 ஆம் தேதி அன்று டெல்லி வந்த இலங்கை அதிபர் ரணிலை, அதானி சந்தித்துப் பேசினார்.

''ஜூன் 2022ல் இலங்கை காற்றாலை மின்உற்பத்தி உரிமத்தை அதானிக்கு வழங்க வேண்டும் என மோடி அழுத்தம் கொடுப்பதாக ராஜபக்சே சொன்னார். இதுதான் உங்கள் வெளியுறவுக் கொள்கை. இது இந்திய வெளியுறவுக் கொள்கை அல்ல. அதானியின் வெளியுறவுக்கொள்கை" - – என்று பகிரங்கமாக குற்றச்சாட்டு வைத்தார் ராகுல் காந்தி. இத்தகைய மர்மமான வெளியுறவுக் கொள்கையை வைத்திருக்கும் பா.ஜ.க.வுக்கு இலங்கைப் பிரச்சினையைப் பற்றிப் பேச உரிமை உண்டா?

2014 மே 19 ஆம் தேதி பசில் ராஜபக்சே ஒரு பேட்டி அளித்திருந்தார். அது 'தினமணி' இணைய தளத்தில் இன்றும் இருக்கிறது. "குஜராத்தில் மோடி நிறைவேற்றிய வாக்குறுதிகளைத் தான் ராஜபக்சே தம் நாட்டு மக்களுக்கு நிறைவேற்றினார். நரேந்திரமோடி தான் வெற்றி பெறுவார் என்று இலங்கை அதிபர் மகிந்த ராஜபக்சே ஏற்கனவே நம்பிக்கையுடன் எதிர்பார்த்திருந்தார். அதுவும் தமிழ்நாட்டுக் கட்சிகளை நம்பாமல் நிச்சயம் மோடி தனிப்பெரும் பான்மையுடன் வெற்றி பெற வேண்டும் என்று விரும்பினார். இலங்கையை ஆளும் ராஜபக்சேவின் கட்சிக்கும் நரேந்திரமோடியின் கட்சிக்கும் இடையே பெரிய அளவில் நடைமுறை சித்தாந்தங்களில் வேறுபாடுகள் இருக்காது. காங்கிரஸ் ஆட்சியின் போது உள்நாட்டு அரசியல் தடைகளின் காரணமாக மன்மோகன்சிங் செய்ய முடியாமல் போனவற்றை கூட மோடி செய்து முடிப்பார்" என்று கூறினார். இதுதான் பசில் ராஜபக்சே சொன்னது ஆகும்.

இதற்கு மேல் எதுவும் சொல்வதற்கு இல்லை!

banner

Related Stories

Related Stories