முரசொலி தலையங்கம்

“குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால் இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்க அமித்ஷா முயற்சித்தார்..” - முரசொலி !

குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால் இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்க முயற்சித்தவர் இதே அமித்ஷா அவர்கள்தான். அதனை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

“குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால் இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்க அமித்ஷா முயற்சித்தார்..” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ராஜபக்சேவும் பா.ஜ.க.வும் - 1

இலங்கைப் பிரச்சினையைப் பற்றி பேசி இருக்கிறார் உள்துறை அமைச்சர் அமித்ஷா.

“இரத்தக்கறை படிந்த ராஜபக்சேவை தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள் அனைவரது எதிர்ப்பையும் மீறி 2014 ஆம் ஆண்டு நரேந்திரமோடியின் பதவி ஏற்பு விழாவுக்கு அழைத்தவர்களுக்கு இலங்கைப் பிரச்சினையைப் பற்றி பேச உரிமை உண்டா?” என்று பதில் கேள்வியை எழுப்பி இருக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

அமித்ஷாவிடம் இருந்து இதற்கான பதில் வராது. ஏனென்றால் குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால் இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்க முயற்சித்தவர் இதே அமித்ஷா அவர்கள்தான். அதனை தமிழ்நாட்டு மக்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

* பா.ஜ.க. அரசால் கொண்டு வரப்படும் குடியுரிமைச் சட்டம் இலங்கைத் தமிழர்களைப் பாதிக்கும் என்று தி.மு.க. வாதிட்டது. ஒரு கோடி மக்களிடம் கையெழுத்து வாங்கி ஒன்றிய அரசுக்கு அனுப்பி வைத்தோம். அதனை பா.ஜ.க. கண்டுகொள்ளவே இல்லை. இந்த சட்டத்துக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் தி.மு.க. சார்பில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அதற்கு பதில் மனு தாக்கல் செய்த பா.ஜ.க.. இலங்கைத் தமிழர் பற்றி அதில் எதுவுமே சொல்லவில்லை.

இந்தியாவுக்குள் யார் எல்லாம் வரலாம். வந்தால் யாருக்கெல்லாம் குடியுரிமை வழங்கப்படும் என்று இந்த சட்டம் வரையறுக்கிறது. பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்க தேசத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். அந்த நாட்டைச் சேர்ந்த இசுலாமியர்கள் நீங்கலாக மற்ற மதத்தைச் சேர்ந்தவர்கள் வரலாம் என்கிறார்கள். இசுலாமிய சிறுபான்மையினரை எதற்காக புறக்கணிக்க வேண்டும்?

“குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால் இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்க அமித்ஷா முயற்சித்தார்..” - முரசொலி !

பாகிஸ்தானில் இருந்து, வங்க தேசத்தில் இருந்து, ஆப்கானிஸ்தானத்தில் இருந்து இசுலாமியர் நீங்கலான மற்ற மதத்தவர்கள் வரலாம் என்றால் அண்டை நாடான இலங்கையைச் சேர்ந்தவர்கள் வருவதற்கு தடை விதித்தது ஏன்? இதுதான் ஈழத்தமிழர்க்கு இழைக்கப்பட்ட மாபெரும் துரோகம். இதனால்தான் இந்த குடியுரிமைச் சட்டத்தை தமிழர்கள் அனைவரும் எதிர்த்தோம்.

அண்டை நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு குடியுரிமை வழங்குகிறோம் என்றால் இலங்கை அண்டை நாடு அல்லவா? இலங்கையைப் புறக்கணித்தது ஏன்? மற்ற அண்டை நாட்டைச் சேர்ந்த இந்துக்கள் வரலாம் என்றால் ஈழத்தில் இருக்கும் தமிழர்களை இந்துக்களாக இந்த பா.ஜ.க. அரசு நினைக்கவில்லையா?

தமிழ்நாட்டில் சுமார் 70 ஆயிரம் ஈழத்தமிழர்கள் அவர்களுக்கான வாழ்விடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதில் 1983ஆம் ஆண்டு வந்தவர்கள் முதல் 2002 ஆம் ஆண்டு வந்தவர்கள் வரை இதில் இருக்கிறார்கள். இவர்களால் மீண்டும் இலங்கைக்குச் செல்ல முடியாது. அவர்களுக்கு தாய்த்தமிழ்நாடு தானே அடைக்கலம் தர முடியும்? அவர்களுக்கு குடியுரிமை தர முடியாது என்று மறுத்தவர்தான் அமித்ஷா. இப்படி இலங்கைத் தமிழர்களுக்கு மட்டும் உரிமையைப் பறித்த அமித்ஷாதான், இலங்கைத் தமிழர்கள் பற்றி இப்போது பேசுகிறார்.

என்ன கொடுமை இது?!

* 2014 ஆம் ஆண்டு இந்தியாவின் பிரதமர் ஆனார் நரேந்திரமோடி. அப்போது அவரை அதிகமாகப் பாராட்டியது ராஜபக்சே சகோதரர்கள் தான்.

* இலங்கை ராஜபக்சே அரசாங்கமானது போர்க்குற்ற அரசாகவும், மனித உரிமை மீறல் அரசாகவும் ஐ.நா.மனித உரிமை ஆணையத்தின் முன்னால் நிறுத்தப்பட்டுள்ளது. இலங்கை அரசுக்கு எதிராக 2014 ஆம் ஆண்டு முதல் ஏதாவது நடவடிக்கை எடுத்திருக்கிறதா பா.ஜ.க. அரசு?

“குடியுரிமைச் சட்டம் என்ற பெயரால் இலங்கைத் தமிழர்களை வஞ்சிக்க அமித்ஷா முயற்சித்தார்..” - முரசொலி !

ஐ.நா. மனித உரிமைகள் ஆணையக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் அடிப்படையில், ஐ.நா. மனித உரிமை ஆணையர் நவி பிள்ளை, இலங்கையில் நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து விசாரணை நடத்துவதற்காக, ஐ.நா. விசாரணைக் குழுவை நியமித்தார்.

இலங்கையின் போர்க் குற்றம் மற்றும் மனித உரிமை மீறல்கள் பற்றி விசாரணை நடத்த உள்ள இந்த ஐ.நா. குழுவிலே 3 நிபுணர்களும், 13 உறுப்பினர்களும் இடம் பெற்று இருந்தனர். இந்த ஐ.நா. விசாரணைக் குழு இந்தியாவுக்குள் வந்து விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து இந்தியா அவர்களுக்கு விசா வழங்க மறுத்து விட்ட சம்பவம் 2014 ஆம் ஆண்டு சூலை மாதம் நடந்தது.

"ஐ.நா. விசாரணைக் குழுவுக்கு இந்தியா விசா வழங்க மறுத்திருப்பது சிங்களப் பேரினவாத ராஜபக்சேவின் போர்க்குற்றங்களுக்கும், அப்பட்டமான மனித உரிமை மீறல்களுக்கும் ஆதரவாக இந்திய அரசு நடந்து கொள்கிறதோ என்ற வேதனையைத் தருகிறது” என்று அறிக்கை வெளியிட்டார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவும், பா.ஜ.க. அரசின் முடிவு தமிழ்நாடு மக்களுக்கு ஏமாற்றத்தை அளிப்பதாக குறிப்பிட்டார்.

* பிரதமர் நரேந்திரமோடியை அதிகமாகப் புகழ்ந்தவர் இலங்கைப் பிரதமர் ராஜபக்சேதான் என்பதை மறுக்க முடியுமா? “என்னுடைய டெல்லி பயணம் சிறப்பு வாய்ந்ததாகும். என்னுடைய சகோதரரும், இலங்கை அதிபருமான கோத்தபய ராஜபக்சே சந்திப்பின்போது 2 நாடுகளுக்கும் இடையே உள்ள நல்லுறவுக்காக போடப்பட்ட அஸ்திவாரம் இப்போது மேலும் வலுவடைந்துள்ளது. பிரதமர் மோடி உடனான சந்திப்பு மிகவும் பயன் உள்ள சந்திப்பாக அமைந்தது. அவர் என்னிடம் மிகவும் நெருக்கமான நட்பை காட்டினார். நான் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டபோது கார் வரை வந்து வழியனுப்பி வைத்தார். இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையேயான உறவு மேலும் வலுவடைந்துள்ளது. இரு நாடுகளுக்கு இடையே இருந்த வேற்றுமைகள் களையப்பட்டுவிட்டன. நல்ல புரிந்துணர்வு மற்றும் பல்வேறு துறைகளில் இரு நாடுகளுக்கு இடையேயுள்ள கூட்டுறவு, பிராந்திய பொருளாதார வளர்ச்சி மற்றும் பயங்கரவாதத்தை ஒடுக்குவதிலும் இரு நாடு களும் நல்ல பாதையை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன” என்று சொன்னவர் ராஜபக்சே!

தொடரும்..

banner

Related Stories

Related Stories