முரசொலி தலையங்கம்

மீனவர்கள் தாக்குதல் : “மோடி அரசை பார்த்து இலங்கை அரசு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது” - முரசொலி !

“இந்தியாவில் ஆண்மையுள்ள பிரதமர் இல்லை, அதனால் தான் அண்டை நாடுகள் நம்மை சீண்டிப் பார்க்கின்றன” என்று அன்று மன்மோகன்சிங்கை குறை சொன்னவர்தான் மோடி. இன்று அவரை என்னவென்று சொல்வது?

மீனவர்கள் தாக்குதல் : “மோடி அரசை பார்த்து இலங்கை அரசு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது” - முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

மீனவர்களை கண்ணீரில் மிதக்கவிடும் பா.ஜ.க.!

திடீரென தமிழ்நாட்டு மீனவர்கள் மீது பாசம் பொங்கி இருக்கிறது உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு. 'பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தபிறகு தமிழ்நாடு மீனவர்கள் மீது தாக்குதல் நடத்தப்படவில்லையா?' என்ற கிடுக்குப் பிடி கேள்வியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் எழுப்பி இருக்கிறார்கள். எதிர்க்கட்சியாக இருந்த காலத்தில் - அதாவது காங்கிரஸ் ஆட்சி காலத்தில் 2014 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னதாக நரேந்திரமோடி அவர்கள் ராமநாதபுரம் பொதுக்கூட்டத்தில் பேசியதை எடுத்துக் காட்டி இருக்கிறார் முதலமைச்சர்.

"நாங்கள் ஆட்சிக்கு வந்தால் ஒரு மீனவர் கூட உயிரிழக்க மாட்டார். தமிழ்நாட்டு மீனவர்க்கு இலங்கையால் பிரச்சினை. குஜராத் மீனவர்க்கு பாகிஸ்தானால் பிரச்சினை. இரண்டு மாநில மீனவர்களையும் இணைத்து பேசி கூட்டு நடவடிக்கை எடுப்போம்" என்று சொன்னார் நரேந்திர மோடி அவர்கள். 2014 முதல் தமிழ்நாட்டு மீனவர்கள் மீது சிங்களக் கடற்படை தாக்குதல் நடத்தவில்லையா? இதுதான் உள்துறை அமைச்சர் பதில் சொல்ல வேண்டிய கேள்வி ஆகும்.

* 2015 - தாக்குதல்

* 2016 - தாக்குதல்

* 2017- தங்கச்சிமடம் மீனவர் பிரிட்டோ கொலை செய்யப்பட்டார்.

* 2018 டிசம்பர் - மீனவர்கள் மீது பெட்ரோல் குண்டு வீசித் தாக்குதல் படகுகள் சேதம்

* 2020 அக்டோபர் - இலங்கைக் கடற்படை, மீனவர்களை தாக்கியது. 28 மீனவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மீனவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் குறித்த வீடியோ வெளியானது.

* 2021 ஜனவரி - மேசியா நாகராஜன், செந்தில்குமார், சாம்சன், டார்வின் ஆகிய நான்கு மீனவர்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

* மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடியைச் சேர்ந்த 6 மீனவர்கள் கடந்த 21.02.2023 அன்று தரங்கம்பாடி மீனவ கிராமத்தில் இருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றார்கள். அவர்கள் தாக்கப்பட்டார்கள்.

* கடந்த 25 ஆம் தேதி இராமநாதபுரம் மீனவர்கள் 9 பேர் நெடுந்தீவு பகுதி யில் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இதெல்லாம் உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா தெரியாதா?

மீனவர்கள் தாக்குதல் : “மோடி அரசை பார்த்து இலங்கை அரசு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது” - முரசொலி !

கடந்த மார்ச் மாதம் மூன்று நாள் பயணமாக இலங்கைக்குச் சென்றார் பா.ஜ.க.வின் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன். இலங்கைத் தமிழர் பிரச்சினையையே தீர்த்து விட்டதைப் போலவும் - இனி தமிழ்நாட்டு மீனவர் ஒருவரைக் கூட இலங்கைக் கடற்படை எதுவும் செய்யாது என்றும் ஏதோ இலங்கை அதிபரைப் போல முருகன் பேட்டி கொடுத்தார். அவர் பேட்டி கொடுத்த இரண்டு வாரத்துக்குள் தமிழ்நாட்டு மீனவர்களைக் கைது செய்துவிட்டது இலங்கை.

கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி இலங்கை செல்வதற்கு முன்னால் ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், “இலங்கை பயணத்தின் போது தமிழ்நாடு மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் சிறைபிடிக்கப்படுவது உள்ளிட்ட பிரச்சினை குறித்து இலங்கை அரசு அதிகாரிகளிடம் பேச உள்ளோம்" என்று சொன்னார். இலங்கைப் பயணம் சென்று விட்டு கடந்த பிப்ரவரி 13 ஆம் தேதி சென்னை விமான நிலையம் வந்து இறங்கிய ஒன்றிய அமைச்சர் எல்.முருகன், “சர்வதேச கடல் எல்லையில் தமிழ்நாடு மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசப்பட்டது. இலங்கை சிறைகளில் நேற்று வரை, ஒரு இந்திய மீனவர்கூட இல்லை" என்று சொன்னார். பிப்ரவரி 23 ஆம் தேதி தமிழ்நாட்டைச் சேர்ந்த 6 மீனவர்கள் தாக்கப் பட்டார்கள்.

இது தொடர்பாக ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் ஜெய் சங்கருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அவசர கடிதம் ஒன்றை அனுப்பினார். “இந்தத் தாக்குதல். அனைத்து சர்வதேச விதிமுறைகள் மற்றும் மரபுகளை அப்பட்டமாக மீறுவதாகவும், பாக். வளைகுடா பகுதியில் நமது மீனவர்களின் பாரம்பரிய மீன்பிடி உரிமைகளை இலங்கைக் கடற்படை தொடர்ந்து மீறி வருவதுடன், நமது மீனவர்களுக்கு கடுமையான காயங்களையும், பொருளாதார இழப்புகளையும் அடிக்கடி ஏற்படுத்துவதையும்” சுட்டிக்காட்டியுள்ள முதலமைச்சர் அவர்கள், “இலங்கை கடற்படையினரின் இத்தகைய வன்முறைச் செயல்கள் அதிர்ச்சியளிப்பதுடன், கண்டனத்திற்குரியது” என்றும் தெரிவித்தார்.

மீனவர்கள் தாக்குதல் : “மோடி அரசை பார்த்து இலங்கை அரசு பயப்படவில்லை என்று தெளிவாக தெரிகிறது” - முரசொலி !

பா.ஜ.க.வின் நாடகம் அம்பலம் ஆனதும், “தமிழ்நாடு மீனவர்களை மீட்க விரைவில் இந்திய இலங்கைத் துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடக்கும்" என்று சொன்னார் முருகன். இவர்கள் இலங்கை சென்று விட்டு வந்த ஒரே வாரத்தில் தாக்கி கைது செய்கிறார்கள் என்றால் மோடி அரசைப் பார்த்து இலங்கை அரசுக்கு எந்த பயமும் இல்லை என்றுதானே அர்த்தம். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 17 ஆம் நாள் இந்திய இலங்கை அமைச்சர்களுக்கு இடையே மீனவர்கள் தொடர்பாக பேச்சுவார்த்தை நடந்ததே! அதில் என்ன முடிவு எடுக்கப்பட்டது? முறையான, அக்கறையான முடிவை எடுத்திருந்தால் தொடர்ச்சியாக இத்தனை தாக்குதலை எதிர் கொண்டிருக்க மாட்டார்களே மீனவர்கள்?

2021ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் நரேந்திரமோடி அவர்கள், “நமது மீனவர்கள் நீண்ட காலப் பிரச்சினை களைச் சந்தித்து வருகிறார்கள். அவர்களது உரிமைகளை எனது அரசு எப்போதும் பாதுகாக்கும் என்று உறுதி அளிக்கிறேன். இலங்கையில் மீனவர்கள் சிறைப்பிடிக்கப்படும் போது எல்லாம் அவர்களை விரைவாக விடுதலை செய்வதை நாங்கள் உறுதிப்படுத்தி உள்ளோம்" என்றார். 'எனது ஆட்சியில் கைது நடக்காது என்று சொல்லவில்லை. கைது செய்தால் விரைவில் விடுவித்து விடுவாராம்” இதுதான் பா.ஜ.க.வின் சாதனையா?

மீனவர்களை விரட்டுதல், வலைகளை அறுத்தல், படகுகளை தாக்குவது. துப்பாக்கியால் சுடுவது. கைது செய்வது. சிறையில் அடைப்பது. படகுகளை பறிப்பது என்று இலங்கைக் கடற்படையின் அராஜகங்களுக்கு அளவில்லாமல் போய்விட்டது. அதை தட்டிக் கேட்கும் அரசாக பா.ஜ.க. அரசு இல்லை என்பது தான் உண்மை.

“இந்தியாவில் ஆண்மையுள்ள பிரதமர் இல்லை, அதனால் தான் அண்டை நாடுகள் நம்மை சீண்டிப் பார்க்கின்றன" என்று அன்று மன்மோகன்சிங்கை குறை சொன்னவர்தான் மோடி.

இன்று அவரை என்னவென்று சொல்வது?

banner

Related Stories

Related Stories