முரசொலி தலையங்கம்

“ஜெயலலிதா துதிபாட அமித்ஷா தொடங்க இதுதான் காரணம்? ” - பாஜகவின் உண்மையை போட்டுடைத்த முரசொலி !

ஜெயலலிதா துதிபாட அமித்ஷா தொடங்க என்ன காரணம்? அ.தி.மு.க.வை வைத்து டெபாசிட் வாங்கலாமா என்ற நப்பாசை தான்.

“ஜெயலலிதா துதிபாட அமித்ஷா தொடங்க இதுதான் காரணம்? ” - பாஜகவின் உண்மையை போட்டுடைத்த முரசொலி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
KL Reshma
Updated on

ஜெயலலிதாவும் பா.ஜ.க.வும்

ஜெயலலிதாவின் கனவுகளை நிறைவேற்றப் போவதாகவும், அவரது காலத் திட்டங்களைத் தொடரப் போவதாகவும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள், ராமேஸ்வரத்தில் உறுதி எடுத்திருக்கிறார். பாவம், அவர்களுக்கு அடையாளம் காட்ட சொந்தக் கட்சியில் யாருமில்லாத வறட்சியின் வெளிப்பாடு இது.

* பா.ஜ.க.வுக்கு தந்து வந்த ஆதரவை ஜெயலலிதா வாபஸ் வாங்கிய அன்று, 'இன்று இரவுதான் நான் நிம்மதியாக தூங்கப் போகிறேன்" என்றவர் வாஜ்பாய்.

* 'அத்வானிக்கு செலக்டிவ் அம்னீஷியா' என்று சொன்னவர் ஜெயலலிதா.

* 'மோடியா, இந்த லேடியா?' என்று கேட்டவர் ஜெயலலிதா. இதையெல்லாம் மறந்து விட்டு ஜெயலலிதா துதிபாட அமித்ஷா தொடங்க என்ன காரணம்? அ.தி.மு.க.வை வைத்து டெபாசிட் வாங்கலாமா என்ற நப்பாசை தான்.

* இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி ஜெயலலிதா ஆட்சி தான்“ என்று 2016 ஆம் ஆண்டு சொன்ன அதே நாக்குதான், இன்று ஜெயலலிதாவின் திட்டங்களை நாங்கள் தொடருவோம் என்றும் சொல்கிறது.

2016 ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னதாக இங்கே பரப்புரை செய்ய வந்த அமித்ஷா. அ.தி.மு.க. ஆட்சியை அகற்ற வேண்டும் என்று பேசினார். திருச்சியில் பேசிய அமித்ஷா, ஜெயலலிதாவை கடுமையாகத் தாக்கினார். "இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த அரசாங்கம் ஜெயலலிதாவின் அரசாங்கம்தான் என்றார். "மே 16 ஆம் தேதி நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க. ஆட்சியை அகற்றுங்கள் என்று மக்களைக் கேட்டுக் கொள்கிறேன்" என்று பேசினார்.

“ஜெயலலிதா துதிபாட அமித்ஷா தொடங்க இதுதான் காரணம்? ” - பாஜகவின் உண்மையை போட்டுடைத்த முரசொலி !

மின்துறை அமைச்சர் பியூஷ் கோயல் உட்பட மூன்று மத்திய அமைச்சர்கள் கலந்து கொண்ட செய்தியாளர் கூட்டத்தில் உரையாற்றிய அவர், *கடனில் சிக்கித் தவிக்கும் மாநில மின் விநியோக நிறுவனங்களுக்கு உதவும் நோக்கில் 'உதய்' உள்ளிட்ட மத்திய திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அரசு ஒத்துழைக்கவில்லை என்றும் குற்றம்சாட்டினார். அப்போது அருகில் இருந்த அமைச்சர் பியூஸ் கோயல், 'ஜெயலலிதா, யாராலும் அணுக முடியாத முதலமைச்சராக இருந்தார்' என்று சொன்னார்.

"அ.தி.மு.க. அரசு, தமிழகத்துக்காக மத்திய அரசு அறிவித்த பல்வேறு திட்டங்களை நிராகரித்தும், செயல்படுத்தாமலும் கிடப்பில் போட்டுள்ளது. இதனால், தமிழகம் வளர்ச்சி காணாமல் ஊழல் மலிந்து காணப்படுகிறது. இந்த நிலையை மாற்ற வேண்டும்" என்று பட்டுக்கோட்டையில் பேசினார் அமித்ஷா,

இந்தியாவின் மிகவும் ஊழல் நிறைந்த ஜெயலலிதாவின் அரசாங்கத்தை மக்கள் மாற்றி, பா.ஜ.க.வுக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும்” என்று, தான் போகும் இடமெல்லாம் பேசினார்.

ஜெயலலிதாவை மட்டுமல்ல. இன்றைக்கு இருக்கிறாரே பழனிசாமி. அவர் ஆண்ட போதும், 'நாட்டிலேயே ஊழல் மிகுந்த ஆட்சி, தமிழ்நாட்டில் தான் நடக்கிறது" என்று பேசியவர் அமித்ஷா. 09.07.2018 - அன்று திருச்சியில் பேட்டி அளிக்கும் போது இப்படிக் குறிப்பிட்டார்.

"அ.தி.மு.க. தலைவர்கள் மீது நீதிமன்றங்களில் வழக்குகள் உள்ளன. அவை அரசியல் வழக்குகள் அல்ல. ஊழல் வழக்குகள். இவர்கள் ஆட்சிக்கு வரும் போதெல்லாம் ஊழல் செய்துள்ளனர். சொத்துக் குவிப்பு வழக்கு இருக்கிறது. இந்த ஊழல் காரணமாக தமிழ்நாடு வளர்ச்சி அடையவில்லை. அ.தி.மு.க. அரசின் ஒத்துழைப்பு இல்லாததால் மத்திய அரசின் திட்டங்கள் தமிழக மக்களைச் சென்று சேரவில்லை. எய்ம்ஸ் மருத்துவமனை அமைப்பதில் கூட தமிழ்நாடு அரசு காலதாமதம் செய்கிறது” என்றெல்லாம் பேட்டி அளித்தவர்தான் இந்த அமித்ஷா. இப்போது ஜெயலலிதாவின் 'வாரிசாக' தன்னைக் காட்டிக் கொள்கிறார்.

“ஜெயலலிதா துதிபாட அமித்ஷா தொடங்க இதுதான் காரணம்? ” - பாஜகவின் உண்மையை போட்டுடைத்த முரசொலி !

இன்றைக்கு யாருடைய பாத யாத்திரையைத் தொடங்கி வைக்க அமித்ஷா வந்திருக்கிறாரோ, அதே அண்ணாமலையிடம் கேட்டால் தெரியுமே ஜெயலலிதாவைப் பற்றி. “1991-96 ஆண்டுகளில் தமிழ்நாட்டை ஆட்சி செய்தவர் ஜெயலலிதா. அவரது ஆட்சிகாலம் ஊழலில் மிக மோசமான காலக்கட்டமாக இருந்ததா?" என்று ஒரு ஆங்கிலப் பத்திரிக்கை கேட்கிறது. அப்போது அண்ணாமலை, “தமிழகத்தில் பல நிர்வாகங்கள் ஊழல் மலிந்தன. முன்னாள் முதல்வர்கள் நீதிமன்றங்களில் தண்டனை பெற்றுள்ளனர். அதனால்தான் தமிழகம் ஊழல் மிகுந்த மாநிலமாக மாறியுள்ளது. ஊழலில் நம்பர் ஒன் என்று சொல்வேன்," என்றார்.

ஊழல் வழக்கில் தண்டனை பெற்று சிறைக்குப் போனவர் - பதவியை இழந்தவர் ஜெயலலிதா மட்டும்தான். அவரது பெயரைச் சொல்லாமல் சொல்லி இருந்தார் அண்ணாமலை. இந்தப் பேட்டிக்கு எதிராக அ.தி.மு.க. கொந்தளித்ததே. அ.தி.மு.க. நிர்வாகிகள் கூட்டத்தில் கண்டனத் தீர்மானம் போடப்பட்டதே. இதுவாவது உள்துறை அமைச்சருக்குத் தெரியுமா?

அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி மிக முக்கியமானது. "கர்நாடக மாநில பா.ஜ.க. தேர்தல் பொறுப்பாளராக அண்ணாமலை சென்றார். அங்கு பா.ஜ.க. தோற்றது. இதுவரை எந்த அரசும் 40 சதவீத கமிஷன் வாங்கியதில்லை. ஆனால், கர்நாடக பா.ஜ.க. அரசு வாங்கியது. ஊழல் பற்றி பேசும் அண்ணாமலை. கர்நாடக பா.ஜ.க. அரசின் ஊழல் பற்றியும் பேச வேண்டியதுதானே? ஏறத்தாழ 20 ஆண்டுகளுக்குப் பிறகு பா.ஜ.க. எம்.எல்.ஏ.-க்கள் சட்டப்பேரவைக்குச் செல்ல அ.தி.மு.க.தானே காரணம்? அதை அண்ணாமலை மறுப்பாரா?" என்று கேட்டார் ஜெயக்குமார்.

பெங்களூரு நீதிமன்றத்தில் நான்காண்டு சிறைத்தண்டனையும் - 100 கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்ட ஜெயலலிதாவின் புகழை பா.ஜ.க. பாடுவதும் - '40 சதவிகித கமிஷன் பா.ஜ.க. அரசு' என்று அ.தி.மு.க.வால் குற்றம் சாட்டப்பட்ட பா.ஜ.க.வை அ.தி.மு.க. ஆதரிப்பதும் அவர்கள் இப்போது உருவாக்கி இருப்பது ஊழல் கூட்டணி என்பதையே காட்டுகிறது.

banner

Related Stories

Related Stories