முரசொலி தலையங்கம்

உண்மையை மறைத்து பொய் பேசும் மணிப்பூர் முதல்வருக்கு மனச்சாட்சி இருக்கிறதா?.. முரசொலி சரமாரி கேள்வி!

நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்து, பல்லாயிரக்கணக்கில் முகாமில் தங்கி இருக்கும் கொடூரம் நடந்த - நடந்து கொண்டிருக்கும் மாநிலம் மணிப்பூர்

உண்மையை மறைத்து பொய் பேசும் மணிப்பூர் முதல்வருக்கு மனச்சாட்சி இருக்கிறதா?.. முரசொலி சரமாரி கேள்வி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (29-07-2023)

மணிப்பூர் முதல்வருக்கு மனச்சாட்சி இருக்கிறதா?

மணிப்பூர் முதலமைச்சர் பிரேன் சிங் பேட்டியை ஒரு தமிழ் நாளிதழ் தலைப்புச் செய்தியாக வெளியிட்டு இருக்கிறது. ஒருவேளை அது, 'மணிப்பூர் பதிப்போ' என்று சந்தேகப்பட வைத்தது. பிரேன் சிங், புகழ்பாடும் இரண்டு பக்கச் செய்தியின் உள்நோக்கம் என்ன என்பதை நாம் ஆராயத் தேவையில்லை. அவர் சொன்னதை மட்டும் ஆராய்வோம்.

நூற்றுக்கணக்கில் கொல்லப்பட்டு, பல்லாயிரக்கணக்கில் இடம் பெயர்ந்து, பல்லாயிரக்கணக்கில் முகாமில் தங்கி இருக்கும் கொடூரம் நடந்த - நடந்து கொண்டிருக்கும் மாநிலம் மணிப்பூர். அந்த மாநிலத்தின் முதலமைச்சராக இருப்பவர் பா.ஜ.க.வைச் சேர்ந்த பிரேன் சிங். குக்கி இனப் பெண்களை ஆடை களைந்து ஒரு கும்பல் இழுத்து வரும் காட்சி சமூக வலைதளங்களில் பரவிய பிறகு, 'இது போல நிறைய நடந்துள்ளதே' என்று சொன்னவர்தான் இந்த பிரேன் சிங்.

மே 4 ஆம் தேதி இந்தக் கொடூரச் சம்பவம் நடந்தது என்று சொல்கிறார் முதலமைச்சர். 'இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவிய பிறகுதான் இந்தச் சம்பவத்தின் கொடூரம் வெளிச்சத்துக்கு வந்தது. வீடியோ வந்த பிறகுதான் 6 பேரைக் கைது செய்தோம்' என்கிறார்.

மே மாதம் 4 ஆம் தேதி நடந்த கொடூரத்துக்குக் காரணமானவர்களை சூலை மாதம் 18 ஆம் தேதிக்கு மேல்தான் கைது செய்கிறார் முதலமைச்சர். இதுதான் அவர் ஆட்சி நடத்தும் லட்சணம். இவரது பேட்டி தான் இரண்டு பக்கத்துக்கு வெளியாகி இருக்கிறது. 'வீடியோவில் உள்ள பெண்கள் அனுபவித்த துயரங்களைக் கற்பனை செய்வதுகூட கடினம்' என்கிறார் பிரேன் சிங்.

உண்மையை மறைத்து பொய் பேசும் மணிப்பூர் முதல்வருக்கு மனச்சாட்சி இருக்கிறதா?.. முரசொலி சரமாரி கேள்வி!

உண்மையில்அவர் எப்படி நடந்துகொண்டார்? மணிப்பூரில் பாதிக்கப்பட்ட பெண்களைச் சந்திக்க டெல்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் போகப் போவதாகச் சொன்னதும் அவரைத் தடுத்தவர் இந்த பிரேன் சிங். தடையை மீறி கடந்த 23 ஆம் தேதி மணிப்பூர் தலைநகர் இம்பால் சென்றார் ஸ்வாதி. பாதிக்கப்பட்ட பெண், இவரைக் கட்டி அணைத்துக் கதறும் காட்சிகள் அவரது ட்விட்டர் பக்கத்தில் இருக்கின்றன.

"நிர்வாணமாக பெண்களை அழைத்து வரும் வீடியோ என்னை உலுக்கியது. வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட இரண்டு பெண்களின் குடும்பங்களை நான் சந்தித்தேன். இதுவரை யாரும் அவர்களைச் சந்திக்க வரவில்லை. அவர்களை முதலில் அணுகியது நான் மட்டும்தான். மணிப்பூரில் நிர்வாணமாக அணிவகுத்துச் செல்லப்பட்ட இரண்டு பெண்களுக்கும் அரசிடமிருந்து எந்த ஆதரவும் கிடைக்கவில்லை: இழப்பீடும் வழங்கப்பட வில்லை. அவர்கள் இருவரும் இன்னும் அதிர்ச்சியிலேயே உள்ளனர்.

மணிப்பூரில் நடக்கும் வன்முறை மிகவும் கவலையளிக்கிறது. நான் செல்லும் இடமெல்லாம் மனதை உலுக்கும் சம்பவங்கள்தான் காதில் விழுகின்றன. மக்கள் பலரும் வீடுகளையும் உறவினர்களையும் இழந்துள்ளனர். அவர்களைப் பாதுகாப்பதில் அரசாங்கம் முற்றிலும் தோல்வியடைந்துள்ளது. வீடியோவில் வந்த பாதித்தவர்களைத் தவிர மற்றவர்களையும் சந்தித்தேன். எந்தப் பாதுகாப்பும் இல்லாமல் என்னால் இங்கு வரமுடிகிறபோது, முதல்வரோ, மற்றவர்களோ ஏன் இங்கு இதுவரை வரவில்லை. நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டிருக்கும் பெண்களும் குழந்தைகளும் ஓர் இறுக்கமான சூழ்நிலையிலேயே வாழ்கிறார்கள்” என்று ஸ்வாதி சொல்லி இருக்கிறார். இந்த மணிப்பூர் மாநிலத்தின் முதலமைச்சர்தான் பிரேன் சிங்.

"இன்றுவரை முதலமைச்சர் பிரேன் சிங்கோ அல்லது எந்த கேபினட் அமைச்சரோ அல்லது மூத்த மாநில அரசாங்க அதிகாரியோ அவர்களைச் சந்திக்கவில்லை” என்று அவர்கள் சொல்லி இருக்கிறார்கள். ஆனால் பேட்டியில் கண்ணீர் வடிக்கிறார் முதலமைச்சர்.

மொத்தப் பிரச்சினையையும் மடைமாற்றம் செய்கிறார் முதலமைச்சர். மைத்தி இனத்தவரை, பழங்குடி இனத்தில் சேர்ப்பதால் . தங்களது வாய்ப்புகள் பறிபோகும் என்று நினைக்கும் குக்கி இனத்தவரின் போராட்டம் அது. குக்கி இனத்தவர். மதச் சிறுபான்மையினர் என்பதால் அவர்களைக் காவுவாங்கத் துடிக்கும் பா.ஜ.க.வின் மதவாத அரசியல்தான் மணிப்பூர் கலவரத்துக்குக் காரணம். ஆனால் இதனை மறைத்து, பொய்களைச் சொல்கிறார் முதலமைச்சர் பிரேன் சிங்.

உண்மையை மறைத்து பொய் பேசும் மணிப்பூர் முதல்வருக்கு மனச்சாட்சி இருக்கிறதா?.. முரசொலி சரமாரி கேள்வி!

போதைப் பொருள்களுக்கு எதிராக தான் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், குக்கி இனத்தவர் அதிகம் வசிக்கும் பகுதியில் போதைப் பொருள் அதிகம் விளைவிக்கிறார்கள் என்றும், இந்த நடவடிக்கைக்கு எதிராக குக்கிக்கள் வன்முறை செய்கிறார்கள் என்றும் சொல்கிறார் முதலமைச்சர். மொத்த இனத்தையும் போதைக்குச் சார்பானவர்களாகக் காட்டமுயற்சிக்கிறார். போதைக்கு எதிரான நடவடிக்கை என்பது மணிப்பூரில் இப்போது தொடங்கவில்லை. 2017 ஆம் ஆண்டு தான் ஆட்சிக்கு வந்ததுமுதல் நடப்பதாகவும் இதே பிரேன் சிங் சொல்கிறார். போதை நடவடிக்கைக்கு எதிரான போராட்டம் ஆறு ஆண்டுகளுக்குப் பிறகுதான் ஆரம்பிக்க வேண்டுமா? போதையை ஒழித்து விட்டதாகவும் சொல்கிறார் இவர். போதை ஒழிந்த பிறகு போராடலாம் என்று குக்கி இன மக்கள் காத்திருந்தார்களா?

மியான்மரில் இருந்து சட்டவிரோதமாக வந்து இங்கு குடியேறியவர்களை தான் தடுப்பதாகவும் அதனால் போராடுகிறார்கள் என்றும் சொல்கிறார். இந்த மாதிரியான குடியேற்றமும் காலம் காலமாக நடப்பதுதான். இன்று பெரிது படுத்தப்படும் அளவுக்கும் இதில் பெரிதாக நுழைவுகள் இல்லை.

அதாவது, ஏதாவது காரணம் சொல்லித் தப்பிக்கப் பார்க்கிறார் முதலமைச்சர் பிரேன்சிங். ஏன் தேவாலயங்கள் இடிக்கப்படுகின்றன என்றால். ‘குக்கி இன தேவாலயம்தான் இடிக்கப்பட்டது. நாகாலாந்து இன மக்களின் தேவாலயம் இடிக்கப்படவில்லையே?" என்று கேட்கிறார் முதலமைச்சர். ஏன் அதை விட்டுவைத்துள்ளீர்கள் என்பதைப் போல இருக்கிறது.

அரசியல் சட்டம் பிரிவு 371(c) இன்படி மணிப்பூரின் பழங்குடி மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்பட்டுள்ளது. அதில் பாதகம் ஏற்படுவதாகவும் அதனால் தங்களுக்கு தனி மாநிலம் வேண்டும் என்றும் குக்கி அமைப்பினர் போராடி வந்தார்கள். ஏராளமான குழுக்கள் ஆயுதம் தாங்கிப் போராடினார்கள். இவர்களை அமைதிப்படுத்த 2008 ஆகஸ்ட் 22ஆம் தேதி Suspension of Operations (SoO)

என்ற உடன்படிக்கை எட்டப்பட்டது. ஆயுதக் குழுக்கள் தங்களது போராட்டங்களை நிறுத்தின. இந்த உடன்படிக்கையை மைத்தி இனத்தவர் எதிர்த்தார்கள். கடந்த மார்ச் 10 அன்று அமைச்சரவையைக் கூட்டி SoO உடன்படிக்கையை திரும்பப் பெறுவதாக பிரேன்சிங் அறிவித்தார். இவர் மைத்தி இனத்தைச் சேர்ந்தவர். இதுதான் அடிப்படையான மோதலுக்குக் காரணம். இதனை மறைத்து ஏதேதோ பேட்டி தந்து கொண்டிருக்கிறார் முதலமைச்சர் பிரேன்சிங்.

குக்கி இன மக்கள் தனி மாநிலம் கேட்கிறார்கள். தங்களுக்கு தனி கவுன்சில் கேட்கிறார்கள். இது பற்றி எல்லாம் அந்தப் பத்திரிக்கையும் கேட்கவில்லை. அவரும் பதில் சொல்லவில்லை!

banner

Related Stories

Related Stories