முரசொலி தலையங்கம்

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது: முதலமைச்சரின் அழுத்தத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் உருவாக்கிய ஒரே ரத்தம் என்ற கொள்கை உணர்வுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியை வழிநடத்துகிறது.

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது: முதலமைச்சரின் அழுத்தத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி தலையங்கம் (28-07-2023)

அண்ணல் அம்பேத்கரும் அரசின் சாதனையும்!

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டை சென்னை உயர்நீதிமன்றம் ஏற்றுக் கொண்டிருக்கிறது. இது தமிழ்நாடு அரசின் அழுத்தத்துக்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும்.

நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படும் என்ற செய்தி பரவியது. இதனை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் கடுமையாகக் கண்டித்தார்கள். பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் கண்டனம் தெரிவித்தன. கண்டிப்பதோடு கடமை முடிந்துவிடுவதாக முதலமைச்சர் அவர்கள் நினைக்கவில்லை. உடனடியாக சட்டத்துறை அமைச்சர் எஸ்.ரகுபதிக்கு ஒரு உத்தரவை முதலமைச்சர் அவர்கள் பிறப்பித்தார்கள்.

முதலமைச்சர் கேட்டுக் கொண்டதன்படி, சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் விஜயகுமார் கங்காபூர்வாலா அவர்களைத் தமிழ்நாடு அரசின் சட்ட அமைச்சர் சந்தித்தார். 'நீதிமன்றங்களில் அண்ணல் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படக்கூடாது' என்ற தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டினை மாண்புமிகு சட்டத் துறை அமைச்சர் அவர்கள் கடிதமாகவே நீதியரசரிடம் வழங்கினார். தமிழ்நாடு அரசின் நிலைப்பாட்டைக் கேட்டறிந்த தலைமை நீதிபதி அவர்கள், 'நீதிமன்றங்களில் எந்தத் தலைவர்களின் புகைப்படத்தையும் அகற்ற உத்தரவிடப்படவில்லை. தற்போது உள்ள நடைமுறையே தொடரும் (Status Quo to be continued)' என்று தெரிவித்தார். இத்தகவல் வழக்கறிஞர் மன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. திராவிட மாடல் அரசின் அமைதியான சாதனைகளில் இதுவும் ஒன்று.

தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் அறிவித்தது கழக அரசு. இவர்கள் இருவரது சிந்தனைகளையும் அரசின் சார்பில் வெளியிட நிதி ஒதுக்கீடு செய்து, அதற்கான பணிகளை முடுக்கி விட்டுள்ள அரசு திராவிட மாடல் அரசு ஆகும்.

* “டாக்டர் அம்பேத்கருக்குச் சமமாக இந்தியாவில் யாரையும் சொல்ல முடியாது" என்று சொன்னவர் தந்தை பெரியார். அய்யா அவர்கள் இந்தளவுக்கு எந்தத் தலைவரையும் உயர்த்திச் சொன்னது இல்லை.

''நீங்கள் தமிழ்நாட்டுக்கு வந்து எங்களுக்குத் தலைமை வகிக்க வேண்டும்" என்று சிலர் அம்பேத்கரை அழைத்த போது, ''உங்களுக்குத்தான் பெரியார் ராமசாமி இருக்கிறாரே? அவரை வைத்து இயக்கம் நடத்துங்கள்' என்றவர் அம்பேத்கர் அவர்கள். தந்தை பெரியார் அவர்கள்தான் 1929 ஆம் ஆண்டு முதல் அம்பேத்கரைப் பற்றி தனது இதழில் எழுதி இருக்கிறார். அண்ணலின் உரையை 'சாதியை ஒழிக்க வழி' என்ற புத்தகமாக 1936 ஆம் ஆண்டே வெளியிட்டார்கள்.

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது: முதலமைச்சரின் அழுத்தத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

இந்தியா முழுமைக்குமான இயக்கத்தை கட்ட வேண்டும் என்பதற்காக மும்பை சென்று அம்பேத்கரைச் சந்தித்தவர் பெரியார். அப்போது உடன் சென்றவர் பேரறிஞர் அண்ணா. எனவே பெரியார் இயக்கத்துக்கும் அம்பேத்கர் இயக்கத்துக்குமான நட்பு என்பது காலம் காலமாகத் தொடரும் நட்பு ஆகும். இந்தக் கொள்கையை வலியுறுத்தி முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் தீட்டிய 'ஒரே ரத்தம்' திரைப்படத்தில் நந்தகுமாராக நடித்தவர் தான் இன்றைய முதலமைச்சர் அவர்கள்.

1946ஆம் ஆண்டு டிசம்பர் 26 ஆம் நாள் மதுரையில் தேவேந்திர குல வேளாளர் சங்கம் சார்பில் நடந்த மாநாட்டில் அம்பேத்கர் அவர்கள் கலந்து கொண்டார்கள். தேக்கம்பட்டி பாலசுந்தரராசு அவர்களின் அழைப்பை ஏற்று கலந்து கொண்டார். அப்போது அம்பேத்கர் அவர்களுக்கு மாபெரும் வரவேற்பு தரப்பட்டது. அந்த வரவேற்பைக் கொடுத்தவர்கள் திராவிட இயக்கத்தின் மாபெரும் தலைவர்களான பட்டிவீரன்பட்டி சௌந்தரபாண்டியனார் அவர்களும், பி.டி.ராஜன் அவர்களும். மதுரை எட்வர்டு அரங்கில் அண்ணல் அவர்கள் உரையாற்றினார்கள். 'ஒடுக்கப்பட்டோர் விடுதலைக்கான களம் தமிழ்நாடு' என்று அப்போது அம்பேத்கர் அவர்கள் குறிப்பிட்டார்கள். அத்தகைய களமாக இன்று வரை தமிழ்நாடு இருக்கிறது. அத்தகைய களமாக தமிழ்நாட்டை வைத்திருக்கும் பெருமை திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு உண்டு.

அண்ணல் அம்பேத்கரின் பெயரை மரத்வாடா பல்கலைக் கழகத்துக்கு வைக்க முயற்சிகள் மேற்கொண்ட போது அங்கே சிலர் எதிர்ப்புத் தெரிவித்தார்கள். அந்த மாநில அரசு அதனை கிடப்பில் போட்டது. வன்முறைகள் ஏற்பட்டன. அம்பேத்கர் அவர்கள் பிறந்த மராட்டிய மாநிலத்தில் இந்த நிலைமை இருந்தது. மரத்வாடா பல்கலைக் கழகத்துக்கு அம்பேத்கர் பெயரைச் சூட்ட வேண்டும் என்று தமிழ்நாட்டில் இருந்து தந்தி அனுப்ப வேண்டும் என்று கட்டளையிட்டார் தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள். பல்லாயிரக்கணக்கான தந்திகள் போனது. அந்த மாநில ஆளுநராக இருந்த அலெக்சாண்டர் அவர்களும் முதலமைச்சர் சரத்பவார் அவர்களும் கலைஞருக்கு பதில் அனுப்பினார்கள். “அம்பேத்கர் பெயரைச் சூட்டுவோம்” என்று அறிவித்தார்கள். இதனை நாம் செய்தாக வேண்டும் என்று முடிவெடுத்த கலைஞர் அவர்கள், 1989 ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், சென்னை சட்டக் கல்லூரிக்கு, “டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி” என்று பெயர் சூட்டினார். 1997 ஆம் ஆண்டு சென்னையில் டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகம் உருவாக்கிய வரும் கலைஞர்தான்.

நீதிமன்றங்களில் அம்பேத்கர் புகைப்படம் அகற்றப்படாது: முதலமைச்சரின் அழுத்தத்திற்கு கிடைத்த மாபெரும் வெற்றி!

மாநில அளவிலான உயர்நிலை விழிப்புணர்வு மற்றும் கண்காணிப்புக்குழு உறுப்பினர்களின் கூட்டம் நடந்தது. அண்ணல் அம்பேத்கர் பிறந்தநாளான ஏப்ரல் 14ஆம் தேதியை ‘சமத்துவ நாள்’ என்று கொண்டாட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டது. உடனடியாக, மறுநாளே இதற்கான அறிவிப்பை முதலமைச்சர் அவர்கள் செய்தார்கள்.

' அண்ணல் அம்பேத்கர் மணிமண்டபத்தில் அண்ணலுடைய முழுஅளவு வெண்கலச்சிலை நிறுவப்பட வேண்டும்' என்ற கோரிக்கையை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவர் முனைவர் தொல்.திருமாவளவன் முன்வைத்தார். இந்தக் கோரிக்கையையும் ஏற்று அண்ணல் அம்பேத்கர் மணி மண்டபத்தில் முழுஉருவ வெண்கலச்சிலை நிறுவப்பட்டு விட்டது. அதனை முதலமைச்சர் அவர்களும் திறந்து வைத்தார்கள். திராவிட முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச் செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா அவர்கள், அண்ணல் அம்பேத்கருடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்களை தமிழில் வாசிக்க வாய்ப்பாக மொழிபெயர்த்துப் புதுப்பிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார். அந்தக் கோரிக்கையையும் ஏற்றுக்கொள்ளப்பட்டு “தமிழக அரசால் அண்ணலுடைய தேர்ந்தெடுக்கப்பட்ட நூல்கள் செம் பதிப்பாக தமிழில் வெளியிடப்படும்” என்று அறிவிப்புச் செய்துள்ளார் முதலமைச்சர்.

பெரியாரும் அண்ணாவும் கலைஞரும் உருவாக்கிய ஒரே ரத்தம் என்ற கொள்கை உணர்வுதான் இந்த திராவிட மாடல் ஆட்சியை வழிநடத்துகிறது. இவைதான் முதலமைச்சரை வழிநடத்துகிறது. அதனால்தான் நேரடியாக சென்னை உயர்நீதிமன்றத்தின் நீதிபதியைப் போய், அமைச்சரை அனுப்பி பார்க்க வைக்கிறார் முதலமைச்சர் அவர்கள். அண்ணலுக்குத் தடை என்று அறிவிக்கப்பட்ட இரண்டு நாளில், தடையில்லை என்பதைச் சொல்ல வைக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர். இவை வரலாற்றில் பதிவாக வேண்டிய சாதனையாகும்.

banner

Related Stories

Related Stories