முரசொலி தலையங்கம்

பா.ஜ.கவின் வெறுப்பரசியலை வேரறுக்க இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி: முரசொலி!

‘தேசத்தைக் காப்போம்’ என்று புறப்படுகிறார் ராகுல்காந்தி. காலம் சிலரது கைகளில் தனது கடமையை ஒப்படைக்கிறது.

பா.ஜ.கவின் வெறுப்பரசியலை வேரறுக்க இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி: முரசொலி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய (செப்.09, 2022) தலையங்கம் வருமாறு:

குமரி முனையில் இருந்து தனது பயணத்தைத் தொடங்கி இருக்கிறார் ராகுல்காந்தி. ‘இந்திய ஒற்றுமைப் பயணம்’ என்று இதற்குப் பெயர் சூட்டி இருக்கிறார் ராகுல்காந்தி. இந்திய தேசியக் கொடியை ராகுல்காந்தியின் கையில் கொடுத்து இந்திய ஒற்றுமைப் பயணத்தைத் தொடங்கி வைத்திருக்கிறார் தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.

வானுயர் வள்ளுவனை வணங்கி - மனிதாபிமான மிகு காந்தியை வணங்கி -தனது பயணத்தை ராகுல் காந்தி தொடங்கி இருக்கிறார். இந்தியாவுக்கு இன்றைய தேவை ஒற்றுமையே. அதனால்தான் அதனை வலியுறுத்தி இந்தப் பயணத்தை ராகுல் தொடங்கி இருக்கிறார். இந்தியாவை இதுவரை காத்தது ஒற்றுமையே. பல்வேறு மதம், -மொழி, இனம், -பண்பாடு, -பழக்க வழக்கம் உள்ள மக்கள் வாழும் நாடு இந்தியா. இதற்கு சுதந்திரம் தரப்பட்டபோது இவர்கள் மிக நீண்ட காலம் ஒன்றாக இருக்க மாட்டார்கள் என்று பிரிட்டிஷ் இதழ்கள் எழுதின. ‘ஓராண்டோ, இரண்டு ஆண்டோ தான் ஒன்றாக இருப்பார்கள்’ என்று நாள் குறித்தன. ஆனால் எழுபத்தைந்து ஆண்டுகளைக் கடந்து இந்தியா ஒன்றாக இருக்கிறது. இதனை உருவாக்கிய சக்தி என்பது ஒற்றுமைக்குத்தான் இருக்கிறது.

பா.ஜ.கவின் வெறுப்பரசியலை வேரறுக்க இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி: முரசொலி!

‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்று இதனை நமது முன்னோர்கள் அடையாளப்படுத்தினார்கள். அனைவரும் ஒற்றுமையாக வாழ,- அனைத்து வேற்றுமைகளையும் துடைத்தெறிய வேண்டும் என்பது இல்லை. இந்த வேற்றுமைகளை மதித்தே மரியாதை தந்தே- ஒருவருக்கொருவர் ஒற்றுமையாக இருக்கலாம் என்று நமக்குக் கற்றுத் தரப்பட்டது.

இத்தகைய குணத்தை இயல்பாகவும் பெற்றிருந்தோம். இந்திய விடுதலைப் போராட்டமும், அதன் தலைவர்களும் இதனைக் கற்பித்தார்கள். அத்தகைய ஒற்றுமையே, பிரிட்டிஷ் ஆட்சியை வீழ்த்தி நம்மை நாமே ஆளும் சூழ்நிலையையும் உருவாக்கிக் கொடுத்தது. அப்போதும் மதவாத மாயை தலைதூக்கியது. ‘இது உண்மையான போராட்டம் அல்ல, மதத்துக்காக நடத்துவதே உண்மையான போராட்டம்’ என்று மதவாத சந்தர்ப்பவாதிகள் சொல்லிக் கொண்டார்கள். ‘பிரிட்டிஷாரை எதிர்க்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு சக்தியை வீணடிக்க வேண்டாம்’ என்றெல்லாம் சொன்னார்கள். அத்தகைய சக்திகள்தான், இன்றைய தினம் இந்திய நாட்டின் ஒற்றுமையைக் குலைக்கப்பார்க்கிறார்கள்.

ஒற்றை மதம், -ஒற்றை மொழி, -ஒற்றைக் கலாச்சாரம் என்று பேசுகிறார்கள். நாட்டு தேசியம் என்பதை கலாச்சார தேசியமாக மாற்றுகிறார்கள். பல்வேறு கலாச்சாரம் கொண்ட இந்தியர்கள் என்பதை -ஒற்றைக் கலாச்சாரம் கொண்டவர்கள் மட்டுமே இந்தியர்கள்,- மற்றவர்கள் அனைவரும் அந்நியர்கள் என்று காட்ட நினைக்கிறார்கள். இதற்கு எதிராகத்தான் ராகுல்காந்தி தொடர்ந்து பேசி வருகிறார்.

காங்கிரசு என்ற கட்சியின் எல்லையைத் தாண்டியும் ராகுல்காந்தியின் உரைகள் கவனிக்க வேண்டியதாக இருப்பதற்குக் காரணம்- இந்தியாவின் பன்முகத்தன்மையின் குரலாக அவரது குரல் இருக்கிறது. ‘’இந்தியாவில் இரண்டு விதமான பார்வைகள் உண்டு. அதில் ஒன்றுதான் இந்தியா மாநிலங்களின் ஒன்றியம் என்ற பார்வை ஆகும். கூட்டாட்சி என்பது அதன் பொருள் ஆகும். தமிழ்நாட்டில் உள்ள என் சகோதரரிடம் நான் சென்று, உங்களுக்கு என்ன வேண்டும் என்று கேட்பேன். அவர் அவர் தேவையை என்னிடம் சொல்வார். அதேபோல் எனக்குத் தேவையானதைக் கேட்டுப் பெறுவேன். இதுதான் கூட்டாட்சி. இதுதான் இந்தியா” என்று மக்களவையில் சொன்னவர் ராகுல்காந்தி.

பா.ஜ.கவின் வெறுப்பரசியலை வேரறுக்க இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி: முரசொலி!

‘’இந்தியா ஒரே இந்தியாவாக இல்லை. இரண்டாகப் பிரிந்து உள்ளது. ஒரு இந்தியா பணம் படைத்தவர்களுக்காகவும், ஒரு இந்தியா பணம் இல்லாத ஏழைகளுக்காகவும் இருக்கிறது. மக்களாட்சி நடக்க வேண்டிய இந்தியாவில் மன்னராட்சி நடக்கிறது” என்று மக்களவையில் பேசியவர் ராகுல்காந்தி. இதன் ஒவ்வொரு சொற்களும் அழுத்தமானவை. பா.ஜ.க.வும், ஆர்.எஸ்.எஸ். அமைப்பும் இணைந்து இந்த நாட்டைப் பிரிக்கிறார்கள் என்று ராகுல் காந்தி பேசிவருகிறார். இதுவரை காங்கிரஸ் தலைவர்கள் வைக்காத குற்றச்சாட்டு இது. முந்தைய காங்கிரசுத் தலைவர்கள் முன் வைக்காத கருத்துப் பிரச்சாரம் இது.

பா.ஜ.க. கையில் இருந்து காங்கிரசு கட்சியின் கையில் அதிகாரம் மாற வேண்டும் என்பதாக இல்லாமல், பா.ஜ.க. விதைக்க நினைக்கும் -விதைத்து வரும் வெறுப்பரசியலை வேரறுப்பதாக ராகுல்காந்தியின் உரைகள் அமைந்துள்ளன.

பா.ஜ.க.வுக்கும், காங்கிரசுக்கும் வேறுபாடு இல்லை என்று சிலர் பொத்தாம் பொதுவாக விமர்சிப்பார்கள். வேறுபாடு உண்டு என்பதைக் காட்டுவதாக ராகுல்காந்தியின் சிந்தனைகள் அமைந்துள்ளன.

‘ 2 இந்தியர்கள்’ என்ற ஹேஷ்டேக்குடன் ஒரு பதிவினை ராகுல்காந்தி வெளியிட்டு இருந்தார். ‘ஒவ்வொரு மணி நேரத்திற்கும் தினசரி கூலிக்கு வேலைச் செய்யும் 5 தொழிலாளர்கள் தற்கொலை செய்து கொள்கின்றனர். ஆனால் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் பிரதமர் மோடியின் விருப்பத்திற்குரிய நண்பர் கணக்கில் ரூ.85 கோடி பணம் சேர்கிறது. சாமானியர்களிடம் இருந்து எடுத்து தனது நண்பர்களை பணக்காரர்களாக ஆக்குவதே பிரதமரின் ஒரே பணியாகும். ஆளும் பா.ஜ. கட்சி இரண்டு இந்தியாவை உருவாக்குகிறது. ஒன்று பணக்காரர்களுக்கானது, மற்றொன்று ஏழைகளுக்கானது. தனது நண்பர்கள் பணக்காரர்களாக மாறுவதற்கு பிரதமர் உதவி செய்கிறார்’ என்று குறிப்பிட்டுள்ளார் ராகுல்காந்தி. இது தேர்தல் - அதிகார அரசியலைத் தாண்டிய குற்றச்சாட்டுகள் ஆகும்.

பா.ஜ.கவின் வெறுப்பரசியலை வேரறுக்க இந்திய ஒற்றுமைப் பயணத்தை தொடங்கி இருக்கும் ராகுல் காந்தி: முரசொலி!

1.வரலாறு காணாத அளவுக்கு ஜி.டி.பி. சரிவு.

2.கடந்த 45 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வேலை வாய்ப்பின்மை.

3.இதுவரை 12 கோடி பேர் வேலை இழப்பு.

4.மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜி.எஸ்.டி. பங்கை ஒன்றிய அரசு வழங்காமல் இருப்பது.

5.தினசரி எண்ணிக்கை அடிப்படையில் கோவிட் -19 பாதிப்புகள் மற்றும் மரணங்களில் இந்தியா உலகிலேயே முதலிடத்தில் இருப்பது.

6.எல்லையில் வெளிநாட்டினரின் அத்துமீறல்.

- ஆகிய ஆறு பகிரங்க குற்றச்சாட்டுகளை இன்றைய ஒன்றிய பா.ஜ.க. அரசு மீது ராகுல்காந்தி வைக்கிறார். இவை இந்தியாவையே வீழ்ச்சி அடைய வைக்கும் என்பதால்தான், ‘தேசத்தைக் காப்போம்’ என்று புறப்படுகிறார் ராகுல்காந்தி. காலம் சிலரது கைகளில் தனது கடமையை ஒப்படைக்கிறது. அப்படித்தான் அமைந்துள்ளது ராகுலின் பயணம்!

banner

Related Stories

Related Stories