முரசொலி தலையங்கம்

இது சமூகநீதித் தத்துவம்.. ‘எது திராவிட மாடல்’ என கேட்கும் அறிவு மொண்ணைகளுக்கு விளக்கம்.. முரசொலி பதிலடி !

தமிழ்ச் சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்தாலும், முடங்கிக் கிடக்கும் மக்களாக இருந்தாலும் அவர்களைக் கைதூக்கி விடுவதுதான் திராவிட மாடல்.

இது சமூகநீதித் தத்துவம்.. ‘எது திராவிட மாடல்’ என கேட்கும் அறிவு மொண்ணைகளுக்கு விளக்கம்.. முரசொலி பதிலடி !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முதலமைச்சர் அவர்கள் தனது கையில் வைத்திருக்கும் மிகமுக்கியமான துறைகளில் ஒன்று, மாற்றுத்திறனாளிகள் துறையாகும்.

எத்தனையோ துறைகள் இருந்தாலும், அந்தத் துறையை ஏன் தன் கையில் வைத்திருக்கிறார் என்பதில் கூட சமூகநீதித் தத்துவம் அடங்கி இருக்கிறது.

தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் ஒருமுறை சொன்னார்கள்; “கூட்டம் கூட்டமாக ஆடுகளை ஓட்டி வரும் பாட்டாளி, ஒரே ஒரு ஆட்டை மட்டும் தனது தோளில் தூக்கி வருவான். அது சரியாக நடக்க முடியாத ஆடாக இருக்கலாம். அப்படி தூக்கி வருவதும், தூக்கிவிடுவதும்தான் இட ஒதுக்கீடு கொள்கை!’’ என்று சொன்னார். அந்த வகையில்தான் மாற்றுத்திறனாளிகள் துறையை முதலமைச்சர் தனது கையில் வைத்துள்ளார்.

நேற்றைய தினம் மட்டும் இரண்டு மிக முக்கியமான அறிவிப்புகளை முதலமைச்சர் அவர்கள் செய்துள்ளார்கள்.

* நேற்றைய தினம் மாநிலக் கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில் முதலமைச்சர் அவர்கள் கலந்து கொண்டார்கள். மொத்தம் 300க்கும் மேற்பட்ட மாற்றுத் திறனாளி மாணவர்கள் அங்கு படிக்கிறார்கள். அவர்களுக்கு மாநிலக் கல்லூரி வளாகத்தில் தங்கும் விடுதி அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளார் முதலமைச்சர் அவர்கள். இந்தியாவிலேயே அரசியல் பட்டப்படிப்பு இருக்கும் கல்லூரி, தமிழகத்தில் உள்ள மாநிலக் கல்லூரி ஆகும். அந்த வகையில் மிகமிக முக்கியமான வாய்ப்பை மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்.

* இரண்டாவதாக, மாற்றுத்திறனாளிகளுக்குத் தடையில்லாத சூழலை உருவாக்குவோருக்கு விருதுகளை அறிவித்துள்ளது தமிழக அரசு. மாற்றுத்திறனாளிகளுக்கு சிறந்த கட்டமைப்புகளை உருவாக்கும் அரசு, தனியார் துறையினருக்கு இது வழங்கப்பட உள்ளது. டிசம்பர் -3 ஆம் நாள் நடக்க இருக்கும் அனைத்து நாடுகள் மாற்றுத் திறனாளிகள் தினத்தில் இந்த விருதுகள் வழங்கப்பட இருக்கின்றன. இது பலரது மனதிலும் சேவைச் சிந்தனையை உருவாக்கும். ஏற்கனவே இதில் ஆர்வம் கொண்டவர்களுக்கு ஊக்கமளிப்பதாகவும் இருக்கும்.

இவை இரண்டும் ஏதோ புதிதாக அறிவிக்கப்படும் அறிவிப்புகள் அல்ல. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் முதலமைச்சராக அமர்ந்தது முதல் மிகமிக உன்னிப்பாக இந்த மாற்றுத்திறனாளிகள் துறையில் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த ஆட்சி அமைந்த போது கொரோனா என்ற பெருந்தொற்று பரவி இருந்தது. மாற்றுத்திறனாளிகள் எந்தவிதச் சிரமமுமில்லாமல் கொரோனா தடுப்பூசி பெறுவதற்கான அனைத்து தடுப்பூசி மையங்களிலும் தனியாக ஒரு பிரிவு உருவாக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளுக்கான தனி வரிசை, சாய்வுதள வசதி, தேவைக்கேற்ப மாற்றுத்திறனாளிகளுக்கென சிறப்புத் தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டது.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகக்கட்டடத்தை முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள். பன்னிரெண்டாம் வகுப்பு துணைத் தேர்வுகளைத் தனித் தேர்வர்களாக எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளி மாணவர்கள் அனைவரும் தேர்வு எழுதுவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டது. அனைவரும் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

உதவி உபகரணங்கள் வேண்டி விண்ணப்பித்துக் காத்திருப்போர் பட்டியலிலுள்ள அனைத்து மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவி உபகரணங்கள் வழங்க ரூ.62.50 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அறிவிப்பு செய்தார் முதலமைச்சர். ரூ.70.76 கோடியில், 37,660 மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளன. 1,228 மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளன. ரூ.360.21 கோடி அளவுக்கு 2,11,505 பயனாளிகளுக்குப் பராமரிப்பு உதவித்தொகை வழங்கப்பட்டது. விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் ஒரு கோடி ரூபாய் மதிப்பீட்டில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலகக் கட்டடம் அமைக்கப்பட உள்ளது.

மாற்றுத்திறனாளிகளுடன் செல்லும் ஒரு உதவியாளர், அரசுப் போக்குவரத்துக் கழகங்களால் இயக்கப்படும் சாதாரணப் பேருந்துகளில் கட்டண மில்லாப் பயணம் மேற்கொள்ள அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

மாற்றுத்திறனாளிகளின் நலனுக்கென நமது நாட்டில் மட்டுமின்றி, உலகிலேயே முன்மாதிரித் திட்டமாக ரூ.1,709 கோடி செலவில் “RIGHTS” என்ற திட்டம் செயல்படுத்தப்பட உள்ளது.

தொழுநோயால் பாதிப்படைந்தவர்களின் மறுவாழ்விற்கான மல்லவாடி அரசு மறுவாழ்வு இல்லத்தில் ரூ.1.65 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டடம் கட்டப்பட உள்ளது.

அண்ணா நூற்றாண்டு நூலகத்தில், நூல் கட்டுநர் மற்றும் நூல் கட்டும் உதவியாளர் பணியிடங்களுக்குப் பார்வை குறைவுடைய 31 நபர்கள் சிறப்பு நேர்வாகப் பணி நியமனம் செய்யப்பட்டு உள்ளார்கள்.

அறநிலையத்துறையின்கீழ் உள்ள திருக்கோயில்கள் மற்றும் திருக்கோயிலுக்குச் சொந்தமான திருமண மண்டபங்களில் மாற்றுத் திறனாளிகளுக்கு இலவச திருமணத் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இப்படி ஏராளமான திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்தகைய விளிம்பு நிலை மக்களின் கண்ணீர் துடைக்கும் அரசாக இருக்கிறது. இதில் பலகோரிக்கைகள், யாராலும் முன் வைக்கப்படாத கோரிக்கைகளாக, தமிழக அரசே முன்முயற்சி எடுத்து அறிவிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன. வாக்கு வங்கி அரசியலைப் பற்றிக் கவலைப்படாமல் செய்யப்படும் சமூகநீதிக் கொள்கையின் நடைமுறைகளாகும் இவை.

எது திராவிட மாடல் என்று கேட்கும் அறிவு மொண்ணைகளுக்கான விளக்கங்கள் இவை. இதுதான் திராவிட மாடல். தமிழ்ச் சமுதாயத்தில் அடக்கி ஒடுக்கப்பட்ட மக்களாக இருந்தாலும், முடங்கிக் கிடக்கும் மக்களாக இருந்தாலும் அவர்களைக் கைதூக்கி விடுவதுதான் திராவிட மாடல். அதனைத்தான் திரும்பத் திரும்ப முதலமைச்சர் அவர்கள் சொல்லிவருகிறார்கள். சொல்லி மட்டுமல்ல, செயல்படுத்தியும் வருகிறார்கள். அந்த செயல்கள் நமது கண்ணுக்கு முன்னால் நிறைவேறி வருவதையும் பார்க்கிறோம். அதனால் பயனடைந்தவர்கள் பாராட்டி வருவதையும் பார்க்கிறோம்.

இத்தகைய பாராட்டுகள் சிலருக்கு எரிச்சல் ஆவதையும் பார்க்கிறோம். நல்லெண்ணம் கொண்டோரின் பாராட்டும் - கெட்ட எண்ணம் கொண்டோரின் தூற்றுதலும் நம் கண் முன்னே தெரிகிறது. அவர்கள் அவர்களுக்குத் தெரிந்த வேலையைப் பார்க்கட்டும், நாம் நம் சேவையை ஆற்றுவோம் என்று பயணப்பட்டுக் கொண்டு இருக்கிறார் முதலமைச்சர் அவர்கள்!

banner

Related Stories

Related Stories