முரசொலி தலையங்கம்

இலங்கை எரிவது யாரால்? எதனால்? இந்த கிளர்ச்சிக்கு யார் காரணம்? - ராஜபக்சேக்களை சாடிய முரசொலி தலையங்கம் !

ராஜபக்சேக்களுக்கு உலக சமுதாயம் தண்டனை வழங்கும் என எதிர்பார்த்த தமிழர்களுக்கு சொந்த நாட்டு சிங்கள மக்களே புரிந்துகொண்டிருக்கிறார்கள் என முரசொலி நாளேடு தலையங்கம் தீட்டியுள்ளது.

இலங்கை எரிவது யாரால்? எதனால்? இந்த கிளர்ச்சிக்கு யார் காரணம்? - ராஜபக்சேக்களை சாடிய முரசொலி தலையங்கம் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

இலங்கை எரிவது யாரால்?

"போரில் தோற்றவர்களைவிட வென்றவர்கள் நிம்மதியாக இருக்க மாட்டார்கள்" என்பது புத்தனின் வாக்கு. புத்தனின் வாக்குதான் பலித்திருக்கிறது. பலரையும் பலிவாங்கி அமைக்கப்பட்ட ராஜபக்ஷேக்களின் ஆட்சியானது இலங்கை மக்களின் உணர்ச்சிப் பிரளயத்தில் உடைந்து நொறுங்கிக் கொண்டு இருக்கிறது.

"இனி எனது அகராதியில் முடியாது என்ற வார்த்தையே இல்லை" என்று 2009ஆம் ஆண்டு சொன்னார் மகிந்த ராஜபக்ஷே. அவரை இனி ஆளவே முடியாது என்று சிங்கள மக்கள் சொல்லிவிட்டார்கள். கொழும்புவில் தனது அலரி மாளிகையில் வாழ முடியாமல் அலறி அடித்துக் கொண்டு வெளியேறி இருக்கிறார் மகிந்த ராஜபக்ஷே.

திரிகோணமலையில் உள்ள கடற்படைத் தளத்தில் குடும்பத்துடன் தஞ்சம் அடைந்துள்ளதாகச் சொல்லப்படுகிறது.

அவரது அதிகாரப்பூர்வ மாளிகையைச் சுற்றிலும் போராட்டக்காரர்கள் சூழ்ந்துள்ளார்கள். அவர்களை போலீசாலும், ராணுவத்தாலும் கட்டுப்படுத்த முடியவில்லை. அவர்களை நோக்கிச் சுடத் தொடங்கினால் சுட்டுக் கொண்டே இருக்க வேண்டியது தான். மக்கள் யாரும் வெளியேறுவதாகத் தெரியவில்லை. தினந்தோறும் கூட்டம் கூட்டமாகக் கொழும்புவில் கூடிக் கொண்டே இருக்கிறார்கள் மக்கள்.

நாளுக்கு நாள் போராட்டம் என்பது அதிகமாகிக் கொண்டே இருக்கிறது. மகிந்த கட்சிக்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்தவர்கள் நடத்தும் போராட்டம் அல்ல இது. அப்படி இருந்தால் தலைவர்கள் வந்து - முன்னிலை வகித்திருப்பார்கள். அப்படித் தலைவர்கள் தலைகளைக் காண முடியவில்லை. மக்கள் - அதிலும் குறிப்பாக சிங்கள மக்கள் - கூட்டம் கூட்டமாகச் சேர்ந்து - இதுவரை யாரை தங்களது மதத்தின் - இனத்தின் தலைவராக நினைத்தார்களோ - அதே மகிந்த ராஜ பக்ஷேவுக்கு எதிராக - போராடிக் கொண்டு இருக்கிறார்கள்.

"மக்கள் தங்களது சுதந்திரத்தை வென்றடைய வேண்டும் என்று நினைக்கும் போது, ஆகாய விமானங்களைக் கல்லெறிந்து வீழ்த்துவார்கள். டாங்கிகளை தங்களது மெலிந்த கைகளால் திருப்புவார்கள்" என்று சொன்னார் கியூபா புரட்சியாளர் பிடல் காஸ்ட்ரோ. அதுதான் இப்போது இலங்கையில் நடந்து கொண்டு இருக்கிறது.

ஒவ்வொரு மனிதனும் தன்னை நம்பியே வீதிகளில் நிற்கிறான். எவை எல்லாம் சில ஆண்டுகளுக்கு முன்புவரை அவர்களது ஆராதனைக்கு உட்பட்டவையாக இருந்ததோ அவை எல்லாம் எரிகின்றன.

மகிந்தாவின் பூர்வீக வீடு எரிகிறது. அவரது கட்சி எம்.பி.க்கள் வீடுகள் எரிகின்றன. அவரது கட்சிப் பிரமுகர்களது வீடு எரிகிறது. நாலா பக்கமும்

தீ வைக்கப்படுகிறது. இவை அனைத்தும் சில நாட்களுக்கு முன்புவரை மகிந்தாவை ஆதரித்துக் கொண்டு இருந்தவர்களால்தான் செய்யப்படுகிறது.

"முன்னை இட்ட தீ

முப்புரத்திலே,

பின்னை இட்ட தீ தென்

இலங்கையில்,

அன்னை இட்ட தீ

அடிவயிற்றில்,

யானும் இட்ட தீ மூள்க

மூள்கவே!"

- என்பது பட்டினத்தார் பாட்டு.

முற்காலத்தில் தன் சிரிப்பினால் சிவபெருமான் திரிபுரங்களை எரித்தார். தென்னிலங்கை பற்றி எரிய அனுமன் தீயிட்டார். என் தாயின் மரணம் எனக்குள் மூட்டிய தீயில் என் அடிவயிறே பற்றி எரிகிறது. அதுபோல் என் தாய்க்காக நான் இடுகிற தீயும் பற்றி எரிவதாகுக - என்கிறது இந்தப் பாடல்.

அதாவது தாய்நாட்டை அரசியலில் - பொருளாதாரத்தில் - சமூகத்தில் சிதைத்தவர்களுக்கு எதிராகத்தான் இலங்கை எரிகிறது இன்று. இந்தக் கிளர்ச்சிக்கு யார் காரணம்? இலங்கை இன்று எரிவது யாரால்? எதனால்?

தனது அரசியல் சர்வாதிகாரத்துக்கு - எதேச்சதிகாரத்துக்கு - மதத்தையும், இனத்தையும் முகமூடிகளாகப் பயன்படுத்திக் கொண்டு நாட்டை ஆட்சி செய்து வந்தவர்களுக்கு எதிரான மக்களின் கிளர்ச்சிதான் அது. தனது தவறுகளை மறைப்பதற்கு மக்களின் மத உணர்வுகளைப் பயன்படுத்திக் கொள்வது எல்லா சர்வாதிகாரிகளின் பாணியாகத்தான் இருக்கிறது. தனது குற்றங்களை மறைப்பதற்காக - தனது எல்லாத் தவறுகளையும் மறைப்பதற்காக நாட்டுக்காகத்தான் இதனைச் செய்கிறோம் என்று ஒற்றை வார்த்தையில் சொல்லிவிடுவார்கள். அந்தப் பொய்மை வெகுகாலம் நீடிப்பது இல்லை.

இதே பத்து ஆண்டுகளுக்குள் ராஜபக்ஷேக்களின் முகமூடியை சிங்களவர்களே கிழித்தெறிந்து விட்டார்கள். தீவிரவாதிகளை அழிக்கிறோம் என்று சொல்லி - தமிழ் மக்களை நோக்கிப் பச்சைப் படுகொலைத் தனத்தை அந்த நாடு 2008ஆம் ஆண்டு செய்தது. வானத்தில் வெடித்து தரையில் பாதிப்பை ஏற்படுத்தும் குண்டுகளை தமிழ் மக்கள் அதிகமாக வசிக்கும் பகுதியில் போட்டு நடத்தப்பட்டன படுகொலைகள்.

உலகில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களான வெள்ளைப் பாஸ்பரஸ், கிளஸ்டர் குண்டுகள், கொத்துக் குண்டுகள் தமிழர்களை நோக்கிப் பயன்படுத்தப்பட்டன. மயக்கக் குண்டுகள் வீசப்பட்டன. போரே நடந்தாலும் - போரியல் நெறிமுறைகளைப் பயன்படுத்த வேண்டும் என்பது பன்னாட்டு விதி ஆகும். ஆனால் எந்தப் போரியல் நெறிமுறையும் இல்லாமல் நடந்த போரை அன்றைய தினம் ராஜபக்ஷேக்கள் நடத்தினார்கள்.

இவற்றுக்கு எல்லாம் உலக சமுதாயம் தண்டனை வழங்கும் என்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். இவற்றுக்கு எல்லாம் ஐக்கிய நாடுகள் அவை ஏதாவது விசாரணை நடத்தி குற்றச்சாட்டு வைக்கும் என்று தமிழர்கள் எதிர்பார்த்தார்கள். ஆனால் மாறாக ‘சிங்கள’ மக்களே இதனைப் புரிந்து கொண்டது. - அதுவும் இவ்வளவு சீக்கிரம் புரிந்து கொண்டதுதான் வரலாறு தருகிற பாடம்.

banner

Related Stories

Related Stories