முரசொலி தலையங்கம்

சமூக நீதிக்கான அகில இந்தியகூட்டமைப்பு.. ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றிய முதல்வர்: முரசொலி தலையங்கம்!

இந்திய அரசும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும்சட்டரீதியாக வழங்க இதோ முதல் - அமைச்சராகக் கிளம்பி இருக்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

சமூக நீதிக்கான அகில இந்தியகூட்டமைப்பு.. ஒடுக்கப்பட்டோர் வாழ்வில் ஒளியேற்றிய முதல்வர்: முரசொலி தலையங்கம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இந்தியாவின் அரசியலமைப்புச் சட்டத்தையே முதன்முதலாக திருத்த வைத்தது சென்னைதான். திராவிட இயக்கம்தான்!

“சமுதாயத்திலும், கல்வியிலும் பிற்படுத்தப்பட்ட எந்தச் சமூகத்தவர்க்கும் செய்யும் சலுகைகளை அரசியல் சட்டத்தின் எந்தப் பிரிவும் தடுக்காது’’ என்பதுதான் அரசியல் அமைப்புச் சட்டத்தில் செய்யப்பட்ட 15(4) என்ற முதலாவது திருத்தம் ஆகும்.

1951 ஆம் ஆண்டு மே மாதம் 29ஆம் நாள் நாடாளுமன்றத்தில் இந்த முதல் திருத்தத்தை அறிமுகம் செய்து வைத்தார் முதல் பிரதமரான ஜவஹர்லால் நேரு அவர்கள். “இப்படி ஒரு அரசியல் சட்டத்தை திருத்தும் சூழலுக்கு அடித்தளம் அமைத்தது, சென்னை மாகாணத்தின் சூழல்கள்தான்’’ என்றார் நேரு. “happening in madras” என்றார்.

தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராசர் ஆகியோர் அதற்கு அடித்தளமாக இருந்தார்கள். தமிழ்நாட்டின் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு மட்டுமல்ல, இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலும் இருக்கும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கான சமூகநீதிப் பாதையை அது திறந்துவிட்டது. அதன்பிறகுதான்

பீகாரிலும், உத்தரப் பிரதேசத்திலும் இடஒதுக்கீடு உரிமைகள் பிற்படுத்தப்பட்ட மக்களுக்குக் கிடைத்தன.

இதோ மீண்டும் ... “happening in madras”

'' i am planning to launch an all India Federation for Social Justice soon” என்று மாபெரும் சமூகநீதிப் பிரகடனத்தைச் செய்துள்ளார், தமிழ்நாடு முதலமைச்சரும் திராவிட முன்னேற்றக் கழகத் தலைவருமானமு.க.ஸ்டாலின் அவர்கள். “சமூக நீதிக்கான அகில இந்தியகூட்டமைப்பை விரைவில் தொடங்கத் திட்டமிட்டுள்ளேன்” என்ற இந்த அறிவிப்பானது, அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வில் ஒளிவிளைக்கை ஏற்படுத்தும் அறிவிப்பு ஆகும்.

சென்னை மாகாணத்தில் 1921ஆம் ஆண்டே வகுப்புரிமை ஆணையைப்பிறப்பித்தது நீதிக் கட்சி ஆட்சி. அத்தகைய சமூகநீதியான ஆட்சியைஇந்தியா முழுமைக்கும் உருவாக்குவதற்கான அடித்தளத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அமைத்துள்ளார்கள்.

பட்டியலின மக்களுக்காக இடஒதுக்கீட்டு உரிமையை அகில இந்திய அளவில் 1943ஆம் ஆண்டு அண்ணல் அம்பேத்கர் அவர்கள் உருவாக்கிக் கொடுத்தார்கள். அதேபோன்றே பிற்படுத்தப்பட்ட மக்களுக்கும் அகில இந்திய அளவிலான இடஒதுக்கீடு தரப்பட வேண்டும் என்ற கோரிக்கை காலம் காலமாக ஒலித்துக் கொண்டு இருந்தது. 1951ஆம் ஆண்டு செய்யப்பட்ட அரசியல் அமைப்புச் சட்டத் திருத்தம், இடஒதுக்கீடுக்குத் தடையில்லை என்று சொன்னாலும், அகில இந்திய இடஒதுக்கீடு உரிமை தரப்படவில்லை.

முதலாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையம் என்ற “காகா காலேக்கர் ஆணையம்’’ அமைக்கப்பட்டாலும் அதன் மூலம் எந்தப் பயனும் இல்லை.

1978 ஆம் ஆண்டு அமைந்த ஜனதா அரசு, பி.பி.மண்டல் தலைமையில் இரண்டாவது பிற்படுத்தப்பட்டோர் ஆணையத்தை அமைத்தது. இந்திய மக்களில் 52 சதவிகிதம் பேர் பிற்படுத்தப்பட்டோர், அவர்களுக்கு அனைத்து கல்வி,வேலை வாய்ப்புகளிலும் இடஒதுக்கீடு தரவேண்டும் என்று பி.பி.மண்டல் ஆணையம் அறிக்கை தந்தது. 50 சதவிகிதத்துக்கு மேல் இடஒதுக்கீடு தரக்கூடாது என உச்சநீதிமன்றத் தீர்ப்பு இருப்பதால் 27 சதவிகிதம் மட்டும் பிற்படுத்தப்பட் டோருக்கு வழங்கலாம் என்றார் மண்டல்.

மத்திய அரசுப் பணிகளிலும், பொதுத் துறை வேலைகளிலும் 27 சதவிகித இடஒதுக்கீட்டை வழங்கும் வரலாற்றுச் சிறப்பு மிக்க செயலை 6.8.1990 அன்று செய்து அதனாலேயே ஆட்சியை இழந்தார் சமூகநீதிக் காவலர் வி.பி.சிங்அவர்கள். இதை எதிர்த்து சிலர் வழக்குப் போட்டார்கள். 1992 ஆம் ஆண்டு11 நீதிபதிகள் கொண்ட உச்சநீதிமன்ற பெஞ்ச் தீர்ப்பு அளித்தது. 5 நீதிபதிகள் எதிர்த்தார்கள். 6 நீதிபதிகள், மண்டல் ஆணையத்தின் உத்தரவை செல்லும் என்று தீர்ப்பு அளித்தார்கள். அதில் ஒருவர்தான் திருநெல்வேலியில் பிறந்து திராவிட இயக்கத்தில் வளர்ந்து - திராவிட முன்னேற்றக் கழகத்தில் மாவட்டச் செயலாளராகவும் இருந்து - பின்னர் நீதித்துறையில் தன்னை ஒப்படைத்துக் கொண்டு உயர்நீதிமன்றத்திலும் - உச்சநீதி மன்றத்திலும் நீதிபதியாக அமர்ந்த நீதியரசர் இரத்தினவேல் பாண்டியன் அவர்கள். இப்படி தமிழ்நாடு தனது பங்களிப்பைச் செலுத்திக் கொண்டேதான் இருந்தது.

இதில் தமிழகத்துக்கு இன்னொரு பெருமை என்ன என்றால் ... சென்னையில் இருக்கும் ஒன்றிய அரசின் அலுவலகங்களில் இடஒதுக்கீடுவேண்டும் என்று 1935ஆம் ஆண்டு முதலமைச்சராக இருந்த நீதிக்கட்சித் தலைவர் பொப்பிலி ராஜா ஒரு அரசாணையை வெளியிட்டார். இது பெரியாரின் கோரிக்கை ஆகும். இந்தக் கோரிக்கையை அன்றைய ஒன்றிய அரசின்கவனத்துக்கு ஆற்காடு ஏ.இராமசாமி அவர்களும், டாக்டர் ஏ.கிருஷ்ணசாமிஅவர்களும் கொண்டு சென்றார்கள். இதன்படி 15.3.1935 அன்று பொப்பிலி அரசர்ஒரு அரசாணையை வெளியிட்டார். பிற்படுத்தப்பட்டவர்களுக்கு மட்டுமல்ல, பட்டியலினத்தவர்கள் அனைவருக்குமான அரசாணை இது. சென்னைமாகாணத்தில் இருக்கும் இந்திய அரசின் பணிகளுக்கும் இடஒதுக்கீடு வழங்கிய ஆட்சி நீதிக்கட்சி ஆட்சி.

இதைத் தொடர்ந்து 1940 திருவாரூர் மாநாட்டில் “பிற்படுத்தப்பட்டவர், பட்டியலினத்தவர் அனைவருக்கும் இந்திய அரசு வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்’’ என்று தந்தை பெரியார் தீர்மானம் நிறைவேற்றினார். இதைத் தொடர்ந்து 1944 ஆம் ஆண்டு உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் நடந்த பிற்படுத்தப்பட்டோர் மாநாட்டில், அனைத்திந்திய பிற்படுத்தப்பட்டோர் பேரவையின் தலைவராக தந்தை பெரியார் தேர்ந்தெடுக்கப்பட்டார். அகில இந்தியாவின் பல்வேறு மாநிலங்களுக்கும் சமூகநீதித் தத்துவம் அதன் மூலம் பரவியது.

அன்று திருவாரூரில் தொடங்கிய சமூகநீதிப் புயல் இன்றும் - திருவாரூர் மண்ணின் மைந்தரான முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் முன்னெடுக்கப்படுகிறது. இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கியுள்ளஉரிமையை, இந்திய அரசும், இந்தியாவின் அனைத்து மாநிலங்களும் சட்டரீதியாக வழங்க இதோ முதல் - அமைச்சராகக் கிளம்பி இருக்கிறார் மு.க.ஸ்டாலின் அவர்கள்!

“happenings in madras"

banner

Related Stories

Related Stories