முரசொலி தலையங்கம்

“நம்பிக்கையைத் தரும் ஆணையம்.. சமத்துவப் போராளியாகச் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி புகழாரம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையைத் தரும் ஆணையமாக அமைந்துள்ளது.

“நம்பிக்கையைத் தரும் ஆணையம்.. சமத்துவப் போராளியாகச் செயல்படும் முதல்வர் மு.க.ஸ்டாலின்”: முரசொலி புகழாரம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

முரசொலி நாளேட்டின் இன்றைய தலையங்கம் (18-10-2021) வருமாறு:

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களால் அமைக்கப்பட்டுள்ள ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் என்பது மிகப்பெரிய நம்பிக்கையைத் தரும் ஆணையமாக அமைந்துள்ளது.

“தமிழ்நாடு ஆதி திராவிடர், பழங்குடியினர் நல ஆணையம் என்ற புதிய அமைப்பு, தன்னாட்சி அதிகாரத்துடன் செயல்படும் வகையில் அமைக்கப்படும். அதற்கான சட்ட முன்வடிவு வரைவு, இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்யப்படும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் சட்டமன்றத்திலேயே கடந்த செப்டம்பர் மாதம் அறிவித்தார்கள்.

வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பதியப்பட்டுள்ள வழக்குகளை, விரைவாக இறுதி செய்ய, தற்சமயம் தமிழகத்தில், 18 சிறப்பு நீதிமன்றங்கள் இயங்கி வருகின்றன. மேலும், நான்கு புதிய நீதிமன்றங்கள் அமைக்க, ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன. இது தவிர, சேலம், கிருஷ்ணகிரி, மதுரை, திருநெல்வேலி என, வழக்குகள் அதிகம் நிலுவை யில் உள்ள மாவட்டங்களில், கூடுதல் நீதிமன்றங்கள் அமைக்கப்படும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோரை, சமுதாயக் கண்ணோட்டத்துடன் அணுகி, முறையான நிவாரணம், வளமான எதிர்காலத்திற்கான உத்தரவாதம் ஆகியவற்றை வழங்கதேவையான, விழிப்புணர்வுப் பயிற்சிகள், ‘சமத்துவம் காண்போம்' என்ற தலைப்பில், காவல்துறை, வருவாய் துறை அலுவலர்களுக்கு நடத்தப்படும்.

தமிழகத்தில், பல கிராமங்களில், ஜாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ளன. இறுதிப் பயணத்திலும் பிரிவினைகள் இருக்கக் கூடாது என்பதில், மற்றவர்களுக்கு முன் மாதிரியாக விளங்கும் சிற்றூர்களுக்கு ஊக்கத் தொகையாக, வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்த, அரசு சார்பில், 10 லட்சம் ரூபாய் பரிசுத் தொகை வழங்கப்படும்.

வன்கொடுமையால் பாதிக்கப்பட்டோருக்கு, வழக்கின் தன்மைக்கேற்றவாறு, 85 ஆயிரம் ரூபாயில் இருந்து, 8.25 லட்சம் ரூபாய் வரை, தற்சமயம் வழங்கப்பட்டு வருகிறது. இனி இத்தொகை குறைந்த பட்சம், 1 லட்சம் ரூபாய்; அதிகபட்சமாக, 12 லட்சம் ரூபாய், மாநில அரசு நிதி வழியே உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் அறிவித்தார்கள். அனைத்துத் தரப்பினர் பிரச்சினையையும் அணுகும் அரசாக இந்த அரசு நம்பிக்கையைக் கொடுத்தது.

கடந்த அ.தி.மு.க ஆட்சியில் ஏழு ஆண்டுகளாக விதி 16 (2), தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர் (வன்கொடுமைகள்) தடுப்பு விதிகள் 1995, படிகூட்டப்பட வேண்டிய மாநில அளவிலான விழிப்புணர்வுக் கூட்டம் நடைபெறாமல் இருந்தது. 2013 ஆம் ஆண்டு மட்டும் ஒரு முறை நடந்தது. 16(2) விதியின்படி மேற்படி மாநில விழிப்புணர்வுக் கமிட்டிக் கூட்டம் ஆண்டுக்கு இருமுறை நடத்தப்பட வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. அதனையே அ.தி.மு.க ஆட்சியில் நடத்தவில்லை.

பல ஆண்டுகள் இந்தக் கூட்டம் நடக்காமல் இருந்ததைச் சுட்டிக்காட்டி கோவையைச் சேர்ந்த வழக்கறிஞர் என்.பன்னீர்செல்வம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்தார். இந்த வழக்கை எடுத்து நடத்திய வழக்கறிஞர் குமாரதேவன்தான், இன்று ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையத்தின் உறுப்பினராக முதலமைச்சரால் நியமிக்கப்பட்டுள்ளார். இப்படி ஒரு வழக்கு தொடுக்கப்பட்டதும், அவசர அவசரமாக 8.9.2020 அன்று அ.தி.மு.க ஆட்சியில் கூட்டத்தை நடத்தினார்கள். கூட்டத்தை நாங்கள் நடத்திவிட்டோம் என்று நீதிமன்றத்துக்கு தகவல் அளித்தார்கள். அதை ஏற்றுக்கொண்ட உயர்நீதிமன்ற அமர்வு, ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மற்றும் ஜூலை மாதத்தில் மாநில அளவிலான விழிப்புணர்வுக் கூட்டங்கள் நடத்தப்பட வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்தது. ஏற்கனவே இருக்கும் விதியைச் சுட்டிக்காட்டி இந்த உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது.

மே மாதம் ஆட்சி மாற்றம் ஏற்பட்டது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும் இந்த விழிப்புணர்வுக் கூட்டத்தை நடத்தினார்கள் என்பதுதான் குறிப்பிடத்தக்கது. ஏழு ஆண்டு காலமாக நடத்தப்படாத கூட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்தான் முதன்முதலாக நடத்தினார்கள். இக்கூட்டத்திலும் முதலமைச்சரின் பேச்சு, மிகமிக முக்கியமானதாக அமைந்திருந்தது. ஐந்து இலக்குகளை முதலமைச்சர் சுட்டிக் காட்டி னார்கள். கல்வி, வேலைவாய்ப்பில் அம்மக்கள் உரிய இடங்களைப் பெற வேண்டும் என்பது முதலாவது.

சமூக அமைப்பில் அவர்கள் எந்த சூழலிலும் புறக்கணிக்கப்படக் கூடாது என்பது இரண்டாவது. அவர்களது வளர்ச்சி சாதியைக் காரணம் காட்டி தடுக்கப்படக்கூடாது என்பது மூன்றாவது. அரசியல், பொருளாதாரம், கல்வி ஆகிய அனைத்து மட்டத்திலும் அவர்கள் வளர்த்தெடுக்கப்பட வேண்டும் என்பது நான்காவது.

அனைவருக்கும் அனைத்தும் கிடைக்க வேண்டும் என்பது ஐந்தாவது. - இத்தகைய சிந்தனை கொண்ட அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டு வருகிறது என்று அறிவித்தார்கள். “இத்தகைய சூழலில் அங்கொன்றும் இங்கொன்றுமாக நடக்கும் தீண்டாமைச் சம்பவங்களைக் கேள்விப்படும் போது வருத்தம் ஒருபுறம் கோபம் மறுபுறம் ஏற்படுகிறது. கல்வி, பொருளாதாரம், நாகரிகம் வளர்ந்தாலும் ஜாதி, தீண்டாமை, ஏற்றத்தாழ்வு என்பவை அப்படியேதான் இருக்கின்றன. அதில் மாற்றம் செய்ய இன்னும் பல ஆண்டு காலம் கடக்க வேண்டும் என்றே தெரிகிறது. இதனை சட்டத்தின் மூலமாக ஓரளவு சரி செய்ய முடியும். அத்தகைய சட்டங்கள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்” என்பதையும் முதலமைச்சர் அவர்கள் சொன்னார்கள். அந்த அடிப்படையில்தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அரசியல் உரிமை, கல்வி உரிமை, வேலை வாய்ப்பில் உரிமை, அனைத்தையும் பெறும் உரிமை ஆகியவற்றைச் செயல்படுத்திக் காட்டும் ஆணையமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. வரலாற்றில் இது மிக முக்கியமான நகர்வு. ‘ஒரே ரத்தம்' படத்தின் மூலமாக சமத்துவப் போராளியாக நடித்தவர் மட்டுமல்ல, அதிகாரத்துக்கு வந்தாலும் சமத்துவப் போராளியாகச் செயல்படுபவர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் என்பது மீண்டும் ஒருமுறை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories